புதுச்சேரி: உடல் எடையை குறைக்க செய்த அறுவை சிகிச்சையில் புதுச்சேரி இளைஞர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். தவறான சிகிச்சையால் உயிரிழப்பு ஏற்பட்டதாக அவரது குடும்பத்தினர் சென்னை சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி. நகரைச் சேர்ந்தவர் செல்வநாதன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகரான இவர், மார்க்கெட் கமிட்டி ஊழியராக உள்ளார். இவருக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என 2 மகன்கள் இருந்தனர். இவர்கள் இரட்டையர்கள் ஆவர். இவர்களுக்கு வயது 26. இதில் ஹேமச்சந்திரன் பிஎஸ்சி முடித்து விட்டு டிசைனிங் பணியில் உள்ளார். உடல் பருமன் காரணமாக சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார்.
கார்டியாக் அரெஸ்ட்
இந்நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை செய்ய முடிவு எடுக்கப்பட்டு, அறுவை சிகிச்சை தொடங்கிய 10 நிமிடங்களில் ஹேமச்சந்திரன் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர். அவர் கார்டியாக் அரெஸ்ட் காரணமாக இறந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், தவறான சிகிச்சை தந்ததால் இளைஞர் இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் பம்மல் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். உடல்நல ஆரோக்கியத்துடன் இருந்த அவருக்கு அறுவை சிகிச்சையின் போது மயக்க மருந்து கொடுத்ததில் பிரச்சினை உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர். இதைத்தொடர்ந்து உடலை பெற்றுக்கொண்டு நேற்று புதுச்சேரி எடுத்து வந்தனர். இன்று மாலை இறுதி சடங்குகள் நடந்தன.
காவல் நிலையத்தில் செல்வநாதன் அளித்த புகாரில் கூறியிருப்பதவது....
புதுச்சேரியில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் லாரி கிளீனர் ஆக பணிபுரிந்து வருகிறேன். எனது மூத்த மகன் ஹேமச்சந்திரன் 150 கிலோ எடையுடன் உடல் பருமன் நோயால் அவதிப்பட்டு வந்தார். உடல் எடையை குறைக்க யூடியூப் மூலமாக சென்னையில் உள்ள மருத்துவரை தொடர்பு கொண்டார். அறுவை சிகிச்சைக்கு ரூ.8 லட்சம் செலவாகும் என தெரிவித்தனர்.
youtube மூலமாக மருத்துவர் தொடர்பு
பின்னர் பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனை மூலம் அறுவை சிகிச்சை செய்ய அதே டாக்டர் மூலம் ஏற்படானது. இதற்கு ரூ.4 லட்சம் செலவாகும் என்று தெரிவித்தனர். தொடர்ந்து கடந்த 22-ம் தேதி, டாக்டரால் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது ஹேமச்சந்திரனுக்கு உடல்நலம் குன்றிக் கொண்டிருப்பதாக தெரிவித்தனர். ஆனால் அவர் இறந்து விட்டார். தவறான சிகிச்சை அளித்த டாக்டர் மற்றும் பம்மலில் உள்ள அறுவை சிகிச்சை நடந்த மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறைக்கு அளித்த புகரில் கூறியுள்ளார்.