ஆலோசகர் பதவிக்கு, தலைமைச் செயலகத்தில் துணை செயலாளர் பணி நிலையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு விளம்பரம் அளித்த நிலையில், முறையாக காலிப் பணியிடங்களை நிரப்பாமல் ஓய்வு பெற்றவர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவதா என்று தமிழக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதேபோல தலைமைச் செயலக சங்கமும் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறியுள்ளதாவது:

’’1) திமுக ஆட்சிப்‌ பொறுப்பேற்ற நாள்‌ முதற்கொண்டே, அரசுத் துறைகளில்‌ ஆலோசகர்கள்‌ நியமனங்களை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஆரம்பகால கட்டத்தில்‌, சில துறைகளில்‌ மட்டுமே இருந்த இத்தகைய ஆலோசகர்கள்‌ நியமனங்கள்‌ தற்போது அனைத்துத்‌ துறைகளிலும்‌, புற்றீசல்‌ போல பல்கிப்‌ பெருகி விட்டது.

2.) கடந்த அதிமுக ஆட்சியில்‌ இவ்வாறான நியமனங்கள்‌ இங்கொன்றும்‌அங்கொன்றுமாக இருந்தது என்றாலும்‌, பெரும்பாலும்‌ இந்திய ஆட்சிப்‌ பணியிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள்‌ ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டனர்‌. ஆனால்‌, தற்போது ஆலோசகர்களின்‌ நியமனங்கள்‌ எந்தவித வரைமுறையும்‌ இன்றி செய்யப்பட்டு வருகிறது. அதைப்போல இவர்களின்‌ ஊதிய நிர்ணயத்திற்கு எந்த வழிகாட்டுதலும்‌ பின்பற்றப்படுவதில்லை.

3) இதன்‌ தொடர்ச்சியாக, தற்போது தமிழ்நாடு அரசின்‌ சிறப்பு திட்டச்‌ செயலாக்கத்‌ துறையின்‌ அரசு கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர், சிறப்புத்‌ திட்டச்‌ செயலாக்கத்‌ துறையில்‌, தற்காலிக ஆலோசகர்‌ பதவியில்‌ மாதம்‌ ரூ.1.00 இலட்சம்‌ தொகுப்பு ஊதியத்தில்‌ பணிபுரிவதற்கு தலைமைச்‌ செயலகத்திலிருந்து துணைச்‌ செயலாளர்‌ பதவி நிலைக்குக்‌ குறையாத பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ கோரப்படுகின்றன என்ற பத்திரிக்கைச்‌ செய்தியினை வெளியிட்டுள்ளார்‌. தமிழ்நாடு தலைமைச்‌ செயலகச்‌ சங்கம்‌ இதற்கு முதற்கண்‌ கடுமையான கண்டனங்களைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறது.

ஆலோசகர்கள்‌ மூலமாக அரசு நிர்வாகத்தினை நடத்துவதா?

4) 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை இந்திய அரசியலமைப்பின்‌ மூலமாக பாதுகாத்து நடைமுறைப்படுத்திவரும்‌ தமிழ்நாட்டில்‌, இந்திய அரசியலமைப்பின்‌ அங்கமான தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ அரசுப்‌ பணிக்குத்‌ தேர்வாகி, பல்வேறு நிலைகளில்‌ பணியாற்றிவரும்‌ பணியாளர்களின்‌ முக்கியத்துவத்தையும்‌ திறமையையும்‌ பின்னுக்குத்‌ தள்ளிவிட்டு, ஆலோசகர்கள்‌ மூலமாக அரசு நிர்வாகத்தினை நடத்துவது என்பது ஏற்புடையதல்ல.

களத்தில்‌ நின்று, மக்களோடு மக்களாக சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபடும்‌ பணியாளர்களின்‌ உழைப்பினை புறந்தள்ளிவிட்டு, ஆலோசகர்களின் அறிவுரையின்படி அரசின்‌ கொள்கை முடிவுகளை மேற்கொள்ளும்‌ போக்கு என்பது சமூக நீதிக்கு எதிரானதாகும்‌.

திராவிட மாடலுக்கு எதிரான நடவடிக்கை

ஒன்றிய அரசு, ஒன்றிய அரசு பணியாளர்‌ தேர்வாணையத்தின்‌ மூலமாக இணைச்‌ செயலாளர்‌, துணைச்‌ செயலாளர்‌, இயக்குநர்‌ நிலையில்‌ 45 பணியிடங்களை இடஒதுக்கீட்டினை மறுதலித்து, சமூக நீதிக்கு எதிராக நிரப்ப எத்தனித்தபோது, தமிழ்நாடு அரசு அதனை எதிர்த்து குரல்‌ கொடுத்து தடுத்து நிறுத்திவிட்டு, மாநில அரசில்‌ எந்தவித சலனமுமின்றி ஆலோசகர்கள்‌ நியமனங்களை பன்மடங்கு அதிகரித்திருப்பது என்பது திராவிட மாடலுக்கு எதிரான நடவடிக்கையாகும்‌.

