'சின்ன தல' என்று அன்புடன் அழைக்கப்படும் பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா இப்போது தனது பெயரில் ஒரு உணவகத்தை தொடங்கியுள்ளார். 


'ரெய்னா இந்தியன் உணவகம்'


பொதுவாகவே சுரேஷ் ரெய்னாவுக்கு கிரிக்கெட்டுக்கு பிறகு பிடித்தது எது என்று கேட்டால் அவர்கள் ரசிகர்கள் அனைவருமே கூறுவது உணவு தான். அவர் எவ்வளவு பெரிய ஃபுடீ என்பதை அவரது இன்ஸ்டாகிராம் பக்கமே சொல்லும். அவ்வபோது எதையாவது சமைப்பது, சாப்பிடுவது போன்ற வீடியோக்களை அவர் அடிக்கடி வெளியிடுவார். இப்போது, சுரேஷ் ரெய்னா ஆம்ஸ்டர்டாமில் தனது முதல் உணவகத்தை திறந்து வைத்து, உணவு மீதான தனது ஆர்வத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார். 'ரெய்னா இந்தியன் உணவகம்' என்று அழைக்கப்படும் இந்த உணவகத்தை திறந்த மகிழ்ச்சியை தனது ரசிகர்களுடன் அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துகொண்டார்.



ஐரோப்பாவில் இந்திய உணவுகள்


சுரேஷ் ரெய்னா, இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஐரோப்பாவிற்கு மிகவும் உண்மையான சுவைகளை கொண்டு செல்ல விரும்புவதாக அந்த பதிவில் எழுதினார். அவரே ஒரு ஆர்வமுள்ள செஃப் என்பது நமக்கு தெரியும், தற்போது உணவு மீதான அவரது ஆர்வத்தை தனது புதிய முயற்சி மூலம் ஐரோப்பாவில் மொழிபெயர்க்க விரும்புகிறார். "வட இந்தியாவின் வளமான மசாலாப் உணவுகளில் இருந்து தென்னிந்தியாவின் நறுமண குழம்புகள் வரை எல்லாவற்றையும் அங்கு அறிமுக படுத்த திட்டமிட்டுள்ள ரெய்னா இதனை இந்திய உணவுகளை ருசித்து சாப்பிடுபவர்களுக்கு சமர்ப்பணம் செய்வதாக மேலும் எழுதினார்.


தொடர்புடைய செய்திகள்: Modi Biden Meeting: ”எதிர்காலம் நாம தான்” - பிரதமர் மோடிக்கு பைடன் தந்த சூப்பர் பரிசு..குஜராத்தில் களமிறங்கும் கூகுள் நிறுவனம்


இன்ஸ்டகிராம் பதிவு


"ரெய்னா உணவகம் உங்களுக்கு கொடுக்க நினைப்பது, உணவு மட்டுமல்ல, நாங்கள் பரிமாறும் ஒவ்வொரு விஷயத்திலும் உள்ள தரம், படைப்பாற்றல் மற்றும் மிகுந்த மகிழ்ச்சிக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றையும் தருகிறோம். இந்திய உணவு வகைகளின் ஆழம் மற்றும் பன்முகத்தன்மையைக் காண்பிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், "என்று அவர் மேலும் எழுதியுள்ளார். சுரேஷ் ரெய்னாவின் புதிய முயற்சிக்கு நெட்டிசன்கள் வாழ்த்துக்களை அள்ளி வீசினர். ஜாம்பவான் சுழல்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், "வாழ்த்துக்கள் தம்பி. நான் அங்கு சாப்பிட வருகிறேன்" என்று எழுதினார். "வாழ்த்துக்கள் பிரதர்" என்று பிராவோ கூறினார்.






வெளிநாட்டில் உணவகம் வைத்திருக்கும் பிரபலங்கள்


வெளிநாட்டில் இந்திய உணவகத்தை வைத்திருக்கும் பிரபலம் சுரேஷ் ரெய்னா மட்டுமல்ல. ஏற்கனவே, நியூயார்க் மற்றும் பர்மிங்காமில் உணவகங்களை வைத்திருக்கும் பிரியங்கா சோப்ரா மற்றும் ஆஷா போஸ்லே போன்றவர்களுடன் தற்போது ரெய்னா இணைந்துள்ளார். இதற்கிடையில், பிரபல கிரிக்கெட் வீரரும், முன்னாள் இந்திய கேப்டனுமான விராட் கோலியும் இந்தியாவில் தனது உணவகங்களை வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.