இந்தியாவில் டெல்டா வைரஸ் மரபணு மாறி டெல்டா பிளஸ் என்ற வைரஸ் உருவாகி உள்ளது. இது மனிதர்களின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி உடலுக்குள் செல்லும் திறன் கொண்டது. இந்த நிலையில், புதிதாக உருமாற்றம் பெற்றுள்ள டெல்டா பிளஸ் வகை கொரோனா, மூன்றாவது அலைக்கு காரணமாக இருக்கக்கூடும் என்றும், மகாராஷ்டிரா, கேரளா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. மகாராஷ்டிராவின் ரத்னகிரி மற்றும் ஜல்கான் மாவட்டங்களிலும், கேரளாவின் பாலக்காடு மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களிலும், மத்தியப் பிரதேசத்தின் போபால் மற்றும் சிவபுரி மாவட்டங்களிலும் டெல்டா பிளஸ் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் 22 பேருக்கு இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 16 பேர் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதனைத்தொடர்ந்து, சிறிய பாதிப்பு போல தோன்றும் இந்தப் பிரச்னை பெரிதாக விடாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள இந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், பெரும் கூட்டங்கள், பார்ட்டிகள் போன்றவற்றை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.
TN Covid-19 Data Tracker: தமிழ்நாட்டில் முதலாவது, இரண்டாவது கொரோனா அலையில் இறப்பு விகிதம் என்ன?
இந்தநிலையில், இந்தியாவில் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் குறித்து தற்போதே மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்தாண்டு உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரசின் இரண்டாவது அலை இந்தியாவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த கொரோனா வைரசின் இரண்டாவது அலையில் உருமாறிய கொரோனா வைரசின் தாக்கம் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் காணப்படும் இந்த உருமாறிய கொரோனா வைரசுக்கு டெல்டா வைரஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
டெல்டா வைரசின் தாக்கம் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி தற்போது ஓரளவு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கும் நிலையில், டெல்டா வைரசை காட்டிலும் மிகவும் அதிக வீரியமுள்ள “டெல்டா பிளஸ்” கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்து கடந்த சில தினங்களில்தான் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். இந்த சூழலில், மிகவும் ஆபத்து வாய்ந்த டெல்டா பிளஸ் வைரஸ் பரவுவதும், கொரோனா மூன்றாவது அலை வரும் ஆகஸ்ட் மாதம் ஏற்படக்கூடும் என்ற எச்சரிக்கையும் பொதுமக்களை மிகுந்த கவலையடையச் செய்துள்ளது.
Covid Vaccine | 88 லட்சத்திலிருந்து 53 லட்சம் : தடுப்பூசி எண்ணிக்கை சரிவு எழுப்பும் கேள்விகள் என்ன?