மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும் என்பார்கள். மாங்காய் இருந்தால் ஒரு தட்டுச்சோற்றை சாப்பிட்டு விடலாம். வித விதமான அறுசுவைகளில் இருக்கும் கல்யாண விருந்தில் கூட மாங்காய் ஊறுகாய் இல்லாமல் இருக்காது. மாங்காய் விரும்பாதவர்கள் இருக்க முடியாது. மாங்காயில் செய்யும் ஊறுகாய் எந்த சாப்பாட்டிற்கும் சிறந்த சைட்டிங். பழையச்சோறு முதல் பிரியாணி வரை மாங்காய் ஊறுகாய் இருந்தால் போதும். அந்த அளவுக்கு தமிழர்களின் உணவில் மாங்காய்க்கு என தனி இடம் உண்டு. அப்படிப்பட்ட மாங்காய் ஊறுகாய்  செய்யும் முறையை தெரிந்து கொள்வோம். 

மாங்காய் ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள்:


மாங்காய் - 2 அல்லது 3, வெங்தயம் - 5 டேபிள் ஸ்பூன், கடுகு - 4 டேபிள் ஸ்பூன், மிளகாய் தூள் - காரத்திற்கு ஏற்ப, பெருங்காயம் - ஒரு டேபிள் ஸ்பூன், கல் உப்பு - தேவையான அளவு.

மாங்காய் ஊறுகாய் செய்யும் முறை:


மாங்காயை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து, ஒரு மணி நேரம் உலர்த்தி வைக்க வேண்டும். பின்னர் மாங்காய் துண்டுகளில் கல் உப்பை போட்டு நன்றாக குலுக்கி எடுத்து கொள்ள வேண்டும். அதனுடன் வறுத்த வெந்தயம் மற்றும் கடுகை பொடியாக மிக்சியில் அரைத்து எடுத்தும் மாங்காயில் தூவி கிளறி விட வேண்டும். அதனுடன் காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் மற்றும் பெருங்காயப்பொடி கலந்து நன்றாக குலுக்கி வைத்து கொள்ள வேண்டும். 

 

பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து சூடாக எடுத்து மாங்காயில் ஊற்றி நன்றாக கிளறி விட வேண்டும். இந்த மாங்காய் ஊறுகாயை இரண்டு நாட்களுக்கு பிறகு எடுத்து பார்த்தால் எண்ணெய் தனியாக பிரிந்து மாங்காயில் மிளகாய் காரம் இறங்கி சுவையாக இருக்கும்.  இந்த ஊறுகாயை ஓராண்டு ஆனாமல் கண்ணாடி பாட்டிலில் வைத்து பயன்படுத்தலாம்.