வேலைநாடும்  இளைஞர்கள்  பயன்பெறும்  வகையில், வருகின்ற 15.03.2025 அன்று, ராஜா துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் மாபெரும் தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.


 

மாபெரும் தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

 

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும்  தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்துடன் இணைந்து மாபெரும் தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு, வருகின்ற  15.03.2025 அன்று சிவகங்கை ராஜா துரைசிங்கம் அரசு கலைக் கல்லுாரியில், காலை 09.00 மணி முதல்  மாலை 03.00 மணி வரை நடைபெற உள்ளது. 

 

5000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்

 

இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துக்கொண்டு 5000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு இளைஞர்களை தேர்வு செய்ய உள்ளனர். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ போன்ற கல்வித் தகுதியுடைய அனைவரும் கலந்து கொள்ளலாம்.

 

பதிவு செய்வது எப்படி

 

மேலும், இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது சுயவிவரம் (Resume), கல்விச்சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாளன்று காலை 09.00 மணிக்கு வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் https://tinyurl.com/candidatereg2025  என்ற இணைப்பில் முன்பதிவு செய்தும்,  முகாமில் பங்கேற்க உள்ள தனியார்துறை நிறுவனங்கள் https://tinyurl.com/svgemployerreg25 என்ற இணைப்பில் பதிவு செய்வதும் அவசியமாகும். அதுமட்டுமன்றி, தனியார்துறை வேலைவாய்ப்பு இணையத்திலும் (www.tnprivatejobs.tn.gov.in) வேலைநாடுநர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களது விவரங்களை பதிவு செய்திடல் வேண்டும். மேலும், வேலைவாய்ப்பு தொடர்பான பல்வேறு தகவல்களைப் பெற SIVAGANGAI EMPLOYMENT OFFICE என்ற Telegram channel-ல் இணைந்து பயன்பெறலாம். இம்முகாமில் வேலைவாய்ப்பு பெற்று பணிநியமணம் பெறும் பதிவுதாரர்களுடைய வேலைவாய்ப்பு பதிவு மூப்பு இரத்து செய்யப்பட மாட்டாது.

 

மாவட்ட ஆட்சியர் தகவல்

 

மேலும், இவ்வேலைவாய்ப்பு முகாமில் போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம், பல்வேறு திறன் பயிற்சிகளுக்கான ஆட்சேர்ப்பு விண்ணப்பம் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பம் ஆகியவைகளும் வழங்கப்படும். எனவே, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வேலைநாடுநர்கள் இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் அதிக அளவில்         பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்துள்ளார்.