முருங்கைக்கீரையில் எவ்வளவு சத்து இருக்கிறது என்பது நாம் அறிந்ததே. அதிக கால்சியம், வைட்டமின் ஏ உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்திருக்கிறது. வளர்சிதை மாற்றத்தை சீராக இயங்க,  இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துதல், முடி வளர்ச்சியை ஊக்குவிப்பது,  கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மை நீக்குதல், உடலுக்கு போதுமான அளவு இரும்புச்சத்து கிடைப்பது உள்ளிட்டவற்றிற்கு முருங்கைக்கீரை நல்லது. இதையும் ஊட்டச்சத்து நிறைந்த கறிவேப்பிலையை சேர்த்து பொடி செய்து வைத்துவிட்டால் போதும். வாரத்தில் ஒரு நாளைக்கான லன்ச் பாக்ஸ் ரெசிபி ரெடி. 


முருங்கைக் கீரை - கறிவேப்பிலை பொடி


என்னென்ன தேவை?


முருங்கைக் கீரை - 2 கப்


கறிவேப்பிலை - ஒரு கப்


உளுந்து - 100கி


கடலை பருப்பு - 50 கி


மிளகு - ஒரு டீ ஸ்பூன்


சீரகம் -ஒரு டீ ஸ்பூன்


மிளகாய் - காரத்திற்கு ஏற்ப சேர்க்கவும்


பெருங்காய் தூள் - அரை டீ ஸ்பூன்


உப்பு - தேவையான அளவு 


செய்முறை:


முருங்கைக்கீரை, கருவேப்பிலை இரண்டையும் நன்றாக சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி காய வைக்க வேண்டும். 2-3 நாட்களில் இலைகளில் இருந்த ஈரம் காய்ந்திருக்கும். இதை அப்படியே பொடி செய்து வைத்து கொண்டு இட்லிப் பொடியுடன் கலந்து தோசை, இட்லிக்கு பயன்படுத்தலாம். சட்னி அரைக்கும்போது அதில் ஒரு ஸ்பூன் சேர்க்கலாம். இல்லையெனில் முருங்கைக்கீரை பொடியாக செய்து வைத்துகொண்டால் இட்லி, தோசை , சாதம் என செய்து சாப்பிடலாம். 


ஒரு கடாயில் உளுந்து, கடலைப் பருப்பு, மிள்காய் ஆகியவற்றை நன்றாக ட்ரை ரோஸ்ட் செய்து எடுத்து ஆற வைக்கவும். இவற்றை தனித்தனியே பொன்னிறம் வரும்வரை வறுத்து தனியே ஆற வைக்க வேண்டும். முருங்கை, கறிவேப்பிலை இலைகளில் ஈரம் இருந்தால் எண்ணெய் சேர்க்கலாமல் இலைகளை கடாயில் வறுத்தும் செய்யலாம். 


வறுத்து வைத்துள்ள பொடிக்கு தேவையா பொருட்கள் நன்றாக ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டி, உப்பு பெருங்காய தூள் சேர்த்து நன்றாக அரைக்கவும். ரொம்பவும் நைஸாக அரைக்க வேண்டாம். இப்போது முருங்கைக் கீரை, கருவேப்பிலையை அதில் சேர்த்து அரைத்து எடுக்கவும். அவ்ளோதான் பொடி தயார். 


சாதம் செய்யும்போது..


முருங்கைக்கீரை பொடியை அப்படியே சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம். இப்படியும் ட்ரை பண்ணலாம். வெங்காயம், நிலக்கடலை அல்லது முந்திரி ஆகியவற்றை வறுத்து சாதத்தோடு சேர்த்தும் முருங்கைக்கீரை கறிவேப்பில்லை பொடி சாதம் செய்யலாம். சுவையாகவும் இருக்கும் ஆரோக்கியம் நிறைந்ததும் கூட. 


கறிவேப்பிலை:


கறிவேப்பிலையில்  ஏ, பி, சி மற்றும் பி12 போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆரோக்கியமான உணவுமுறைக்கு தினமும் குறிப்பிட்ட அளவு கறிவேப்பிலையை உணவில் சேர்க்க வேண்டும். 


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க:


உடலில் நோய்தொற்று ஏற்படுவது இயல்பானதுதான். அப்படியான பொழுதுகளில் வைரஸ் கிருமிகளை எதிர்த்துதிறமையாக வெள்ளையணுக்கள் போராடுவதற்கு சக்தி அவசியம் இல்லையா. வேகத்தில் நமக்கு ஏற்பட்ட உடல்நலக் கேடு காணாமல் போய்விடும். இயற்கையாக நாம் உட்கொள்ளும் உணவு மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் காலையில், 7-10 கறிவேப்பிலை இலைகளை சாப்பிடலாம். இல்லையெனில், தண்ணீரில் இலைகளை போட்டு, நன்கு கொதிக்க வைத்து வடிக்கட்டிய நீரை பருகலாம். 


எப்படி சாப்பிடுவது?


தினமும் காலையில் எழுந்ததும், 7-10 கருவேப்பிலை இலைகளை நன்கு மென்று திண்று தண்ணீர் குடிக்கலாம். இல்லையெனில், நீர்மோரில் அதிக கறிவேப்பிலை உடன் சாப்பிடலாம். இப்படி சாப்பிடுவதால் உடலின் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிப்பதுடன் தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும். சரும ஆரோக்கியத்திற்கும் நல்லது. 30 வயதிற்கு மேல் தேவைப்படும் கொலஜன் உற்பத்தியை அதிகரிக்க கறிவேப்பிலையும் முருங்கைக்கீரையும் உதவும்.