தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் அமைந்துள்ளது இந்திய உணவுக்கழக சேமிப்பு குடோன். இங்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டு, மாவட்டத்தின் பிறபகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன. குடோனில் சேமித்து வைக்கப்படும் உணவு தானியங்களுக்கு வண்டுகள் மற்றும் பூச்சிகளால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க மருந்து தெளித்து பராமரிப்பது வழக்கம்.முறையாக பராமரிக்கவில்லை என்றால் வண்டுகள், புழுக்களால் தானியங்கள் பாழாகக்கூடும்.
தூத்துக்குடி புறநகர் பகுதியில் முன்பு அமைக்கப்பட்ட இந்த சேமிப்பு குடோன் அருகிலேயே குடியிருப்புகளும் அதிகமாக தற்போது அமைந்து உள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இந்திய உணவுக் கழக குடோனில் இருந்து வண்டுகள் அதிகளவில் வெளியேறுகின்றன. அவை அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுவதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குடோனுக்கு அருகே உள்ள ஆசீர்வாதநகர், இந்திரா நகர், திருவிக நகர், சங்கர் காலனி, தபால் தந்தி காலனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் வண்டுகள் தொல்லையால் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து தூத்துக்குடி தபால் தந்தி காலனி தெற்கு, ஆசீர்வாதநகர் கிழக்கு குடியிருப்போர் நலச்சங்க தலைவர் கே.எஸ்.அர்ச்சுணன் கூறும்போது, இந்திய உணவுக் கழகம் அமைந்துள்ள பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். வெயில் காலம் என்பதால் இந்திய உணவுக் கழக குடோனில் இருந்து வண்டுகள் அதிகளவில் வெளியேறி, அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு வருகின்றன.
வீடுகளில் குடிநீர், உணவு பொருட்கள், படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட இடங்களில் வந்து விழுந்து விடுகின்றன. வண்டு கடியால் சிறு குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். இரவு நேரங்களில் தூங்க முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்வோரின் கண்களில் வண்டுகள் விழுந்து எரிச்சல் ஏற்பட்டு, வாகன விபத்துகளும் ஏற்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் வெயில் காலங்களில் வண்டுகளால் தொல்லை ஏற்பட்டு வருகிறது. இந்திய உணவு கழகக் குடோனில் வண்டுகள் உருவாகாமல் இருப்பதற்கு முறையான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்வதில்லை. இவ்விசயத்தில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.