நாட்டை பிளவுபடுத்துவது தான் பாஜக- ஆர்எஸ்எஸ்-ன் நோக்கம் என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.


”நாட்டை பிளவுபடுத்தும் பாஜக - ஆர்எஸ்எஸ்”


இளைஞர் காங்கிரஸ் நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக பேசிய அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை கடுமையாக சாடினார். நிகழ்ச்சியில் பேசிய அவர்ஒரு பக்கம் நீங்கள் நாட்டின் மீது அன்பு கொண்டு இருக்கிறீர்கள். நாடு புண்படும்போதோ, குடிமக்கள் பாதிக்கப்படும்போதெல்லாம், நீங்களும் பாதிக்கப்படுவீர்கள், வருத்தப்படுவீர்கள். ஆனால், அவர்கள் மனதில் அப்படியொரு உணர்வு இல்லை. ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க.வினருக்கு எந்த வலியும் இல்லை. ஏனென்றால், அவர்கள் நாட்டைப் பிரிக்கும் வேலையைச் செய்கிறார்கள்.


”மணிப்பூரை எரிப்பார்கள்”


பாஜக- ஆர்எஸ்எஸ்க்கு அதிகாரம் மட்டுமே வேண்டும். அதிகாரத்தைப் பெற எதையும் செய்வார்கள். அதிகாரத்திற்காக மணிப்பூரை எரிப்பார்கள். முழு நாட்டையும் எரிப்பார்கள். நாட்டின் துயரம் மற்றும் வலியைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. அது ஹரியானா, பஞ்சாப் அல்லது உத்தரபிரதேசமாக இருந்தாலும், அவர்கள் அதிகாரத்தை மட்டுமே விரும்புவதால் அவர்கள் முழு நாட்டையும் விற்றுவிடுவார்கள்.  தற்போது காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கருத்தியல் போர் நடைபெற்று வருகிறது. 


அதிகாரத்தை விரும்பும் பாஜக:


காங்கிரஸ் அரசியலமைப்பின் மீது நம்பிக்கை கொண்டுள்ளது, நாட்டை ஒன்றிணைத்து, இந்தியாவின் சமத்துவமற்ற சமூக அமைப்புக்கு எதிராகப் போராடுகிறது. அதேசமயம், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலரே இந்த நாட்டை இயக்கி அனைத்து செல்வங்களையும் சொந்தமாக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ்-பாஜக விரும்புகிறது. அவர்களுக்கு நீதித்துறை, ராணுவம், தேர்தல் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் வேண்டும். விசாரணை அமைப்புகள் மற்றும் பள்ளிகள், அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.


”சிலருக்கான பிரதமர்”


பிரதமர் நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டுமே சேவை செய்கிறார், மணிப்பூருடன் அவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை. மணிப்பூரில் நடந்ததை நீங்கள் பார்த்தீர்கள். மணிப்பூரைப் பற்றி பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசாததை கண்டு ஆச்சரியப்பட வேண்டியதில்லை. இந்தியாவில் ஒரு மாநிலம் எரிகிறது என்றால், இந்தியப் பிரதமர் குறைந்தபட்சம் எதிர்வினையாற்றியிருப்பார் என்று நீங்கள் நினைத்திருக்க வேண்டும். இந்தியப் பிரதமர் இம்பாலுக்கு மக்களுடன் பேசச் சென்றிருப்பார் என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள், ஆனால் அது எதுவும் நடக்கவில்லை.  மணிப்பூரைப் பற்றி மோடி மௌனமாக இருப்பதற்குக் காரணம், அவர் "தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரின் பிரதமராக" இருப்பது தான்.


ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரதமர்:


மோடி ஆர்.எஸ்.எஸ்-ன் பிரதமர். மணிப்பூருடன் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை. மணிப்பூரில் அவரது சித்தாந்தம் வன்முறைக்கு வழிவகுத்தது என்பது அவருக்குத் தெரியும். ஆனால், களத்தில் நடக்கும் சம்பவங்கள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் வலியால் அவர் பாதிக்கப்படவில்லை" எனவும் ராகுல் காந்தி சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.