வித்தியாசமான சைட் டிஷ்ஷை செய்து சாப்பிட நாம் எப்போதுமே விரும்புவோம். காரணம் உணவின் சுவையை கூட்டுவதே சைட் டிஷ்தான். நாம் இப்போது, பராத்தா, சாதம், ரொட்டி ஆகியவற்றுடன் வைத்து சாப்பிட ஒரு சூப்பரான சைடிஷ்தான் தயார் செய்ய போறோம். வாங்க உருளைக்கிழங்கு, கீரை குழம்பு எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கீரை - 1 கட்டு, உருளைக்கிழங்கு - 3 ( மீடியமான அளவு ), தக்காளி- 1 (பொடியாக நறுக்கியது), வெங்காயம் 1- பொடியாக நறுக்கியது, இஞ்சி பூண்டு விழுது, கிராம்பு - 2, பச்சை மிளகாய் - 1, இலவங்கப்பட்டை - 1,வளைகுடா இலை -1, கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், சிவப்பு மிளகாய் தூள் - அரை டீஸ்பூன், தண்ணீர் - 1 கப், கசூரி மேத்தி -அரை ஸ்பூன், எண்ணெய்- தேவையான அளவு, உப்பு- தேவையான அளவு.
செய்முறை
கீரையை நன்கு தண்ணீரில் கழுவி, சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்க வேண்டும்.
வெந்நீரை அடுப்பில் இருந்து இறக்கி, கீரையை சுமார் 5 நிமிடங்களுக்கு வெந்நீரில் மூழ்க வைக்க வேண்டும். பின் தண்ணீரை வடித்து விட்டு, கீரையை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.
கீரையை மீண்டும் ஒருமுறை தண்ணீர் இல்லாமல் நன்றாக வடிகட்டிக்கொள்ள வேண்டும். இப்போது, சிறிது பச்சை மிளகாயை கீரையுடன் சேர்த்து, மிருதுவான அரைத்து கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கை ஓரளவு வேகும் வரை வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பை பற்ற வைத்து, அதில் கடாய் வைத்து, தேவையான அளவு எண்ணெய் சேர்த்து, சூடானதும், வளைகுடா இலை, கிராம்பு மற்றும் இலவங்கப்பட்டை சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து கண்ணாடிப்பதமாக மாறும் வரை வதக்கி கொள்ள வேண்டும்.
இப்போது, இதில் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து கிளறி, பச்சை வாசனை போகும் வரை வதக்கி விட வேண்டும். இப்போது இதில் தக்காளியை சேர்த்து குழைய வதக்கி கொள்ள வேண்டும்.
இதனுடன் மஞ்சள், மிளகாய் தூள் சேர்த்து கிளற வேண்டும். இதனுடன் அரைத்து வைத்துள்ள கீரையை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதனுடன் ஒரு கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கிளற வேண்டும். கீரை நன்றாக வெந்து குழம்பு கெட்டியாகும் வரை வேக விட வேண்டும்.
இப்போது இதில் சிறிதளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். பின்னர் வேகவைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்து 4 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். இப்போது கரம் மசாலா பொடி மற்றும் கசூரி மேத்தி இலையைத் தூவி, ஒரு நிமிடம் வேக விட்டு இறக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான உருளைக்கிழங்கு கீரை குழம்பு தயார்.
மேலும் படிக்க
அசைவமே தோற்றுவிடும்.. அசத்தலான சுவையில் வாழைக்காய் கோலா உருண்டை செய்யலாம்!