இனிப்பு வகை என்றால் பொதுவாக பெரும்பாலானோருக்கு பிடிக்கும். அதிலும் அல்வா என்றால் எல்லோருக்குமே பிடிக்கும் தானே. பல்வேறு வகையான அல்வா இருந்தாலும், பூசணி அல்வா என்றால் அதன் சுவையே வித்தியாசமானதாக இருக்கும். பூசணிக்காயில் மணமணக்கும் சாம்பார், பொரியல் மட்டும் அல்ல, நாவில் வைத்தால் கரையும் பதத்தில் அல்வாவும் செய்யலாம். வாங்க பூசணி அல்வா எப்படி செய்வதென்று பார்க்கலாம்...
தேவையான பொருட்கள்
பூசணிக்காய் - 300 கிராம்
பால் - 500 மி.லிட்டர்
சர்க்கரை - 400 கிராம்
முந்திரி - 15
திராட்சை - 15
பாதாம் - 15
நெய் - 250 கிராம்
குங்குமப்பூ - 1 சிட்டிகை
ஏலக்காய் - அரை ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை
பூசணிக்காயை தோல் நீக்கி நன்றாகத் துருவி, அதன் சாறைப் பிழிந்து விட்டு, வெறும் சக்கையை மட்டும் எடுத்துக் கொள்ளவும். சிறிது பாலில் குங்குமப்பூவை கலந்து வைக்கவும். பாதாமை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். கடாயில் நெய்விட்டு, அதில் பூசணிச் சக்கையைப் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
பின்பு அதில் சூடான பாலைச் சேர்க்க வேண்டும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, இடைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். இடை இடையே நெய் சேர்த்து கொண்டே இருக்க வேண்டும். அதன்பின், தேவையான அளவு சர்க்கரை, உப்பு, பாலில் கரைத்து வைத்துள்ள குங்குமப்பூ ஆகியவற்றை அதனுடம் சேர்க்க வேண்டும்.
மற்றொரு கடாயில் சிறிது நெய் ஊற்றி திராட்சை, முந்திரியை போட்டு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். கடைசியாக அல்வா பதம் வந்தவுடன் ஏலக்காய்த் தூள், வறுத்த திராட்சை, முந்திரி, பொடித்த பாதாம் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி இறக்கி கொள்ளவும். சூடான சுவையான பூசணிக்காய் அல்வா தயார்.
பூசணிக்காயின் நன்மைகள்
பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். புண்களை ஆற்ற, தழும்புகளை காணாமல் போகச் செய்வதில் பூசணிக்காய் முக்கிய பங்காற்றுவதாக சொல்லப்படுகின்றது. பூசணியை அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைக்கும் என்றும் சொல்லப்படுகின்றது.
மேலும் படிக்க,