உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு தீவிரமாக பரவி வரும் சூழலில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று 1,03,119 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1728 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 876 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று நிலவரப்படி கொரோனாவால் 6 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 662 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பினர். தமிழ்நாட்டில் இதுவரை 121 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று புதிதாக யாருக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் கொரோனா தாக்கம் தமிழ்நாட்டில் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது குறிப்பாக சென்னையில் சீரான வேகத்தில் அதிகரிக்கிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் தலைநகர் சென்னையில் மட்டும் 146 என பதிவாகியிருந்த தினசரி பாதிப்பு 776-ஆக அதிகரித்து 5 மடங்காக உயர்ந்துள்ளது. இதனால் தமிழக அரசு முக்கிய நடவடிக்கைகளை கையிலெடுக்கும் என தெரிகிறது. ஏற்கெனவே கடற்கரைக்கு செல்ல தடை, தியேட்டரில் 50% இருக்கைகளுக்கு அனுமதி போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். ஏற்கெனவே கட்டுப்பாடுகளை தமிழக அரசு தொடங்கிவிட்ட நிலையில் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் தமிழ்நாட்டிலும் இரவு ஊரடங்கோ அல்லது வாரத்திற்கு இரண்டு நாட்கள் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
இதற்கிடையே பொதுமக்கள் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்கவும், முகக் கவசத்தை அணியவும் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்