புதுச்சேரியைச் சேர்ந்த 26 வயதான ஹேமச்சந்திரன் என்ற இளைஞர், சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் எடையை குறைப்பதற்கான சிகிச்சை மேற்கொண்டார். ஆனால், சிகிச்சை தொடங்கி சுமார் 15 நிமிடங்களிலேயே, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இளைஞர் உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொள்ள 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், 2 நாட்களில் இளைஞர் உயிரிழப்பு குறித்து விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
உடல் எடை குறைப்பதற்காக மருத்துவமனையை நம்பி சென்ற இளைஞர், உயிரிழந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவர் சொல்வது என்ன?
இந்த தருணத்தில் உடல் பருமன் தொடர்பான சிகிச்சை குறித்து மருத்துவர் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது,
உடல் எடை அதிகரிக்கக் காரணம் என்ன?:
மக்களின் வேலை செய்யும் முறையானது, தற்போது மாறியுள்ளது, வீட்டிலிருந்தே வேலை செய்கிறார்கள், உணவு வாங்குவதற்கு கூட செயலி வந்துவிட்டதால், வேலை செய்வது சற்று குறைந்து விட்டது. உடற்பயிற்சி செய்வது குறைந்துவிட்டது. இரவு நேர வேலை செய்வது, குறிப்பாக ஐடி பணிபுரிபவர்களில் ஹார்மோன் இம்பேலன்ஸ் ஏற்படுகிறது. இதன் காரணமாக உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகிறது.
தைராய்டு இருந்தால், அதனால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆகையால், அதற்கான மருத்துவரை அணுகி மருத்துவம் பார்க்க வேண்டும்.
உடல் எடையை குறைக்க வழி:
உடல் எடை குறைப்பதற்கு என்று குறுகிய வழியே கிடையாது. உடல் எடையை குறைப்பதற்கான எளிய முறை என்னவென்றால் தினசரி உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் வேண்டும். தினசரி 1 மணி நேரம் உடற்பயிற்சி செய்வது நல்லது. 1 மணி நேரம் உடற்பயிற்சி செய்வது சிரமம் ஏற்படுமாயின், அலுவலகத்துக்கு வேலை செய்யும் போதே, உடற்பயிற்சி தொடர்பான சில செயல்பாடுகளை மேற்கொள்ளுதல் வேண்டும். அலுவலகத்துக்கு செல்லும் போது நடந்து செல்லலாம்.
உணவு முறையில் கட்டுப்பாட்டுடன் இருங்கள். குறிப்பாக பஜ்ஜி போண்டா, வடை போன்றவற்றை அளவுடன் எடுத்துக் கொள்ளுங்கள்.
தினமும் 10 நிமிடம் குறைந்தது 10 நிமிடம் உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள், தினமும் 10,000 ஸ்டெப் நடக்க வேண்டும்.
உடல் எடையை குறைக்கும் மருத்துவ முறைகள்:
உடல் எடையை குறைப்பதற்கு பல மருத்துவ முறைகள் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்க 2 முறைகள் உள்ளன.
- மெடிக்கல் மேனேஜ்மென்ட்
இந்த முறையில் ஊசி மூலம் மருந்துகளை அளிப்பதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும்.
- அறுவை சிகிச்சை முறை
அறுவை சிகிச்சையில் குறிப்பாக 2 முறைகள் உள்ளன. லைப்போ செக்சன் முறை மூலம் குறிப்பிட்ட இடத்தில் உள்ள உடல் பருமனை குறைக்கும் முறையாக உள்ளது. அதாவது கைகளிலோ அல்லது இடுப்பு பகுதிகளிலோ உள்ள கொழுப்பை உருக்கி எடுக்கப்படுகிறது.
பேரியாட்ரிக் சர்ஜரி:
பேரியாட்ரிக் சர்ஜரி முறையில்150 கிலோ எடை உள்ளவர்கள், 40 பிஎம் ஐ க்கு மேற்பட்டவர்கள் இந்த முறையை பின்பற்றலாம். மேலும் சிலருக்கு இதுதான் நிரந்தரமாக உடல் எடையை குறைப்பதற்கான வழிமுறையாக உள்ளது.
பேரியாட்ரிக் சர்ஜரி முறையில் எண்டோஸ்கோபி மற்றும் கேஸ்ட்ரிக் பைபாஸ் ஆகிய 2 முறைகள் உள்ளன. எண்டோஸ்கோபி முறையில், எண்டோஸ்கோபி மூலம் வயிற்றை இழுத்து பிடித்து தைக்கப்படும். இதையடுத்து, 4 இட்லி சாப்பிட வேண்டிய இடத்தில் 1 இட்லி தான் சாப்பிட முடியும் என்ற சூழல் உருவாகும். இதையடுத்து உடல் எடை தானாக குறையும்.
கேஸ்ட்ரிக் பைபாஸ்:
வயிற்றையே பைப்பாஸ் செய்து சிறியதாக்கி, அதை நேரடியாக உணவுக்குழல், அதற்கு பின் குடல் வழியாக கீழங்கிறவதுதான் .
இந்த பேரியாட்ரிக் சிகிச்சை மூலம் 150 கிலோ உடல் எடை உள்ளவர்கள் குறைந்தபட்சம் மினிமம் 30- 40 கிலோ குறைய வாய்ப்புள்ளது .
முன்பு பேரியாட்ரிக் சிகிச்சை மோசமாக நடக்கும் என்ற நிலை மாறி, தற்போது இந்த சிகிச்சையானது நேர்த்தியாக நடைபெறுகிறது. 98 சதவிகிதம் வெற்றிகரமாகத்தான் நடைபெறுகிறது.
பாதிப்பு ஏன்?
துரதிஷ்டவசமாக ஒரு சில இடங்களில்,சில விசயங்களினாலோ அல்லது ஏற்கனவே உடலில் பிரச்னை இருந்தாலோ அல்லது அனஸ்தீசியா கொடுப்பதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டாலோ மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. பொதுவாக, இந்த சிகிச்சை முறையில் 90 முதல் 98 சதவிகிதம் வெற்றிவாய்ப்பு உள்ளது என மருத்துவர் அஸ்வின் தெரிவித்தார்.
இந்நிலையில், புதுச்சேரியைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் ஹேமச்சந்திரன் உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொள்ள 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ள நிலையில், இளைஞர் இறப்பு குறித்தான காரணம் தெரியவரும்.