தமிழகத்தில் டெங்கு காலம் தொடங்கி இருக்கிறது  ஆங்காங்கே சிற்றூர் பேரூர் கிராமங்கள் பேதமின்றி ஆகாயம் தன் கடமையான மழைப்பொழிவை  செவ்வனே செய்கின்றது.  கண்ணுக்குத்தெரியாத எதிரியான கொரோனா வைரஸுடன் நாம் போராடிக்கொண்டு இருக்கும் இந்த சூழ்நிலையில்  நமது நெடுநாள் கண்ணுக்கு தெரியும் எதிரியான கொசுவுடனும் போராடும்படியாக காலநிலை மாற்றம் கொண்டு வந்து விட்டிருக்கிறது. கொசுக்கள் நமக்கும் டெங்கு வைரஸுக்கும் இடையே வேண்டாத தொடர்பை ஏற்படுத்துகின்றன.  டெங்கு நோயை உருவாக்கும் டெங்கு வைரஸ் கொசுவானது , பாதிக்கப்பட்டவரின் ரத்தத்தை உறிஞ்சும்போது சேர்த்து வைரஸையும் உறிஞ்சி, பாதிக்கப்படாத ஆரோக்கியமான ஒருவரை கடிக்கும்போது அந்த வைரஸை அவருக்கு பரிசாக வழங்கிவிடுகிறது.

 



 

எனவே டெங்கு நோய் ஒழிப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் வழிமுறைகளில் கண்ணுக்குத்தெரிந்த இந்த கொசுக்களுடன் நமது போராட்டம் ஆரம்பமாகிவிட்டது ஆம்.. போர் ஆரம்பமாகிவிட்டது.  இந்தப் போரானது அடுத்த ஐந்து மாதங்களுக்கேனும் நடக்கும்.  எதிரியைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது  நமது எதிரியின் பெயர் "ஏடிஸ்" (Aedes) கால்களில் வரிவரியாக புலியின் உடலில் இருக்கும் பட்டைகள் போன்று இருப்பதால் "புலிக்கொசு" என்றும்  செல்லமாக அழைக்கப்படுகிறாள். ஆம்.. தான் வயிற்றுக்குள் வைத்திருக்கும் முட்டைகளை வளர்க்கவேண்டி தாயான பெண் கொசு தான் விரட்டி விரட்டி நம்மை கடிக்கிறது.  நம்மைப்போன்றே இரவில் துயில் கொண்டு பகலில் ஆக்டிவாக இருப்பவை.  இருப்பினும் எப்படி நாமும் ராக்கோழிகளாக மாறி நம்மைப் பழக்கப்படுத்திக்கொண்டோமோ அதைப்போல இவையும் இப்போதெல்லாம் ராப்பகல் பேதமின்றி கடிக்கின்றன. ஏடிஸ் பெண் கொசுவானது இரண்டு வாரம் முதல் நான்கு வாரங்கள் வரை உயிர் வாழும். தனது வாழ்நாளில் குறைந்தபட்சம் ஆயிரம் முட்டைகளை ஐந்து தவணைகளில்  இடும். பட்டாம்பூச்சியைப் போலவே metamorphosis எனப்படும் முட்டையிலிருந்து பெரிய கொசுவாக உருமாறும். 

 



 

இந்த கொசுக்கள் 

முட்டை (Eggs) (2 முதல் 7 நாட்கள்) 

⬇️

கொசுப்புழு (Larva) ( 4 நாட்கள்)

⬇️ 

ப்யூபா ( கூட்டுப்புழு) (pupa)( 2 நாட்கள்)

⬇️

கொசு (adult mosquito) ( 2 வாரம் முதல் 4 வாரம்) 

 

கொசுவின் வளர்ச்சிப்படி நிலையில் நீரைச்சார்ந்திருக்கும் பருவம் (Aquatic phase)  நிலத்தைச்சார்ந்திருக்கும் பருவம்( Terrestrial phase)  என்று இரண்டாக பிரிக்கப்படுகிறது முட்டை மற்றும் கொசு ஆகிய இரண்டும் நீரைச்சாராத பருவங்கள் உபயோகப்படுத்தப்படாத தண்ணீர் தொட்டிகள், ப்ளாஸ்டிக் சாமான்கள் போன்றவற்றில் தண்ணீர் இல்லாமல் இருந்தாலும் அவற்றில் இடப்பட்ட முட்டைகள் ஒருவருடம் வரை உயிருடன் இருக்கும் மீண்டும் சிறு தூரல் விழுந்து தண்ணீர் 10 மில்லி அளவு தேங்கினால் கூட போதும் உடனே லார்வா எனும் புழுவாக மாறிவிடும்.  முட்டையானது  லார்வா மற்றும் ப்யூப்பாவாக மாறுவதற்கு நீர் அவசியம். இதன்பொருட்டு நீர் எங்கெல்லாம் தேங்குமோ அந்த இடங்களையெல்லாம் அறிந்து லாவகமாக சாதுர்யமாக ஏடிஸ் கொசு முட்டையிடும் அந்த விசயத்தில் சிங்கத்தை விட புலியை விட புத்தி சாதுர்யம் கொண்ட தந்திரக்கார கொசு இந்த ஏடிஸ்.  நாம் தேவையற்றது என்று வீட்டைச்சுற்றி போட்டுவைக்கும் சிரட்டைகள், ப்ளாஸ்டிக் சட்டிபுட்டி சாமான்கள், மரத்தின் பட்டைகள், செடி வளர்க்கும் தொட்டில்கள், ரப்பர் ஃப்ளோர் மேட்டுகள், டயர்கள், ஃப்ரிட்ஜின் கீழ்ப்புறம் இருக்கும் நீர் சேரும் ட்ரே  என்று ஒவ்வொன்றாக எதையும் விடாமல் ஆங்காங்கே முட்டைகளை இட்டுச்செல்லும்.

