மூன்றாம் நிலை மருத்துவ பராமரிப்பு சேவைகள் கொண்ட தமிழ்நாட்டின் முதன்மை மருத்துவமனைகளில் ஒன்றாக கருதப்படும் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி நடத்திய கொரோனா தடுப்பூசி பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.
2600க்கு அதிகமான மருத்துவ படுக்கைகள் கொண்ட கிருத்தவ மருத்துவக் கல்லூரியில்,10, 600 சுகாதார ஊழியர்கள் பணியாற்றிவருகின்றனர். நாடு முழுவதும் உள்ள சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முதற்கட்ட பணிகளை மத்திய அரசு கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கியது. வேலூர் மருத்துவக் கல்லூரியில் 8991 சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
2021 ஜனவரி 21 முதல் ஏப்ரல் 30 வரை 8991 (84.8%) பேருக்கு தடுப்பூசி போட்டது. இதில், 93.4% பேர் அஸ்ட்ரா ஜெனிகா /ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலிருந்து தொழில்நுட்ப பரிமாற்றம் மூலம் தயாரிக்கப்பட்ட ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை போட்டுக்கொண்டனர். மற்றவர்கள், பாரத் பயோக் டெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐசிஎம்ஆர்) மற்றும் புனேவில் உள்ள தேசிய வைராலாஜி மையம் இணைந்து உருவாக்கிய கோவாக்சின் தடுப்பூசியை போட்டுக் கொண்டனர். இவர்களிடம், கொரோனா தடுப்பூசி செயல்திறன் மற்றும் பாதக விளைவுகள் குறித்து கிருத்தவ மருத்துவக் கல்லூரி ஆய்வாளர்கள் தங்கள் அறிக்கையை தற்போது சமர்பித்துள்ளன.
Covaxin Protection: உருமாறிய கொரோனாவுக்கு எதிரானதா கோவாக்சின்? ஆய்வு சொல்வது என்ன?
ஆய்வு முடிவுகள்:
2021 பிப்ரவரி 21 முதல் மே 19 வரையிலான காலகட்டத்தில் 1350 மருத்துவ சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சராசரி (இடைநிலை வரம்பு) வயது 33 ஆக இருந்தது.
முதல் டோஸ் எடுத்துக் கொண்ட பிறகு, கொரோனா நோய்த் தொற்று பாதிப்புக்கு உள்ளான சராசரி காலஅளவு 77 நாட்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த சராசரி காலளவு, 2021 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்தியாவில் இரண்டாவது உச்சநிலை பாதிப்புடன் ஒத்துப்போகிறது.
இரண்டாவது தடுப்பூசி டோஸ்கள் போட்டுக் கொண்ட 33 மருத்துவ சுகாதாரப் பணியாளர்கள் குறைந்தது 2 வாரங்களுக்குள் கொரோனா நோய்த் தொற்று அறிகுறிகளை உருவாக்கினர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் ((இங்கு சுகாதாரப் பணியாளர்கள்) தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களை விட, முதல் டோஸ் மட்டும் போட்டுக் கொண்ட கொரோனா நோயாளிகள் 70% கூடுதல் பாதுகாப்பை பெறுகின்றனர். இரண்டாவது தடுப்பூசிகளை போட்டுக் கொண்டவர்கள் 77% கூடுதல் பாதுக்காப்பை பெறுகின்றனர்.
உலகின் முதல் சிங்கிள் டோஸ் கொரோனா தடுப்பூசி! - சுகாதார நிறுவனப் பட்டியலில் இடம்பெற்றது
அதேபோன்று, தீவிர நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு - ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் (NEEDED OXYGEN THERAPHY) மற்றும் தவிர சிகிச்சைப் பிரிவில் (NEEED ICU CARE) அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில், தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களை விட முதல் டோஸ் மட்டும் போட்டுக் கொண்டவர்கள் முறையே 94 மற்றும் 95% கூடுதல் பாதுகாப்பையும், இரண்டு டோஸ் போட்டுக் கொண்டவர்கள் முறையே 92 மற்றும் 94 சதவிகித கூடுதல் பாதுகாப்பையும் பெறுகின்றனர்.
பின்குறிப்பு:
முன்னதாக, கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் மற்றும் 2வது டோஸ்களுக்கான இடைவெளியை 12-16 வாரங்களாக நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
மேலும், கோவேக்சின், கோவிஷீல்டு அல்லது ஸ்புட்னிக் வி அனைத்துத் தடுப்பூசிகளின் செயல்திறனும் ஏறக்குறைய சமமாக இருப்பதாகவே இதுவரை கிடைக்கப் பெற்றுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. எனவே குறிப்பிட்ட தடுப்பூசியை தான் போட்டுக்கொள்ள வேண்டும் என்று இல்லாமல் உங்கள் பகுதியில் எந்தத் தடுப்பூசி போடப்படுகிறதோ அதனை செலுத்திக்கொண்டு, உங்களையும் உங்களது குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்