தஞ்சாவூர்: தபால் நிலையங்களில் நேரடி முகவர்கள் கள அலுவலர்களுக்கான நேர்காணல் வருகிற 4,5,6ம் தேதிகளில் நடக்கிறது.
இதுகுறித்து தஞ்சை கோட்ட முதுநிலை தபால் கோட்ட கண்காணிப்பாளர் தங்கமணி கூறியதாவது:
தஞ்சை தபால் நிலையங்களில் ஆயுள் காப்பீடு வணிகம் செய்வதற்காக நேரடி முகவர்கள் மற்றும் கள அலுவலர்களுக்கான நேர்காணல் நடைபெற உள்ளது. அதன்படி நேர்காணல், தஞ்சை முதுநிலை தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வருகிற 4ம் தேதியும், பாபநாசம் தலைமை தபால் நிலையத்தில் 5ம் தேதியும், மன்னார்குடி தலைமை தபால் நிலையத்தில் 6ம் தேதியும் காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ளது.
நேரடி முகவர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பிய 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். இதர தகுதிகளான முன்னாள் முகவர்கள், முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம். கள அலுவலர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் மத்திய மற்றும் மாநில அரசு பணி ஓய்வு பெற்ற அலுவலர்கள் மற்றும் கிராமிய தபால் ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம்.
நேர்முக தேர்விற்கு கலந்து கொள்ள விரும்புவோர் தங்களின் கல்வி தகுதி, வயது தகுதி, இருப்பிடச்சான்று, ஆதார் எண், பான் கார்டு ஆகியவற்றின் அசல் மற்றும் நகல், 2 பாஸ்போர்ட் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் நேர்முக தேர்வில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.