'வெளிய நிறையா....வெயில் இங்க வந்து உட்காருங்க' என்று நீண்ட டேபிள்களில் அமர வைக்கின்றனர். கூட்ட நெரிசல் ஏற்பட்டுவிடக் கூடாது என்று ஒவ்வொரு செட்டாக ஆட்களை உள்ளே அனுப்புகின்றனர். 10 ரூபாய்க்கு டோக்கன் வாங்கினால் போதும் வயிறு நிறைய சாப்பிடலாம் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளனர் கல்லல் 'ஆ.மு.ஆ' குடும்பத்தினர்.



சிவகங்கை மாவட்டம் கல்லல் பேருந்துநிலையம் அருகே உள்ளது, பிச்சம்மை கேண்டீன். கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி திறக்கப்பட்ட இந்த உணவகம். தற்போதும் சிறப்பாக அதே விலையில், அதே தரத்தில் இயங்கி வருவதோடு சிறப்பாக உணவு வழங்கி வருகின்றனர். காலை, மதியம் 10 ரூபாய் கொடுத்தால் போதும் வயிறு நிறைய சாப்பாடு போடுவாங்க என்கின்றனர் அப்பகுதி மக்கள். மதிய வேலையில் அந்த கேண்டீனில் 10 ரூபாய் கொடுத்து டோக்கனை பெற்று சாப்பிட உள்ளே சென்றோம்.



சில்வர் பிளேட்டில், சில்வர் கிண்ணங்கள் பல அடுக்கப்பட்டு அதில் சாப்பாடு, கூட்டு, பொரியல், ரசம், மோர், குழம்பு என்று அழகாக பரிமாறப்பட்டது. எக்ஸ்ட்ரா ரைஸ் எவ்வளவு கேட்டாலும் அன்போடு வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்கள் முதல் தள்ளாடும் முதியவர்களும் பசியாறும் இடமாக கல்லல் பிச்சம்மை கேண்டீன் மாறியுள்ளதை உணர முடிந்தது. பொதுமக்கள் காத்திருக்கும் இடத்தில் மின் விசிறிக்கு கீழே அமர்ந்து சற்று இளைப்பாறினோம்.



சாப்பிட்டு வந்த முதியவர் கணேசன்...," நான் மதகுபட்டியில இருந்து வாரேன் தம்பி. கல்லலுக்கு எப்ப வந்தாலும் மதிய சாப்பாடு சாப்டுறுவேன். இன்னைக்கு பூசணிக்கா கூட்டு அருமையா வச்சுருந்தாங்க. எனக்கு இங்க செய்ற பாசாயம் ரெம்பவும் பிடிக்கும். வயித்துக்கும், மனுசுக்கும் நிறைவா இங்க குடுக்குற சைவ சாப்பாடு அருமையா இருக்கு. 80 ரூவா, 100 ரூவா குடுத்து சாப்புடுற கடையில கூட இந்த அளவுக்கு சுவையா உணவு கொடுக்க மாட்டாங்க" என்றார் மகிழ்ச்சியாக.



கேட்டீணை நடத்திவரும் ஆ.மு.ஆ., குடும்பத்தினர் அவர்களிடம் பேசியபோது, " எங்கள் குடும்பம் பாரம்பரியமான கூட்டுக்குடும்பம். ஒற்றுமையாக உள்ளதே எங்களின் பலமாக உள்ளது. கல்லல் பகுதியில் 5 வது தலைமுறையாக சேவைப் பணிகளை தொடர்ந்து செய்துவருகிறோம். கல்லல் பேருந்துநிலையத்தின் இடம் எங்கள் முன்னோர்கள் வழங்கியது. அதே போல் காரைக்குடியையும் கல்லலையும் இணைக்கும் பாலம் அமைத்துக்கொடுத்துள்ளோம். கல்லலில் முருகப்பா பள்ளியை நடத்துகிறோம். பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்திற்கு இலவசமாக இடம் வழங்கியது நாங்கள்  தான். வார மார்க்கெட் எங்களுடையது தான். இப்படி பல்வேறு சேவைகளை இலவசமாகவும், சலுகை விலைக்கும் கொடுத்து உதவியுள்ளனர் எங்கள் குடும்பத்தினர்.



