தமிழ்நாட்டில் இன்று 15,108 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் இன்று கொரோனாவால் 15 ஆயிரத்து 108 நபர்கள் புதியதாக பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 23 லட்சத்து 39 ஆயிரத்து 705 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 27 ஆயிரத்து 463 நபர்கள் கொரோனாவால் இருந்து மீண்டுள்ளனர். இதனால், மொத்தம் குணம் அடைந்தோர் எண்ணிக்கை 21 லட்சத்து 48 ஆயிரத்து 352 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவால் 374 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு 29 ஆயிரத்து 280 பதிவாகியுள்ளது.
டெல்லியில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளால் அந்த மாநிலத்தில் கொரோனா தொற்று முழுமையாக கட்டுக்குள் வந்துள்ளது. டெல்லியில் 71 ஆயிரத்து 513 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் புதியதாக 213 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதிப்பு 0.30 சதவீதமாக பதிவாகியுள்ளது. இன்று மட்டும் 28 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் இன்றைய நிலவரப்படி 3 ஆயிரத்து 610 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனாவால் நாடு முழுவதும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கருப்பு பூஞ்சை நோயால் பல மாநிலங்களில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல மாநிலங்களில் கருப்பு பூஞ்சை நோய்க்கு பயன்படுத்தப்படும் மருந்தான ஆம்போடெரிசின் பி பற்றாக்குறையாக உள்ளதாக மாநில அரசுகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்தான டோலிசமாப் மற்றும் ஆம்போடெரிசின் பி மருந்துகளுக்கு விதிக்கப்பட்ட 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. ரெம்டெசிவிர், ஹெபரின் மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் புதியதாக 6 ஆயிரத்து 952 நபர்களுக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆந்திராவில் மொத்தம் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 லட்சத்து 3 ஆயிரத்து 74 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 58 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இன்று ஒரே நாளில் 11 ஆயிரத்து 577 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்றைய நிலவரப்படி 91 ஆயிரத்து 417 நபர்கள் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரியில் இன்று மட்டும் 9 ஆயிரத்து 30 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் 442 நபர்களுககு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பால் 9 நபர்கள் உயிரிழந்துள்ளனர். புதுவையில் மொத்தமாக 1 லட்சத்து 12 ஆயிரத்து 126 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 ஆயிரத்து 745 நபர்கள் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். மாநிலத்தில் மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,667 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 23 ஆயிரத்து 123 ஆக உள்ளது. இவர்களில் 5 லட்சத்து 4 ஆயிரத்து 561 நபர்கள் குணம் அடைந்துள்ளனர். சென்னையில் மட்டும் 10 ஆயிரத்து 842 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அண்ணாநகர் தவிர்த்து பிற மண்டலங்களில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1000க்கும் கீழ் குறைந்துள்ளது. அண்ணாநகர் மண்டலத்தில் மட்டும் 1,021 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சிலநாட்களுக்குப் பிறகு 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் பாலிடெக்னிக் தொழில்நுட்ப கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
ஆக்சிஜன் சிறப்பு ரயில்கள் மூலம் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு இதுவரை 14,800 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னையின் அனைத்து மண்டலங்களிலும், கொரோனா நோய்த் தொற்றில் இருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 95 சதவிகிதத்துக்கும் அதிகமாக உள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கத்திற்கு சார்ஸ் கோவிட்-2, டிஸ்டெம்பர் என்ற புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவு செய்யப்பட்ட கொரோனா இறப்பு எண்ணிக்கை 4,002 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா இறப்பு எண்ணிக்கை மறுஆய்வுக்கு உட்பட்டு, கடந்த வாரத்தில் கணக்கில் கொள்ளாத 2213 இறப்புகள் நேற்றைய கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளன.
கொரோனா இரண்டாவது அலையில் நாடு முழுவதும் 719 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்தது. பீகார் மாநிலத்தில் அதிகபட்சமாக 111 மருத்துவர்கள் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். தமிழ்நாட்டில் 32 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.
"கொரோனா காலத்தில் தமிழ்நாட்டில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது. ‘ஆன்லைன்’ வகுப்பில் இணைவதற்கு வசதியில்லாத அரசுப் பள்ளி மாணவர்களே அதிக அளவில் குழந்தைத் தொழிலாளர்களாக மாறியுள்ளனர். தொழிலாளர் நலத்துறையும் பள்ளிக் கல்வித்துறையும் ஒருங்கிணைந்து உத்திகளை வகுப்பதன்மூலமே இதை சரிசெய்யமுடியும். தமிழ்நாடு முதலமைச்சர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகிறேன்" என்று விழுப்புரம் எம்பி ரவிகுமார் தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கன்னட மொழிக் கவிஞரும், தலித் இயக்கவாதியும், அரசியல்வாதிமான சித்தலிங்கையா கொரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார்.
“அவரது திறன்வாய்ந்த எழுத்து, கவிதைகள் மற்றும் சமுக நீதிக்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காக டாக்டர் சித்தலிங்கையா நினைவு கூறப்படுவார். அவரது மறைவால் துயருற்றேன். அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இந்த துக்க தருணத்தில் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி,” என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.
சுமார் 1.17 கோடி (1,17,56,911) கொரோனா தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளன. மேலும், 38 லட்சத்திற்கும் அதிகமான (38,21,170) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், அடுத்த மூன்று நாட்களில் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்படவுள்ளன.
இந்தியாவில் கொரோனா தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 11,21,671ஆக குறைந்துள்ளது . நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை, நான்காவது நாளாக, ஒரு லட்சத்திற்கும் கீழ் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 91,702 புதிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 2,77,90,073 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,34,580 பேர் குணமடைந்தனர்.தேசியளவில் குணமடைபவர்களின் வீதம் 94.93 சதவீதமாக உயர்ந்துள்ளது.
Background
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,759 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இன்றைய நிலவரப்படி கொரோனா தொற்று காரணமாக 1 லட்சத்து 74 ஆயிரத்து 802 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா தொற்றில் இருந்து 29,243 பேர் குணமடைந்துள்ளனர். நேற்றைய ஒருநாள் இறப்பு எண்ணிக்கை 378ஆக உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -