குமரிக்கடல் மற்றும் அதையொட்டியுள்ள இலங்கை கடற்கரை பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழ்நாட்டிலும் புதுவையிலும் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சென்னை உள்பட தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கடலோர மாவட்டங்களை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. நேற்று அவ்வப்போது இடைவெளி விட்டு பெய்து வந்த மழை நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழையும், கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருச்சி, கரூர், நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் நாளை ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அரியலூர், திருச்சி, கரூர், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்கள், காரகை்கால் பகுதிகளிலும் நாளை கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.
வடகிழக்கு பருவமழையின் தீவிரம் காரணமாக இன்று குமரி, தென்மேற்கு வங்கக்கடல், தென்தமிழக கடற்கரை பகுதிகளுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இதுவரை 58 செ.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 70 சதவீதம் அதிகமாகப் பதிவாகியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வடகிழக்குப் பருவமழைப் பொழிவு 96 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 67 சதவீதம் அதிகம் ஆகும்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்