நாடு முழுவதும் நேற்று சிறார்களுக்கு கோவிட் 19-க்கான தடுப்பு மருந்து செலுத்தும் திட்டம் தொடங்கியது. இந்நிலையில்,  காலாவதியான  கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுவதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியது. ஆனால், இத்தகவலில் உண்மையில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்  தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, அரைகுறையான தகவல்களின் அடிப்படையில் ஊடகங்களில் தவறான செய்தி வெளியிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்  வெளியிட்ட செய்திக்குறிப்பில்;  


பாரத் பயோடெக் நிறுவனம் கேட்டுக்கொண்டதற்கிணங்க அந்த நிறுவனத்தின் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியின்  ஆயுட்காலத்தை (shelf life) 9 மாதங்களில் இருந்து, 12 மாதங்களாக நீட்டித்து மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, 25 அக்டோபர் 2021 அன்று உத்தரவிட்டுள்ளது.  இதேபோன்று, கோவிஷீல்டு தடுப்பூசியின் ஆயுட்காலத்தையும் 6 மாதத்திலிருந்து 9 மாதங்களாக நீட்டித்து 22 பிப்ரவரி 2021 அன்று உத்தரவிடப்பட்டுள்ளது.






தடுப்பூசி உற்பத்தியாளர்கள் அளித்த புள்ளிவிவரங்களை முறையாக ஆய்வு செய்து, விரிவான பகுப்பாய்வுகளுக்கு பிறகே இந்த தடுப்பூசிகளின் ஆயுட்காலம் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பால் நீட்டிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.  


ஆயுட்காலம் என்றால் என்ன?   


கோவிஷீல்டு உட்பட காலாவதி தேதியை கடந்த எந்த தடுப்பூசியும் போடக்கூடாது. எந்தவொரு நோய்த்தடுப்புத் திட்டத்தின் பின்னணியிலும் தடுப்பூசிகளை நிராகரிப்பது மிகவும் வருத்தமளிக்கும் அதே வேளையில், இந்த காலாவதியான அளவுகளை விநியோகச் சங்கிலியிலிருந்து அகற்றி பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என்று WHO பரிந்துரைக்கிறது.


உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, கொடுக்கப்பட்ட  சேமிப்பு வெப்பநிலையில் (Given storage temperature) தடுப்பூசி தனது  முழுமையான ஆற்றலையும் நிலைத்தன்மையையும் எவ்வளவு எத்தனை காலம்  தக்க வைத்துக் கொள்ளும் என்பதன்  அடிப்படையில் தடுப்பூசியின் ஆயுட் காலம் தீர்மானிக்கப்படுகிறது. ஆயுட் காலத்தின் அடிப்படையில் தடுப்பூசியின் காலாவதி நாள்  நிர்ணயிக்கப்படுகிறது. 






 




 

 

காலாவதி தேதிக்கும், தடுப்பூசிகளின் பாதுகாப்புக்கும் நேரடி தொடர்பில்லை என்றாலும், காலாவதி நாள் குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு போடப்பட்ட தடுப்பூசி, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க  உடலைத் தூண்டாது. 

 

எவ்வாறாயினும், விநோயிக்கப்பட்ட,லேபிளிங் செய்யப்படாதா தடுப்பூசிகளுக்கு மட்டுமே  ஆயுட் காலம் நீட்டிப்பு செய்ய முடியும். காலாவதியான, காலாவதி நாளை நெருங்கும் தடுப்பூசிகளின் ஆயுட்காலத்தை மாற்றியமைக்க முடியாது. காலாவதியான தடுப்பூசிகளை, அதன் விநியோக சங்கிலியில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.   

 

எனவே, விரிவான பகுப்பாய்வுகளுக்கு பிறகே கோவாக்சின் தடுப்பூசி 12 மாதங்கள் வரை தனது ஆற்றலையும், நிலைத்தன்மையையும்  தக்க வைத்துக் கொண்டிருக்கும் (shelf life) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   

 

சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி: 

 

நாடு முழுவதும் சிறார்களுக்கு கோவிட் 19-க்கான தடுப்பு மருந்து செலுத்தும் திட்டம் நேற்று தொடங்கியது. நேற்று, மட்டும் 40 லட்சம் கூடுதலான பேருக்கு தடுப்பூசி நிர்வகிக்கப்பட்டது.



 

முன்னதாக, 15-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் போது, இந்த பிரிவினருக்கு 'கோவாக்சின்' மட்டுமே செலுத்தப்பட வேண்டும் என்றும், கூடுதல் அளவு 'கோவாக்சின்' அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. 

 




ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண