மாங்காய் விரும்பி சாப்பிடுபவர்கள் இந்த பருப்பு மசியல் செய்து பார்க்கலாம். 'Raw Mango Dal' மஹாராஷ்டிராவில் செய்யப்படும் உணவு. 'Dal' உணவுகள் அங்கு வழக்கமாக சப்பாத்தி, சீரக சாதத்துடன் சேர்த்து உண்ணப்படும் ஒன்று. அதில் மாங்காய் சேர்த்து செய்தால் இன்னும் ருசியாக இருக்கும். இதன் செய்முறை மிகவும் எளிதானதுதான்.
மாங்காய் Dal:
என்னென்ன தேவை?
மாங்காய் - 2 (சிறியது)
துவரம் பருப்பு - 250 கி
பூண்டு - ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூம்
எண்ணெய் - தேவையான அளவு
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு
செய்முறை:
துவரம் பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். மாங்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். குக்கரில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பருப்பு, மாங்காய், உப்பு, மஞ்சள் சேர்த்து 3-4 விசில் விட்டு எடுக்கவும். அதிக விசில் விட வேண்டாம். மாங்காய் குழைந்துவிடும்.
இப்போது, தாளிக்க ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், சீரகம், கடுகு, பூண்டு எல்லாவற்றை சேர்க்க வேண்டும். தேவையெனில் இதோடு 2 வெங்காயம் சேர்த்து கொள்ளலாம். இப்போது வேகவைத்த பருப்பு, மாங்காய் அதோடு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக 15 நிமிடங்கள் கொதிக்க விடவும். மாங்காய், பருப்பும் நன்றாக புளிப்பு சுவை இறங்கியிருக்கும்.கொத்தமல்லி இலைகள் தூவின மாங்காய் Dal தயார். இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவது சுவையாக இருக்கும்.
பாலக்கீரை Dal
என்னென்ன தேவை:
துவரம் பருப்பு - 1 கப்
பாலக்கீரை - 1 கட்டு
பூண்டு - ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூம்
எண்ணெய் - தேவையான அளவு
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
வெங்காயம் - 2
தக்காளி -2
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு
செய்முறை:
ஒரு கப் துவரம் பருப்பை நன்கு கழுவி விட்டு குறைந்தது அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு, குக்கரில் பருப்பு, ஒன்றறை கப் தண்ணீர் சேர்த்து கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கி கொள்ள வேண்டும். குக்கரில் ப்ரஷர் இறங்கியதும் பருப்பை நன்றாக மசித்து விட வேண்டும்.
ஒரு கட்டு பாலக்கீரையை தண்ணீரில் இரண்டு மூன்று முறை கழுவி நறுக்கி வைக்க வேண்டும்
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். பொரிந்ததும் ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும். பின் நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். நன்றாக பொன்னிறமாக மாறியதும் 2 கீறிய பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
3 காய்ந்த மிளகாயை கிள்ளி சேர்த்துக்கொள்ள வேண்டும். இதோடு 2 தக்காளியை பொடியாக நறுக்கிய சேர்த்து வதக்கவும். நறுக்கிய கீரையை இதோடு சேர்த்து அதை வேக விடவும். கீரை வெந்ததும் மசித்து வைத்துள்ள பருப்பை இதில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ள வேண்டும். 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்க் வைத்தால் கீரை Dal தயார்.