நிபுணத்துவம்‌ தேவைப்படும்‌ நேர்வுகளில்‌ ஆலோகர்களை நியமிப்பது என்ற வாலாய நடைமுறை கைவிடப்பட்டு, ஒவ்வொரு துறைகளிலும்‌ கணக்கிலடங்கா நியமனங்கள் சமீபகாலமாக நடைபெற்றுக்‌ கொண்டிருக்கிறது. இவ்வாறு நியமிக்கப்படும் ஆலோசகர்கள்‌ சர்வதேச அளவில்‌, சமூக நீதிக்கு எதிராக செயல்படுவதற்கான பயிற்சி பெற்று, பல்வேறு முதலாளித்துவ நிறுவனங்கள்‌ மூலமாக பல்வேறு வழிகளில்‌ மாநில அரசில்‌ உட்புகல்போக்கு என்பது மிகவும்‌ அபாயகரமானதாகும்.

அரசு வேலை என்ற கனவு

தற்போது தமிழ்நாடு அரசில்‌ காலியிடங்களின்‌ எண்ணிக்கை ஏறத்தாழ 3.5 இலட்சத்திற்கும்‌ மேலுள்ள சூழ்நிலையில்‌, இதைப்போன்ற ஆலோசகர்களின்‌ நியமனங்கள்‌, காலிப்‌ பணியிடங்களை நிரப்பாமல்‌ அரசு நிர்வாகத்தினை நடத்துவதற்கு மறைமுகமாக உதவிக்‌ கொண்டிருக்கிறது. இப்போக்கு நீடித்தால்‌, இளைய சமூகத்தின்‌ அரசு வேலை என்ற கனவினை சீரழித்துவிடும்‌.

சிறப்புத்‌ திட்டச்‌ செயலாக்கத்‌ துறையில்‌ ஓய்வு பெற்ற அலுவலரை தற்காலிக ஆலோசகர்‌ பதவியில்‌ நியமனம்‌ செய்வது என்பது, தலைமைச்‌ செலயகப்‌ பணியாளர்களின்‌ தரத்தினை குறைத்து மதிப்பிடுவதோடு, தலைமைச்‌ செயலகப் பணியாளர்களின்‌ மாண்பினையும்‌ செயல்பாட்டினையும்‌ குலைக்கும்‌ வகையில்‌மேற்கொள்ளப்படும்‌ ஒரு நடவடிக்கையாகவும்‌ ஊழியர்‌ விரோத நடவடிக்கையாகவும்‌ சங்கம்‌ பார்க்கிறது.

5) தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தினையே அப்புறப்படுத்திவிட்டு, அரசுப்‌ பணிக்கு பணியாளர்களை தேர்வு செய்வதற்கான நிறுவனத்தினை ஒப்பந்தப்புள்ளி மூலமாக அமர்த்துவதற்கு வழிமுறைகளைக்‌ கண்டறிவதற்கான குழுவானது மனிதவள மேலாண்மைத்‌ துறையால்‌ அரசாணை எண்‌ 115-நாள்‌ 18.10.2022ல்‌ அமைக்கப்பட்டதை தமிழ்நாடு தலைமைச்‌ செயலகச்‌ சங்கம்‌ முதலமைச்சரின்‌ கவனத்திற்குக்‌ கொண்டு வந்தபோது, அதனை முதலமைச்சர்‌  உடனடியாகத்‌ தடுத்து நிறுத்தினார்‌.

திராவிட மாடல்‌ ஆட்சியில்‌, 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டினையும்‌ சமூக நீதியினையும்‌ காத்திடும்‌ பணியில்‌ சமரசம்‌ ஏதுமின்றி செயலாற்றி வரும்‌ தமிழக முதலமைச்சர்‌, தமிழ்நாடு அரசின்‌ பல்வேறு துறைகளில்‌ மேற்கொள்ளப்பட்டுவரும்‌ ஆலோசகர்கள்‌ நியமனங்களை முற்றிலுமாக கைவிட ஆணையிட வேண்டும்‌.

முதலமைச்சர்‌‌, இந்த விஷயத்தில்‌ உடனடியாகத்‌ தலையிட்டு, ஓய்வு பெற்ற பணியாளர்களை எந்தவகையிலும்‌ எந்த நிலையிலும்‌ மீண்டும்‌ அரசுப்‌ பணியில்‌ பணியமர்த்துவதையும்‌ ஏற்கனவே இதைப்போல்‌ அரசுப்‌ பணியிலிருந்து ஒய்வு பெற்ற பின்னர்‌ பல்வேறு துறைகளில்‌ ஆலோசகர்‌ போன்ற பல்வேறு நிலைகளில்‌ பணியமர்த்தப்‌பட்டுள்ளவர்களை உடனடியாக விடுவிக்கவும்‌

ஆலோசகர்கள்‌ பணியிடங்களில்‌ அரசுத்‌ துணைச்‌ செயலாளர்‌ நிலையில்‌ நிரந்தரப்‌ பணியிடங்களை புதியதாக உருவாக்கிடவும்‌ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’.

இவ்வாறு தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம்‌ கேட்டுக்‌ கொண்டுள்ளது.