ஏய்யா...போன வருஷம் இருந்த தலைவர் பதவியை விட, இப்போ கிடைச்சிருக்குற பதிவு பெருசா? டெல்லியில் மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற பின்பு எல்.முருகனிடம் அவரது பெற்றோர் தொலைபேசியில் கேட்ட முதற்கேள்வி இதுதான்.


கிட்டத்தட்டு ஓராண்டு காலம் தமிழ்நாடு மாநில பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், மாற்றியமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டார். நாமக்கல் மாவட்டம், பரமத்தியை அடுத்த கோனூர் பகுதியில் எல்.முருகனின் பெற்றோர் தினசரி விவசாயக் கூலிகளாக வேலை செய்து வருகின்றனர். தன் மகன் 130 கோடி இந்தியர்களின் பிரதிநிதி என்ற கர்வத்துக்கு இம்மி அளவுக்கும் கூட இடம் தரவில்லை இந்தப் பெற்றோர். இன்னும், சொந்தக் காலில் தன்னிச்சையாகவே  வாழ்ந்து வருகின்றனர். 


பிரபல ஆங்கில நாளிதழான டைம்ஸ் ஆப் இந்தியா எல்.முருகனின் பெற்றோரை நேர்காணல் எடுத்துள்ளது. அதில், தங்களுக்கென்று சொந்தமாக சிறு காணி நிலம் கூட அவர்களிடம் இல்லை என்ற தகவல் உண்மையில் வியக்க வைக்கிறது. எல்.முருகன் குழந்தைப் பருவத்திலேயே மிகவும் கடினமான பொருளாதார சூழ்நிலையை சந்தித்தவர். முருகனின் தந்தை லோகநாதன் உறவினர்/ நண்பர்களுடன் கடன் வாங்கித்தான் எல்.முருகனை படிக்க வைத்திருக்கிறார். சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில், இளங்கலை பட்.டத்தையும் அறிவுசார் சொத்துரிமை குறித்து பட்டயப்படிப்பு முடித்து, சென்னைப் பல்கலைக்கழகத்தில் சட்ட முதுகலை சட்டப்பட்டமும் பெற்றுள்ளார். 15 ஆண்டுகள் வழக்கறிஞராக அனுபவம் கொண்ட இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். மேலும்  தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். 



தனது மகனின் இந்த சாதனை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த  எல்.முருகன் தாய் வருடம்மாள், "இது எங்கள் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. நாங்கள் அதை விரும்பவும் இல்லை. எங்கள் இளைய மகன் சில வருடங்களுக்கு முன்பு மரணமடைந்து விட்டார். எங்கள் மருமகள், குழந்தைகளுக்காக உழைக்கிறோம். சென்னையில் எங்களால் இருக்க முடியாது. கோனூர்தான் சரியாக இருக்கும்" என்று தெரிவித்தனர். 




எல்.முருகனின் பெற்றோர் மிகவும் எளிமையானவர்கள் என்பதுதான் கோனூர் பகுதி மக்களின் கருத்தாக உள்ளது.  கட்சியின் மாநிலத் தலைவர், நாட்டின் இணை அமைச்சர் என்பதெல்லாம் எவ்வளவு முக்கியமான நிகழ்வு! ஆனால், அவர்களது வாழ்க்கையில் எந்தவித தேவையற்ற ஆடம்பரமும் இல்லை" என்று தெரிவிக்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு  நியாயவிலைக் கடையில் வழங்கப்பட்ட  கொரோனா நிவாரண நிதியை எல்.முருகனின் பெற்றோர் மக்களுடன் மக்களாக வரிசையில் நின்று வாங்கி சென்ற சம்பவத்தை ஊர் மக்கள் வியப்புடன் தெரிவிக்கின்றனர். 




இதற்கிடையே, மத்திய அமைச்சரவையில் இணையமைச்சர் பொறுப்பை ஏற்றபிறகு முதன்முறையாக சென்னை வந்த எல்.முருகன், மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் தென்மண்டல தலைமை இயக்குனர் திரு. வெங்கடேஸ்வர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை சந்தித்தார்.  "சமூக ஊடகங்களில் அதிநவீன தொழில்நுட்பமான வாட்ஸ் அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகியவற்றைப் பயன்படுத்தி மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டுள்ள 5 கிலோ இலவச அரிசி / கோதுமை திட்டத்தின் பயன்கள் குறித்த செய்தியினை மக்களிடம் எடுத்து செல்லவேண்டும். நாட்டில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கவும், மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் மத்திய அரசு எடுத்துவரும் முயற்சிகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்" என்று அறிவுரை வழங்கினார்.