கோடை கால வெப்பம் நம் உடலில் ஸ்ட்ரா போட்டு நீர்ச்சத்தை உறிந்துவிடும். நா வறட்சி ஏற்படும்போது நாம் அதை உணர்வோம். தண்ணீர் குடிப்பதை வழக்கத்தைவிட அதிகரிக்க வேண்டும் என்பது தான் கோடையை சமாளிக்க சொல்லப்படும் முதல் டிப்ஸ்.


ஆனால் பச்சைத் தண்ணீர் எப்படி அதிகமாக குடிக்க முடியும். போர் அடிக்கிறது என்று சொல்லி பலரும் வழக்கமான அளவே குடிப்பதுண்டு. அதனால் உடல் சூடு பிடித்துக் கொள்ளுதல், சோர்வு, அயர்ச்சி போன்றவை ஏற்படலாம். உடலில் நீர்ச்சத்து குறைபாடு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்திவிடும். அதனால் இந்த கோடையில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க தண்ணீரோடு என்னவெல்லாம் அருந்தலாம் என்று பார்ப்போம்.


தண்ணீர் தான் ஃபர்ஸ்ட் பரிந்துரை..


என்னதான் இந்தக் கட்டுரையில் தண்ணீருக்கு மாற்று சொல்வதென்றாலும் கூட முதலில் நாங்கள் பரிந்துரைப்பது தண்ணீரைத் தான். அதனால் இந்த கோடை காலத்தில் வெளியில் செல்லும் போது ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்துச் செல்லுங்கள். தாகம் இருக்கிறதோ இல்லையோ சீரான இடைவெளியில் தண்ணீர் அருந்துங்கள். ஒருவேளை உங்களுக்கு தண்ணீர் பாட்டில் எடுத்துச் சென்றாலும் அருந்துவது மறந்துவிடும் என்றால் ஸ்மார்ட் ஃபோனில் வாட்டர் அலர்ட் சிஸ்டம் உள்ளது. அதில் அலர்ட் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளலாம்.


தண்ணீரில் மூலிகைகள் கலக்கலாம்..


பச்சைத் தண்ணீர் அருந்துவது சலிப்பூட்டுவதாக இருந்தால், அதில் கொஞ்சம் எலுமிச்சை துண்டுகள், ஆரஞ்சு துண்டுகள் அல்லது திராட்சைப் பழங்களை சேர்க்கலாம். அதன் மனம் உங்களுக்கு சலிப்பை ஏற்படுத்தாது. அதேபோல் புதினா, துளசி போன்ற மூலிகைகளை சேர்த்து தண்ணீரை அருந்தலாம்.
 நீர்ச்சத்து அதிகமுள்ள காய், கனிகள்..


கோடையில் சுரைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய், செளசெள போன்ற நீர்ச்சத்து அதிகமுள்ள காய்களை உண்பது அவசியம். வாரத்தில் இரண்டு நாட்களாவது கீரை சாப்பிட வேண்டும். அதேபோல் வெள்ளரி, தர்ப்பூசணி, ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். இதனால், உடலில் நீர்ச்சத்து அதிகமாகும். இது உடலுக்குப் புத்துணர்ச்சி தரும்.


சூப் அருந்தலாம்..


குளிர் காலத்தில் தானே சூடான சூப் இதமாக இருக்கும் என நீங்கள் கேட்கலாம். ஆனால் உடலுக்கு நீர்ச்சத்தைக் கொடுக்க தண்ணீர் அருந்தப் பிடிக்காதவர்கள் மிதமான சூட்டில் சூப் அருந்தலாம். அதுவும் காரசாரமாக இல்லாத லகுவான காய்கறி சூப் நல்ல பலன் தரும். கீரை பழங்கள் சேர்த்த ஸ்மூத்தி சேர்த்துக் கொள்ளலாம்.


மூலிகைத் தேநீர் அல்லது தேங்காய் தண்ணீர் அருந்தலாம்


கோடையில் சுடச்சுட காபி, டீ குடிப்பதற்கும் ஒப்பாது. அப்படியான நேரங்களில் ஐஸ் டீ, மூலிகை தேநீர் அருந்தலாம். அல்லது தேங்காய் தண்ணீர், இளநீர் அருந்தலாம்.


தேங்காய் தண்ணீர் மற்ற பானங்களுக்கு ஒரு இனிமையான மற்றும் சத்தான மாற்றாக உள்ளது. ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான பல நன்மைகளை வழங்குகிறது. பொட்டாசியம், சோடியம் மற்றும் மெக்னீசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்ததாக தேங்காய் தண்ணீர் உள்ளது. இந்த தாதுக்கள் உடலில் திரவ சமநிலையை பராமரிக்க உதவுகின்றன, இது நீரேற்றத்திற்கு அவசியம். தேங்காய் தண்ணீரில் இயற்கையான குளிர்ச்சியான பண்புகள் உள்ளன. இவை உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தவும் வெப்ப அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும்.