பல்வேறு தொழில்களில் ஈடுபடும் எங்கள் குடும்பத்தினர். சென்னை, சேலம் உள்ளிட்ட இடங்களில் உள்ளனர்.  எங்கள் முன்னோர்கள் பல உதவிகள் செய்தாலும் சொல்லும்படியாக எங்கள் தலைமுறை எதாவது செய்ய வேண்டும் என நினைத்தோம். அதே சமயம் திருப்தியான விசயத்தை செய்ய வேண்டும் எனவும் எங்கள் குடும்பத்தார்கள் நினைத்தோம். அதன்படி கோவை சாந்தி கியர்ஸ் நிறுவனத்தை போல் உணவகம் தொடங்கலாம் என்று முடிவு செய்தோம். சுமார் 6 மாத காலமாக இந்த திட்டத்தை செயல்படுத்த பல்வேறு பணிகளை செய்தோம். பின்பு 2019-ல் கேண்டீனை தொடங்கிவிட்டோம். சேவைக்கா தொடங்கிய இந்த உணவகம் தொடர்ந்து இயங்கவேண்டும் என முழுமனதோடு தொடர்ந்து நடத்துகிறோம். அரசு புதிய வரிகள் விதித்தாலும், காய்கறிகள், அரிசி விலை உயர்ந்தாலும் எங்கள் கேண்டீனில் உணவின் விலையை அதிகப்படுத்தக் கூடாது என்று முடிவு செய்துள்ளோம்.



இதனை அப்போதைய மதுரை போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசிர்வாதம்,  சிவகங்கை காவல்துறை எஸ்.பி., ரோஹித்நாத் உள்ளிட்டோர் தொடங்கிவைத்தனர். பிச்சம்மை எங்கள் தாத்தாவின் சகோதரி அவரின் நினைவாக கேண்டீன் பெயரை வைத்துள்ளோம். இலவசமாக நடத்தினால் சேவையில் மனநிறைவாக இருக்காது என 10 ரூபாய்க்கு உணவு வழங்குகிறோம். இதனால் எங்களுக்கும் திருப்தி. சாப்பிடும் நபர்கள் தாங்கள் பணம் கொடுத்து தான் சாப்பிடுகிறோம் என்று அவர்களும் திருப்தி அடைவார்கள். என்று பணத்தை நிர்ணயம் செய்தோம். அவர்கள் ஹோட்டலில் சாப்பிடுகிறார்கள் என்ற  மனநிறைவை கொடுக்க பெரிய ஹோட்டலில் வைக்கப்படுவது போல் சில்வர் தட்டும், கிண்ணங்களும் பயன்படுத்துகிறோம். விலை குறைவு என்பதற்காக தரம் எப்போதும் குறையக்கூடாது என்று உறுதியாக இருக்கிறோம்.



இந்த கேண்டீன் வெற்றிகரமாக நடைபெற்றால். பல்வேறு இடங்களில் இதே போன்ற கேண்டீன் தொடங்கலாம் என்று நினைத்துள்ளோம். காரைக்குடியில் தற்போது பிச்சம்மை கேண்டீன் தொடங்குவதற்கான பணி நடைபெற்று வருகிறது. எதுவாக இருந்தாலும் சொந்த ஊரில் இருந்து தொடங்க வேண்டும் என கல்லலில் தொடங்கியுள்ளோம். இந்த கேண்டீனில் வாரம் முழுவதும் காலை , மதியம் உணவு வழங்கப்படும். எல்லாமே 10 ரூபாய் தான். காலை உணவில் ஞாயிறு அன்று பூரி,இட்லி. திங்கள் ஊத்தாப்பம், கோதுமை உப்பா இப்படி தினமும் வேறு வேறு வகை உணவு வழகப்படும். அதே போல் மதிய உணவிலும் கூட்டு பொரியல், குழம்பில் மாற்றம் இருக்கும். குறைவான விலையில் சுவையாக வழங்கப்படும். கேண்டீன் தொடங்கிய நாள் முதலே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பாராட்டு மழைகள் பொழிகிறது. தொடர்ந்து இந்த சேவையை செய்வோம்" என்றனர்.