நோய் எதிர்ப்புத் தன்மைக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ள இந்திய விஞ்ஞானிகள் (National Technical Advisory Group on Immunization (NTAGI)), கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸுக்கும் இரண்டாவது டோஸுக்குமான இடைவெளியை 12-16 வாரங்களாக நீட்டிப்பதற்கான  எந்த தரவுகளும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.   


முன்னதாக, கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸுக்கும் இரண்டாவது டோஸுக்குமான இடைவெளி 12 முதல் 16 வாரங்களாக நீட்டித்து டாக்டர் என் கே அரோரா தலைமையிலான நிபுணர் குழு (COVID Working Group) பரிந்துரை செய்ததாகவும், இதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதாகவும், சுகாதாராத் துறை கடந்த மே 16ல் விளக்கம் அளித்தது.


மேலும், மருத்துவ ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு (குறிப்பாக இங்கிலாந்தில் இருந்து) கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கான இடைவெளியை நீட்டிக்க செயற்குழு ஒப்புதல் தெரிவித்தது என்றும் மத்திய அரசு தெரிவித்தது. 




இந்நிலையில், " தடுப்பூசிக்கான இடைவெளியை அதிகரிப்பது தொடர்பான எந்த தரவுகளும் இல்லை" என நோய் எதிர்ப்புத் தன்மைக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவில் (NTAGI ) இடம்பெற்றுள்ள விஞ்ஞானிகள் குழு தெரிவித்தது. 14 உறுப்பினர்கள் கொண்ட இக்குழுவில், மூன்று விஞ்ஞானிகள் நிபுணத்துவ உறுப்பினர்களாக உள்ளனர். 


அரசு தொற்றுநோயியல் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் எம்.டி.குப்தே இதுகுறித்து ஆங்கில நாளிதழிடம் தெரிவிக்கையில்," முதல் டோஸுக்கும் இரண்டாவது டோஸுக்குமான இடைவெளியை 8 முதல் 12 வரை அதிகரிக்கலாம் என உலக சுகாதார அமைப்பால் அறிவுறுத்தியது. இதற்கு,NTAGI முழு ஆதரவளித்தது. 8 முதல் 12 வார இடைவெளி என்பது அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒன்று, 12 முதல் 16 வாரங்கள் என்பது அரசாங்கம் கொண்டு வந்த ஒன்று. இது, சரியான முடிவாக இருக்கலாம். இல்லாமலும் போகலாம். ஏனெனில் நம்மிடம் எந்த தரவுகளும் இல்லை" என்று தெரிவித்தார்.


     கோவிட்- 19 செயற்குழுவில் இடம்பெற்றுள்ள, டாக்டர் ஜே பி முல்லியால், (ஓய்வு பெற்ற பேராசிரியர், கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி, வேலூர்) இது குறித்து கூறுகையில், " தடுப்பூசி இடைவெளியை அதிகரிப்பது குறித்து NTAGI க்குள் கலந்துரையாடல்கள் நடந்தன. 12-16 வாரங்கள் என்ற இடைவெளியை பரிந்துரைக்கவில்லை. அக்குழு எந்தவொரு   குறிப்பிட்ட இடைவெளி காலத்தையும் சுட்டிக்காட்டவில்லை," என்று தெரிவித்தாக Reuters செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.   


அந்த 3 நாட்களில் தடுப்பூசி போடலாமா? வதந்திகளுக்கு விடையளிக்கும் மருத்துவர்கள்!   


இரண்டு டோஸ்கள் போட்டால் தான் முழு பாதுகாப்பு:    


முன்னதாக, புதிய உருமாறிய (பி.1.617) கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக, அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசியின் முதல் மற்றும் 2வது டோஸ்களுக்கான இடைவெளியை 12 வாரங்களில் இருந்து 8 வாரமாக இங்கிலாந்து அரசு குறைத்தது.


கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசியின் செயல்திறன் குறித்து, இங்கிலாந்து அரசின் Public Health England என்ற சுகாதார  முகமை ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.


அதில்,"பிஃபிசர் - பயோஎன்டெக் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுத்துக் கொண்டவர்களில், 14 நாட்களுக்குப் பிறகு, இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய பி.1.617 தொற்றுக்கு எதிராக 88 சதவிகித பாதுகாப்பையும், இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட கொரோனா பி.1.1.7 தொற்றுக்கு எதிராக 93% பாதுகாப்பையும் பெறுகின்றனர். அஸ்ட்ரா ஜெனிகா /ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூச்சி (இந்தியா கோவிஷீல்டு) இரண்டு டோஸ் போட்டுக் கொண்டவர்களில், பி.1.617 தொற்றுக்கு எதிராக 60 சதவீத பாதுக்காப்பையும், பி.1.1.7 தொற்றுக்கு எதிராக 66% பாதுகாப்பையும் பெறுகின்றனர்.


அஸ்ட்ரா ஜெனிகா அல்லது பிஃபிசர் தடுப்பூசிகளின் முதல் டோஸ் மட்டும் எடுத்துக் கொண்டவர்களில், பி.1.617 தொற்றுக்கு எதிராக 3 வாரங்களில் 33 சதவிகித பாதுகாப்பையும், பி.1.1.7 வைரஸ் தொற்றுக்கு எதிராக 50 சதவிகித பாதுகாப்பையும் பெறுகின்றனர்" என்று ஆய்வுகள் தெரிவித்தன. 


உருமாறிய கொரோனா: 66 சதவீதம் செயலாற்றும் கோவிஷீல்ட்! இங்கிலாந்து ஆய்வில் தகவல்!