பருவமழை வந்தால், வெயில் கொளுத்தும் கோடையில் இருந்து விடுபடும் அதே வேளையில், சில பாதகங்களும் உண்டு. நம் வீட்டில் இடி, மின்னல், மழை மூலம் வரும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.


சிறிய சிறிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் அவற்றை நாம் கடந்து விடலாம். மழைக்காலத்தில் நாம் வசிக்கும் இடத்தை, பாதுகாப்பாக மாற்ற நிபுணர்கள் சில விஷயங்களை செய்ய பரிந்துரைக்கின்றனர். பின்வருவனவற்றை படித்து அவற்றை வீடுகளில் வழக்கத்திற்கு கொண்டு வந்து இந்த மழை காலத்தில் நிம்மதியாக மழையை ரசித்திருங்கள்.


வீடு முழுவதும் வாட்டர் - ப்ரூஃப் 


மழைநீர் உள்ளே செல்ல அனுமதிக்கும் ஏதேனும் கசிவுகள் அல்லது விரிசல்கள் உள்ளதா என உங்கள் வீட்டின் மூலை முடுக்குகள் அனைத்தையும் சோதனை செய்யவும்..


எம்-சீல், பெயிண்ட் போன்ற பொருட்களை பயன்படுத்தி அதுபோன்ற இடைவெளிகளை அடைக்கலாம். ரூஃப், ஜன்னல்கள் மற்றும் கதவுகள் போன்ற பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துங்கள்.


வீட்டிலுள்ள பொருட்களை ஒழுங்கமைக்கவும்


மழைக்காலத்தில் வீடு அடைத்து, நெரிசலானது போன்ற உணர்வை தரலாம், எனவே உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை ஒழுங்கமைப்பதன் மூலமும் சேமிப்பிடத்தை அதிகப்படுத்துவதன் மூலமும் அதிக இடத்தை உருவாக்கலாம். அதனால் பார்ப்பதற்கு வீடு அடைத்தது போல தெரியாது, எளிதாக சுவாசிக்கக்கூடிய சூழல் உருவாகும்.



கால்களை துடைக்க டோர்மேட்டுகளை கண்டிப்பாக வாங்குங்க..


வெளியே சென்றுவிட்டு சேற்றுக் காலோடு, அல்லது ஈரமான காலோடு வீட்டிற்குள் வரும்போது நம் கால் அச்சுக்கள் தரையில் படியும். அவை வீட்டில் நடப்பவர்களுக்கு எரிச்சலூட்டும். அதனை தவிர்க்க டோர்மேட்களை எல்லா அறை வாயிலிலும் வைக்கவும்..


முக்கியமாக வாசல் கதவுகளில் வைக்க வேண்டும். அவற்றை வாங்கும்போது விரைவாக சுத்தம் செய்யக்கூடிய, விரைவாக உலரக்கூடிய பொருட்களால் செய்யப்பட்டவற்றை வாங்கவும். 


உட்புற தாவரங்கள் வளர்க்கலாம்


சில அழகான உட்புற தாவரங்களை வீட்டிற்குள் வைப்பதன் மூலம், உங்கள் வீட்டை பிரகாசமாக்கலாம். இந்த வகை செடிகள், பசுமையை சேர்ப்பதுடன், மாசுபாட்டை உறிஞ்சி உட்புற காற்றை சுத்தப்படுத்த உதவுகின்றன. சூரிய ஒளி அதிகம் தேவைப்படாத இந்த தாவரங்களுக்கு நீரும் போதுமான அளவு ஊற்றினால் போதும், அதிகமாக ஊற்றவேண்டிய தேவையில்லை. ஊற்றினால் வேர் அழுகும். 


தொடர்புடைய செய்திகள்: Rahul Gandhi on Modi: ”இப்ப மணிப்பூர், அடுத்து ஹரியானா, பஞ்சாப், உ.பி-ய பாஜக விற்கும்” - ராகுல் காந்தி சாடல்


பூச்சிகள் இல்லாமல் சரிபார்க்கவும்


மழைக்காலம் கொசுக்கள், ஈக்கள் மற்றும் எறும்புகள் போன்ற தேவையற்ற பூச்சிகளை வீட்டிற்குள் கொண்டு வரும். அவற்றைத் தடுக்க, உங்கள் வீட்டைத் தவறாமல் சுத்தம் செய்து, இடைவெளிகள் அல்லது விரிசல்களை அடைக்கவும். வேப்ப எண்ணெய் அல்லது சிட்ரோனெல்லா மெழுகுவர்த்திகள் போன்ற இயற்கை விரட்டிகளைப் பயன்படுத்தி அவற்றை விரட்டவும். 


வீட்டிற்குள் காற்றோட்டமாக வைக்கவும்


கனமழையின் போது உங்கள் ஜன்னல்களை மூடி வைக்க ஆசையாக இருந்தாலும், ஈரப்பதம் அதிகரிப்பதைத் தடுக்க சரியான காற்றோட்டத்தை அனுமதிப்பது அவசியம். இதற்காக ஸ்கிரீன்கள் வாங்கி கதவுகளில் மாட்டலாம். 



எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்களைப் பாதுகாக்கவும்


மழைக்காலத்தில் மின்னழுத்த ஏற்ற இறக்கங்கள் பொதுவானவை. அவை உங்கள் மதிப்புமிக்க எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சாதனங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. பொதுவாகவே ஸ்டபிலைசர் இன் பில்டாக வரும் எலக்ட்ரானிக்குகள் உள்ளன, அப்படி இல்லை என்றால் தனியாக வாங்கி அவற்றிற்கு நிறுவவும். மின்னலால் ஏற்படும் சேதத்தைத் தவிர்க்க மின்னல் புயல்களின் போது உணர்திறன் வாய்ந்த உபகரணங்களைத் துண்டித்து வைக்கவும்.


வசதியான சூழலை உருவாக்கவும்


உங்கள் வீட்டில் சூடான மற்றும் வசதியான சூழ்நிலையை உருவாக்க பருவமழை சரியான வாய்ப்பை வழங்குகிறது. மென்மையான விளக்குகள், வசதியான மெத்தைகள் மற்றும் விரிப்புகள் ஆகியவற்றை வாங்கவும். வாசனையான மெழுகுவர்த்திகள் அல்லது ஊதுபத்திகளை வைக்கவும். மழை நேரத்தில், போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு, மழை விழும் சத்தம் கேட்க, ஒரு புத்தகத்துடன் சுருண்டுக் கிடப்பதும், சூடான தேநீர் அருந்துவதும் இனிமையானது அல்லவா?


அவசரகால தயார்நிலை


மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய அவசரநிலைகளுக்கு தயாராக இருங்கள். டார்ச்சுகள், பேட்டரிகள், முதலுதவி பெட்டி மற்றும் கெட்டுப்போகாத உணவுப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை சேமித்து வைக்கவும். அவசர எண்களை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால் வெளியேற்றும் வழியையும் திட்டமிட்டு வைத்துக்கொள்வது நல்லது.