உணவுகள் எல்லாமே அதை எதனுடன் சேர்த்து சாப்பிடுகிறோம் என்பதில் வேறுபடுகிறது. ஒவ்வொரு உணவையும் அதற்கான கலவையுடன் சாப்பிட்டால் அதன் சுவை அதிகமாக இருக்கும். நீங்கள் எந்த உணவை சாப்பிட்டாலும், அதை அதற்கேற்ப மயோனஸ், சாஸ், டப்பிங்ஸ், டிப்ஸ், ஊறுகாய் வைத்து சாப்பிடுவது அதன் சுவையை கூட்டும். அதுவும் பொதுவாக வெஸ்டர்ன் உணவுகளான பர்கர், பிட்ஸா போன்ற உணவுகளை சாஸ், கெட்சப், மயோனஸ், சில்லி சாஸ், ஆரிகேனோ போன்றவற்றை வைத்து சாப்பிடுவார்கள்.
வித்தியாசமான காம்போ
இந்திய உணவுகளான தோசை, இட்லி போன்றவை, சட்னி, சாம்பார், துவையல் போன்றவை வைத்து சாப்பிடுவார்கள். தயிர்சாதம் போன்ற உணவுகளுக்கு ஊறுகாய் வைத்து சாப்பிடுவார்கள். ஆனால் இந்த காம்பினேஷன்களின் விதிமுறைகளை உடைத்து வித்தியாசமான காம்பினேஷனுடன் உணவுகளை சாப்பிடுவது சமூக வலைதளங்களில் அவ்வபோது வைரலாகும் விஷயம். சக்கரை பொங்கலுக்கு வடகறி என்பது போல சுத்தமாக ஒத்தே போகாத உணவுகள் பல சமூக ஊடக பயனர்களால் முயற்சி செய்யப்படுவது வழக்கம். அதே போல தற்போது சாண்ட்விச்சை ஒருவர் ஊறுகாய் தொட்டு சாப்பிடும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
வைரலான புகைப்படம்
இந்த பதிவு ட்விட்டரில் halitosis4700 என்ற பயனரால் பகிரப்பட்டது. பகிரப்பட்ட ஒரு சில நாட்களில் 1,70,000 பேரை சென்று அடைந்த இந்த விடியோ ஆயிரக்கணக்கான கமெண்டுகள் மற்றும் லைக்ஸ்களை பெற்றது. படத்தில், ஒரு தட்டில் ஊறுகாய் வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அந்த ட்விட்டர் பயனரின் தாய்தான் இந்த வித்தியாசமான காம்போவை முயற்சி செய்துள்ளார்.
சப்வே சாண்ட்விச்சிற்கு ஊறுகாய்
சப்வே கடையில் வாங்கிய சாண்ட்விச்சை ஊறுகாயில் தொட்டு அவர் சாப்பிடுவது வீடியோவில் தெரிகிறது. "என் அம்மா சாண்ட்விச்சை ஊறுகாவுடன் சாப்பிடுகிறார். இந்திய அம்மாக்களின் சிந்தனையை கண்டு வியக்கிறேன்," என்று அவர் அந்த பதிவின் தலைப்பில் எழுதினார். இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், பல டிவிட்டர் பயனர்கள் இதனை வேடிக்கையாக பார்த்தாலும், பலர் ஊறுகாய் மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்தியுள்ளனர். பலர் கமெண்டுகளில் ஊறுகாயை எதனுடன் வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று ஊறுகாயை குறித்த பார்வையை கூறுகிறார்.
ஊறுகாய் காதலர்கள்
ஒரு சிலர் இதனை பார்த்தபின் சப்வே-யில் ஊறுகாய் சாஸ் அறிமுகப்படுத்த வேண்டும் என்று சிலர் கோரிக்கை வைத்தனர். பலர் ஊறுகாய் மீதான தங்கள் காதலை வெளிப்படுத்தினர். மேலும் சிலர் ஒவ்வொரு அம்மாவும் எப்படி இதனை சாப்பிடுவார்கள் என்பதை பகிர்ந்தனர். ஒருவர் தனது அம்மா அதற்குள் இருக்கும் சாலட் மற்றும் ஸ்டஃப்பிங்களை அகற்றிவிட்டு வெளியில் இருக்கும் 'பன்'னை மட்டும் சாப்பிடுவார் என்று கூறினார்.