உலக கழிவறை தினம், ஆண்டுதோறும் நவம்பர் 19 அன்று கடைபிடிக்கப்படுகிறது. இது சுகாதார அவசர நெருக்கடியையும், உலகளாவிய விழிப்புணர்வையும்  ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரப்பூர்வ நிகழ்வாகும்.


முக்கியத்துவம்:


2013-ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படும் இந்த நாள்,கழிவறை வசதிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் நீர் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்தல் நோக்கமாகும். மோதல்கள், பருவநிலை மாற்றம், இயற்கை பேரழிவுகள் மற்றும் புறக்கணிப்பு ஆகியவற்றின் காரணமாக கோடிக்கணக்கான மக்கள் துப்பரவு வசதியின்மையை எதிர்கொள்கின்றனர்.


மேலும், இந்த நாளானது, காலரா போன்ற கொடிய நோய்கள் பரவுவதைத் தடுப்பதன் மூலம் பொது மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரத்தை பராமரிப்பதில் முறையான கழிவறை வசதிகளின் இன்றியமையாத பங்கை சுட்டிக் காட்டுகிறது.



ஆய்வு:


 உலக அளவில் 3.5 பில்லியன் மக்கள் இன்னும் பாதுகாப்பான கழிவறை வசதியின்றி வாழ்கின்றனர். அதேபோல் 419 மில்லியன் மக்கள் திறந்தவெளி கழிவறையைப் பயன்படுத்துகின்றனர் என்று  ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலக சுகாதார அமைப்பு 2023-ல் நாள்தோறும் ஐந்து வயதுக்குட்பட்ட சுமார் 1,000 குழந்தைகளின் இறப்புகளுக்கு பாதுகாப்பற்ற நீர், சுகாதாரமற்ற சூழல் காரணம் என்று தெரிவித்துள்ளது. மேம்பட்ட சுகாதார வசதிகள் மூலம் ஆண்டுதோறும் 1.4 மில்லியன் உயிர்களைக் காப்பாற்றக்கூடும்.2.2 பில்லியன் மக்களுக்கு இன்னும் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை. மேலும் 2 பில்லியன் பேருக்கு அடிப்படை துப்புரவு சேவைகள் இல்லை. இதில் 653 மில்லியன் பேருக்கு எந்த வசதிகளும் கிடையாது.


"எங்கள் கழிவறை எங்கள் மரியாதை"


இந்தியாவில், உலக கழிவறை தினம் நாட்டின் திறந்தவெளி கழிப்பிடமில்லா சூழ்நிலையை பராமரிப்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்தும் ஒரு முக்கிய தருணமாக செயல்படுகிறது. இந்த ஆண்டு, இந்தியாவில் "எங்கள் கழிவறை எங்கள் மரியாதை" இயக்கம் தொடங்க உள்ளது. இது 2024 நவம்பர் 19 அன்று தொடங்கி மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 அன்று முடிவடைகிறது


தூய்மை இந்தியா இயக்கம் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும் திறந்தவெளி கழிப்பிடத்தை ஒழிப்பதற்கும் இந்தியாவின் முயற்சிகளின் ஒரு மைல்கல்லாக உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது ” இது 2014-ல் தொடங்கப்பட்டதிலிருந்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் பயணத்தைக் குறிக்கிறது. தூய்மை இந்தியா இயக்கம் – ஊரகப் பகுதியில், 11.73 கோடி வீட்டுக் கழிவறைகள் கட்டுவது உட்பட கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, திறந்தவெளி கழிவறை இல்லாத 5.57 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உருவாகியுள்ளன. இந்த முயற்சி பொது சுகாதாரத்திற்கு கணிசமாக பங்களித்தது, 2014-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2019-ம் ஆண்டில் 300,000 லட்சத்திற்கும் குறைவான வயிற்றுப்போக்கு இறப்புகள் நிகழ்ந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.