கொரோனா தொற்று அதிகரித்த நேரத்தில் இறுதி ஆய்வு மேற்கொள்ளாமலேயே அவசர காலப் பயன்பாட்டிற்காக கோவாக்சின் தடுப்பூசி செயல்பாட்டிற்கு வந்தது. அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தடுப்பூசியின் செயல்திறன் 77.8 சதவீதமாக இருப்பது என கண்டறியப்பட்டுள்ளது.


கடந்த 2020-ஆம் ஆண்டு உலக நாடுகளையே உலுக்கிய கொரோனா பெருந்தொற்றின் பேராபத்து இன்னும் கட்டுக்குள் வந்த பாடில்லை. அந்த அளவிற்கு முதல் அலை, இரண்டாம் அலை என அதன் தாக்கம் அதிகரிக்கும் நிலையில் தான் செப்டம்பர் மாதத்தில் மூன்றாவது அலை தாக்கும் என கூறப்படுகிறது. கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களைக்க காக்க பல்வேறு மருத்துவக் கட்டமைப்புகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியினை ஏற்படுத்தும் விதமாகவும், கொரோனவினைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதால் தடுப்பூசி போடும் பணிகளை அரசு துரிதப்படுத்தியது.


முதலில் இந்தியாவில், சீரம் நிறுவனத்தின்  கோவிஷூல்டு மக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டது. ஆனால் அதிகளவிலான மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வந்தமையின் காரணமாக தட்டுப்பாடுகள் நிலவியது. அதே சமயம் வைரஸ் தொற்றின் தாக்கமும் அதிகரித்தது. எனவே தான் ஹைதராபாத்தினை தலைமையிடமாக கொண்ட பாரத் பயோ டெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் முழுமையான ஆய்வினை முடிக்காமல் மக்களின் அவசரப்பயன்பாட்டிற்காக ஒப்புதல் பெற்றது. பின்னர் மார்ச் மாதத்திற்குள் 3 ஆம் கட்ட தரவுகளை வெளியிடுவதாக கூறியிருந்த நிலையில் தான் பல்வேறு சந்தர்ப்பங்களின் காரணமாக இன்னும் வெளியிடவில்லை.



குறிப்பாக மருத்துவ உலகில் எந்த மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டாலும்,  மக்களின் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்னதாக 3 கட்டமாக சோதனைகள் நடைபெறும். அதனையடுத்தே தடுப்பூசிகளை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியும்.  ஆனால் கோவாக்சின் தடுப்பூசியினைப் பொறுத்தவரை 3 கட்ட சோதனையின் தரவுகள் இன்றியே கொரோனா அவசரக்காலத்தில் அனுமதி வழங்கப்பட்டது பல்வேறு சர்ச்கைளை ஏற்படுத்தியது.


இதனையடுத்து, பாரத் பயோ டெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியின் 3 வது கட்ட சோதனையின் முடிவுகள் ஜூலையில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.  முன்னதாக நாடு முழுவதும் 25,800 பேரை வைத்து  நடத்தபட்டச் சோதனையில் கோவாக்சின் தடுப்பூசியில் செயல்திறன் 77.8 சதவீதமாக இருப்பது கண்டறிப்பட்டதாக நிபுணர் குழு நடத்தியஆய்வு முடிவில் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசர அனுமதி பெறுவதற்காக ஏற்கனவே 90 சதவீத ஆவணங்களை உலக  சுகாதார நிறுவனத்தில் சமர்ப்பித்துள்ளதாவும், மீதமுள்ள ஆவணங்கள் இம்மாதத்தில் அளிக்கப்படும் என பாரத் பயோ டெக் நிறுவனத்தில் தெரிவித்திருந்தது.


இந்நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாக வெளியான ஆய்வின் முடிவில், கோவாக்சினை விட கோவிஷூல்டு தான் கூடுதலான நோய் எதிர்ப்பு சக்தியினை கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இன்னும் முழுமையான ஆய்வின் முடிவுகள் வெளிவராத நிலையில், இதனை முழுமையாக ஏற்றுக்கொள்ள கூடாது என ஆராய்ச்சியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதுவரை இந்தியா முழுவதும் முதல் தவணை தடுப்பூசியினை  23.67 கோடி பேர் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசியினை 5.21 கோடி மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ள நிலையில் இதுவரை மொத்தம் 28.88 கோடி  மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.