வரலாற்றில் இடம் பதித்த திருவக்கரை

திருவக்கரை தேசிய கல் மர பூங்கா ஒரு புவியியல் பூங்காவாகும். இந்த பூங்கா விழுப்புரம் மாவட்டத்தில் திருவக்கரை எனும் இடத்தில் அமைந்து உள்ளது. இந்த பூங்கா இந்தியா புவியியல் ஆய்வு மையத்தால் பராமரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தொல்மர எச்சங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவக்கரை, நெய்வேலி, அரியலூர் பகுதிகளிலும், தொல் இலை எச்சங்கள் கிடைக்கின்றன.

Continues below advertisement

கல்மரம் ( FOSSIL WOOD ) எனக் குறிப்பிடப்படுவது இன்று கல்லாகிப் போன பண்டைய காலத்து மரங்களையே ஆகும். இந்தியாவில் கல் மரங்கள் அதிகமாகக் காணப்படுவது நம் தமிழகத்தில் தான். விழுப்புரம் மாவட்டத்தில், புதுச்சேரி மாநில எல்லையில் உள்ள திருவக்கரை எனும் கிராமத்திலிருந்து  ஒரு கி.மீ. தொலைவில், மிகவும் அரிய, முழுவதும் கல்லாக மாறிப்போன மரங்கள் ஏராளமாக இருக்கின்றன. இந்திய புவியியல் ஆய்வுத் துறை (GEOLOGICAL SURVEY OF INDIA) இந்தப் பகுதியில் கல்மரப் பூங்கா ஒன்றினை அமைத்துக் காத்து வருகிறது. இந்தப் பூங்காவில் இயற்கையாக படுக்கைவாக்கில் கிடக்கும்  மரங்கள் உள்ளன. பக்கத்திலிருந்து கொண்டுவரப்பட்ட கல்மரத்துண்டுகள் காட்சிக்காக செங்குத்தாக  நிறுத்திவைக்கப் பட்டுள்ளன.

இங்கே சுமார் 247  ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மேடான நிலப்பகுதியில் சுமார்  200 க்கும் அதிகமான கல்மரங்கள் உள்ளன. இந்த மேட்டுப்பகுதி கடலூர் மணற்பாறைகள் எனும் படிவப் பாறைகளால் ஆனது. இந்தப் பாறைகளில்தான் கல்மரங்கள் படிந்துள்ளன. சில மரங்கள் 30 மீ. நீளமும் 1.5 மீ குறுக்களவும் கொண்டவை. இந்த மரங்களில் வேர்ப் பகுதியோ கிளைகளோ இல்லை. எல்லா கல்மரங்களும் படுக்கை வாட்டிலேயே கிடைக்கின்றன. ஆதலின் வேறு எங்கிருந்தோ ஆற்றுவெள்ளத்தில் அடித்துக் கொண்டுவரப்பட்டு இங்கிருந்த நீர்நிலைகளில் படிந்திருக்க வேண்டும்.

Continues below advertisement

மரங்களின் பட்டை போன்ற அமைப்புகள், வட்ட வளையங்கள் (Annular Rings),  கணுக்கள்  (Nodes) போன்ற அனைத்தும் இந்தக் கல்மரங்களில் அழகாகக் காணபடுகின்றன. எம்.சொன்னோர்ட் எனும் ஐரோப்பிய அறிஞர் இந்தப் பகுதியில் கல்மரங்கள் உள்ளதை உலகுக்கு அறிவித்தார். இங்குள்ள மரங்களில் பூக்கும் தாவரங்கள், பூவாத் தாவரங்கள் ஆகிய இரு வகைகளும்  உள்ளன. புன்னைக் கட்டாஞ்சி, ஆமணக்கு வகை மரங்களும், புளியமரக் குடும்பத்தை சேர்ந்த மரங்களும் இங்கே இனம் காணப்பட்டுள்ளன.

"கல்லாகச்சமைதல்" என்னும் முறையில் இங்கு இருந்த 77 மரபடிமங்கள் சிலிக்கா எனப்படும் மணல் துகள்களாக மாற்றி அதனுள் இருக்கும் நீரை இறுக்கத்தினால் வெளி ஏற்றி மேல்படிந்த இந்த நிலை அடைந்தன என கூறலாம் .உலகில் உள்ள சில தொல்லியில் பூங்கா மட்டுமே மட்டும் இங்கிருக்கும் படிமங்கள் போல் பாதுகாப்பாக இருக்கும் அதற்கும் காரணம் இங்கு இருந்த சிலிக்கா மீது எரிமலை சாம்பல் படிந்து இருக்க வேண்டும்.

(இந்தப் பகுதி இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன் பெரும்  நீர்நிலையாய்  இருந்தது. அதையொட்டி இருந்த நிலப் பகுதிகளில் பெருங்காடுகள் இருந்தன. அக்காடுகளில் கனிதரும் வகையை சேர்ந்த மரங்களும் கனிதரா வகை மரங்களும் இருந்தன. இப்பெருமரங்களை அடித்துக் கொண்டுவரும் அளவிற்கு வெள்ளப்ப்பெருக்கு அக்காலத்தில் நிகழ்ந்திருக்கிறது.) ஆனால், திருமாலின் சீற்றத்திற்கு ஆளான அசுரர்கள் அந்த நெடியோனால் அழிக்கப்பட்டனர் . அந்த அசுரர்களின் எலும்புகளே இந்த நெடிய கற்கள் என்பது உள்ளூரில் வழங்கும் புராணக் கதை.

சென்னையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனத்திற்கு தெற்கே பத்து கி.மீ. தொலைவில், கூட்டேரிப்பட்டு எனும் ஊர் உள்ளது. அங்கிருந்து மைலம் வழியே புதுச்சேரி செல்லும் சாலையின் தெற்கே உள்ளது- திருவக்கரை. சென்னையிலிருந்து 150 கி.மீ.; புதுச்சேரியிலிருந்து 3௦ கி.மீ. காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை திறந்திருக்கும் கல்மரப் பூங்காவிற்கு, சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.