கொரோனா தடுப்பூசி புதிய திட்டம் செயல்பாட்டுக்கு வந்த நேற்றுமுன் தினம் திங்கள்கிழமையன்று, ஒரே நாளில் 88 லட்சம் பேருக்குக் தடுப்பூசி போடப்பட்டது. இரண்டாம் நாளான நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவின் படி 53.86 லட்சம் பேருக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.
இந்த சரிவு, தடுப்பூசி திட்டத்தின் நீடித்த நிலைப்புத்தன்மை குறித்து பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியிருக்கிறது. தடுப்பூசி பற்றாக்குறையின் காரணமாகவே நேற்று எண்ணிக்கை குறைந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்கள் தடுப்பூசியைப் பதுக்குவதாலேயே இந்தத் தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. திங்கள்கிழமையன்று தடுப்பூசிப் பட்டியலில் இருந்த டாப் 10 மாநிலங்களில் 7 மாநிலங்கள் பாஜக ஆளும் மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்றாடத் தேவை 97 லட்சம்:
மத்திய அரசு இந்தாண்டு டிசம்பர் இறுதிக்குள் தடுப்பூசிப் போடத் தகுதியானவர்கள் அனைவருக்கும் ஊசி போடப்படும் எனக் கூறியிருக்கிறது. இதற்கு அன்றாடம் 97 லட்சம் தடுப்பூசிகள் தேவைப்படுகிறது. ஆனால், தற்போது மாநிலங்களுக்கு தடுப்பூசி விநியோகிக்கப்படும் வேகத்தைப் பார்க்கும்போது இந்த இலக்கை எட்டமுடியுமா என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது. ஆனால், தேசிய தொற்றுநோய் தடுப்பு ஆலோசனைக் குழுவின் தலைவர் டாக்டர் என்.கே.அரோரா கூறும்போது, அரசாங்கம் அன்றாடம் 1 கோடி பேருக்கு தடுப்பூசி போடத் திட்டமிடிருக்கிறது. தினமும் 1.25 கோடி தடுப்பூசி ஸ்டாக் வைத்துக்கொள்ளும் திறன் அரசிடம் இருக்கிறது எனக் கூறியிருக்கிறார். மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண், மத்திய அரசு முழுமையாக மாநில அரசுகளுடன் ஒத்துழைத்து வருகிறது. மாநில அரசுகளுக்கு அடுத்த 15 நாட்களுக்குள் எவ்வளவு தடுப்பூசி கொடுக்கப்படும் என்பதுவரை வெளிப்படையாகத் தெரியப்படுத்துகிறோம் என்று கூறியிருக்கிறார். ஆனால், சில மாநிலங்களில் இரண்டு நாட்களில் தடுப்பூசி வழங்கப்பட்ட எண்ணிக்கை பெருமளவில் வித்தியாசமாக இருக்கின்றது.
திங்களன்று மத்தியப்பிரதேசத்தில் 17 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதே வேளையில், நேற்று வெறும் 5000 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. ஜூன் 15ம் தேதி 37,904 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஜூன் 20-ஆம் தேதி வெறும் 4098 பேருக்கு செலுத்தப்பட்டது. ஜூன் 21-ஆம் தேதியில் 16,95,592 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. நேற்று, 5000 பேருக்கு மட்டுமே செலுத்தப்பட்டது.
இது தொடர்பாக மாநில கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சாரங் கூறும்போது, டேட்டா எண்ட்ரியில் ஏதாவது தவறு நடந்திருக்குமே தவிர தடுப்பூசித் திட்டத்தில் தொய்வில்லை. மத்தியப் பிரதேசம் தடுப்பூசிகளைப் பதுக்கவும் இல்லை எனக் கூறியிருக்கிறார். நேற்றைய தினம் உத்தரப் பிரதேசம் மட்டும்தான் அதிகளவில் கொரோனா தடுப்பூசி வழங்கியிருக்கிறது. ஜூன் 21ல் 6 லட்சம் பேருக்கு வழங்கப்பட்ட நிலையில், ஜூன் 22ல் 7 லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கிறது” என்றார்