கோவை மாவட்டம் நவக்கரை அருகே இரயில் மோதிய விபத்தில் 2 குட்டி யானைகள் உட்பட 3 யானைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போத்தனூர் – பாலக்காடு இரயில் தடத்தில் மட்டும் இதுவரை 28 யானைகள் இரயில் மோதி உயிரிழந்துள்ளன.


கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை வருகின்ற டிசம்பர் 23 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுவரை 81 பேரிடம் விசாரணை நடத்தி இருப்பதாகவும், பலரிடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் கால அவகாசம் வழங்க வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.


கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களை அழித்த வழக்கில் கைதான தனபால் மற்றும் ரமேஷ் ஆகியோரின் ஜாமீன் மனுவை நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இரண்டாவது முறையாக அவர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.


கோவை காவலர் பயிற்சி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மோகனகாந்தி என்பவரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முன் விரோதம் காரணம் காரணமாக குடி போதையில் காவலர் விமல்ராஜ் என்பவரின் வீட்டில் வெடி குண்டு வைத்திருப்பதாக போனில் மிரட்டியுள்ளார்.


கோவை மாவட்டம் கண்ணம்பாளையம் பகுதியில் திமுகவை சேர்ந்த முன்னாள் பேரூராட்சித் தலைவர் தளபதி முருகேசன் உள்ளிட்ட 6 பேர் மீது இலஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். கடந்த 2016ம் ஆண்டில் அப்பேரூராட்சியில் குடிநீர் குழாய் பதிப்பதில் முறைகேடு நடந்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


நீலகிரி மாவட்டத்தின் 114 வது ஆட்சியராக அம்ரித் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். யானைகள் வழித்தட ஆக்கிரமிப்புகள் அகற்றும் விவகாரத்தில் நீதிமன்றம் மற்றும் அரசின் வழிகாட்டுதல்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த இன்னசெண்ட் திவ்யா பணியிடமாற்றப்பட்டு, அம்ரித் நியமிக்கப்பட்டு இருந்தார்.


தமிழகத்தில் தக்காளி விலையேற்றத்தை கட்டுப்படுத்த அரசு துரித நடவடிக்கை எடுத்ததால் இன்று கிலோ 60 ரூபாய்க்கு சென்னையில் விற்பனை ஆகிறது என உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தருமபுரியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


திமுக ஆட்சிக்கு வந்து 54 ஆண்டுகள் ஆகிறது எனவும், தவறுகளை திருத்தி கொண்டு மக்கள் பணியாற்ற வேண்டும் எனவும் தருமபுரியில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வந்த மழை குறைந்ததால், காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர் வரத்து சரிந்து வருகிறது.


திருப்பூரில் பின்னலாடை நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி, நேற்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. கடந்த 10 மாதங்களில் மட்டும் 130 ரூபாய் விலை உயர்ந்து இருப்பதால், தொழில் துறையினர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். செயற்கையாக நூல் தட்டுப்பாடு ஏற்படுத்தி விலை உயர்த்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.