 

சுமார் அரைக்கிலோமீட்டர் சுற்றளவிற்கு பறக்கும்தன்மை அதற்கு உண்டு. பெண் டெங்குக் கொசுக்களின் வேலை என்ன தெரியுமா ஆண் கொசுவுடன் இணைசேர்ந்து கர்ப்பம் தரித்தல் தான் உண்டாக்கிய முட்டைகளை வளர்ப்பதற்காக கோரப்பசியுடன் மனிதர்களைத் துரத்தி துரத்தி கடித்து ரத்தம் உறிஞ்சுதல் முட்டைகளை பக்குவமாக நீர் சேரும் இடங்களில் இடுதல் தன் வாழ்நாள் வேலையாக இவற்றை தொடர்ந்து செய்துகொண்டே இருக்கின்றன இத்தனை சாதுர்யமான இந்த கொசுக்களை ஒழிப்பது என்பது சாத்தியத்துக்கு அப்பாற்பட்டது என்ற முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். சரி இவற்றை எப்படி கட்டுப்படுத்துவது எப்படி என்பதை அறிவோம் வாருங்கள். கொசு முட்டையிடும் இடங்களான வீட்டிற்கு வெளிப்புறம் இருக்கும் ப்ளாஸ்டிக் சட்டிமுட்டி சாமான்களை எடுத்து தண்ணீர் புகாத வண்ணம் வைப்பது. உபயோகிக்காத அம்மி உரலை கவிழ்த்துப்போடுவது சேமித்து வைக்கும் தண்ணீரை மூடிபோட்டு வைப்பது அல்லது துணி வைத்து வடிகட்டி வைப்பது எங்கெல்லாம் சிறிதளவு தண்ணீர் தேங்கி நிற்குமோ அனைத்தையும் கண்டு உடனே அப்புறப்படுத்துவது.
  டயர்களை உடனே எடுத்து அப்புறப்படுத்துவது அல்லது நீர் தேங்காமல் துளையிட்டு வைப்பது. 

 



 

தண்ணீர் தொட்டிகளை வாரம் ஒருமுறையேனும் ப்ளீச்சிங் பவுடர் போட்டு நன்றாக தேய்த்து சுத்தம் செய்வது. இது முட்டைப்பருவத்தில் இருக்கும் கொசுக்களை கொல்ல உதவும். பகல் நேரம் கொசுக்கள் நம்மை கடிக்கின்றனவா? என்று பார்க்க வேண்டும். அவ்வாறு கடித்தால் கட்டாயம் வீட்டைச்சுற்றி ஒரு ரவுண்ட்ஸ் செல்லவேண்டும். கட்டாயம் அந்த கொசுவின் இருப்பிடங்கள் கண்ணில் தோன்றும். அவற்றை உடனே அழிக்க வேண்டும். அக்கம்பக்கத்தில் இருக்கும் வீடுகளுக்கும் கூற வேண்டும். காரணம் ஒரு தெருவில் ஒரு வீட்டில் டெங்கு கொசு வளர்ந்தால் அந்த ஏரியாவே டெங்குவால் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. கட்டாயம் முழுக்கை சட்டைகள் அணிய வேண்டும். பேண்ட் அணிவது சிறந்தது. 




அரைக்கால் ட்ரவுசர்களை தவிர்க்கலாம். குழந்தைகளுக்கு க்ளவுஸ்/ சாக்ஸ் அணிவித்து முழுக்கை சட்டை/ முழுக்கால் பேண்ட் போடலாம்.  உறங்கும்போது கொசு வலைக்குள் அனைவரும் உறங்குவது நல்லது. முடிந்தவர்கள் வீட்டின் ஜன்னல்கள் அனைத்திலும் கொசுவலை நிரந்தரமாக அடிக்கலாம்.கொசுக்களைக் கொல்லும் ஆவியாகும்  திரவங்களை(vapourised Liquid mosquito repellants)  பகல் நேரத்திலும் உபயோகிக்க வேண்டும்.  கொசுக்கடியில் இருந்து காக்கும் களிம்புகளை (Mosquito repellant creams) கை கால் முகங்களில் தடவிக்கொள்ளலாம்.  கொசு உருவாகுவதை தடுப்பதும் அந்தக்கொசு நம்மை கடிக்காமல் காத்துக்கொள்வதுமே டெங்கு நோய் பரவல் தடுப்பில் முக்கியமான அம்சங்கள் 


இதில் இன்னொரு கெட்ட செய்தி யாதெனில் இந்த ஏடிஸ் வகை கொசு இனம்  ஜிகா வைரஸையும் சேர்த்து பரப்பிவிடக்கூடும். ஆனால் அதிலும் ஒரு நல்ல விசயம் இருக்கிறது 

ஆம்.. டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அனைத்துமே ஜிகா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளாக இரட்டிப்பு பலன்தரும். எனவே எச்சரிக்கையுடன் இருப்போம். காய்ச்சல் அனைத்தும் கொரோனா மட்டுமே அல்ல. கூடவே டெங்கு மற்றும் ஜிகா குறித்த விழிப்புணர்வோடு இருப்போம் என்கிறார்.