கொரோனா தொற்றுப் பரவல் இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. டெல்லி, உத்தரப் பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் மீண்டும் கொரோனா வேகம் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் கொரோனா 4-வது அலை வருமா என்ற அச்சம் எழுந்துள்ளது.


இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் மெல்ல அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,067 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தம் 12,340 பேர் கொரோனா தொற்றுக்கு இந்தியாவில் ஆளாகி உள்ளனர். அதேபோலக் கடந்த 24 மணி நேரத்தில் கூடுதலாக 40 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதன்மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 5,22,006 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 4,25,13,248 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடையும் வீதம் 98.76 ஆக உள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் அசாம், ஜார்க்கண்ட், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தினசரித் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 




டெல்லியில் நேற்றைய தினத்தைவிடக் கூடுதலாக 218 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் 1947 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹரியாணாவில் கூடுதலாக 128 பேருக்கும் மிசோரத்தில் கூடுதலாக 26 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 103 பேருக்குக் கூடுதலாகத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
 
டெல்லியில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதைத் தொடர்ந்து, நிலையைக் கட்டுக்குள் கொண்டுவர டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் (DDMA) இன்று (ஏப்ரல் 20) கூடி விவாதித்தது. இதில் தலைநகர் டெல்லியில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மீறுவோருக்கு ரூ.500 அபராதம் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


மத்திய சுகாதார அமைச்சகம் கவலை


டெல்லி, உத்தரப் பிரதேசம், ஹரியானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் அதிகரிக்கும் தொற்று எண்ணிக்கை கவலை அளிப்பதாக உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அங்கு முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டம் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.




இந்நிலையில் கொரோனா தொற்று அதிகரிப்பால் 4ஆவது அலை வருமா என்று கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து அரசு பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா, 'ஏபிபி நாடு'விடம் பேசினார். 


''4ஆவது அலை நிச்சயமாக வரும். ஆனால் தீவிரத் தன்மையுடன் பீதியடையும் வகையில் அலை ஏற்படாது. 2 தவணை தடுப்பூசிகளை முறையாக எடுத்துக்கொள்ளாதவர்கள், இதுவரை தொற்றுக்கு ஆளாகாதவர்கள் ஆகியோருக்கு அதிகம் தொற்று ஏற்படலாம். தொற்றுப் பரவல் அதிகமாக இருந்தாலும் தீவிரத்தன்மை குறைவாகவே இருக்கும். மருத்துவமனைகளில் அதிக மக்கள் அனுமதிக்கப்படும் சூழல் ஏற்படாது. 


இந்தியாவில் 70 சதவீதம் பேருக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 3 அலைகள் ஏற்பட்டதில், பெரும்பாலான மக்களுக்கு கொரோனாவுக்குப் பிறகான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது. டெல்டாவுக்குப் பிறகு வந்த கொரோனா வைரஸ் உருமாற்றங்கள் எதுவும், மனிதர்களுக்குப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு உருவாகவில்லை. டெல்டா, ஒமிக்ரான் ஆகிய உருமாற்ற வைரஸ்களை எதிர்கொள்ளும் திறன் போதிய அளவு நமக்கு இருக்கிறது. அதனால் 4ஆவது அலை குறித்து பயப்படத் தேவையில்லை.


எப்போது கொரோனா 4ஆவது அலை ஏற்படும்?


அரசு வெளியிட்ட புள்ளிவிவரப்படி, 2ஆவது அலையில் இந்தியாவில் 2.5 லட்சம் மரணங்கள் நிகழ்ந்தன. 3ஆவது அலையில் 27 ஆயிரம் மரணங்கள் ஏற்பட்டன. இதன்மூலம் இறப்பு எண்ணிக்கை 10 மடங்கு அளவுக்குக் குறைந்தது. அதேபோல 4ஆவது அலையும் அச்சப்படும் வகையில் இருக்காது. எனினும் முகக் கவசம் அணிவது, வீட்டுக்குச் சென்றதும் கைகளைக் கழுவுவது உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். தமிழக அரசும் முகக் கவசத்தைக் கட்டாயம் அணிய வேண்டும் என்று மீண்டும் அறிவித்துள்ளது. 




கொரோனா முதல் அலை 2020 ஆகஸ்ட் மாதத்தில் ஏற்பட்டது. அடுத்த 8 மாதத்தில் 2021 மே மாதம் 2ஆவது அலை உச்சம் தொட்டது. 3ஆவது அலை டிசம்பர் - ஜனவரியில் உருவானது. 4ஆவது அலை 2022 மே மாதத்தில் உருவாகி, ஜூன் - ஜூலை மாதத்தில் உச்சம் தொடலாம். எனினும் அது சாதாரண சளி, காய்ச்சலாகவே வந்துபோகும் என்று நம்புகிறேன். 


யாருக்கு பாதிப்பு?


எதிர்ப்பு சக்தி குறையும்போதோ, கொரோனா தடுப்பூசி போடாதவர்களாலோ தொற்றுப் பரவல் அதிகரிக்கும். இதுவரை தொற்றுக்கு ஆளாகாதவர்களுக்கும் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கும் கொரோனா தொற்று வரலாம். சளி, காய்ச்சல் ஆண்டுதோறும் வருவதைப் போல, 4ஆவது அலையும் வரும்.


உச்சகட்ட நீரிழிவு நோய், இதய, கேன்சர், சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள், தடுப்பூசி போடாதவர்கள் உள்ளிட்டோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அவர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அலை தீவிரமாகப் பரவும்போது, நோய்த் தொற்று பாதிப்புக்கு உள்ளாகும் மக்களைக் கட்டாயம் தாக்கும். அப்போது நோயின் தீவிரத்தன்மை அதிகமாக இருக்கும். 


 



மருத்துவர் ஃபரூக் அப்துல்லா


கொரோனா வைரஸ் எப்போது இல்லாமல் போகும்?


கொரோனா வைரஸை நாம் தவிர்க்கவே முடியாது. அவ்வாறு தவிர்க்க வேண்டுமெனில் சீனாவைப் போல பூஜ்ஜிய கோவிட் கொள்கையை நாமும் பின்பற்ற வேண்டும். ஆனால் அதற்கு நம்முடைய பொருளாதாரம் ஒத்துழைக்காது. 


கோவிட் 19 தனது இருப்பைத் தக்கவைக்க, தொடர்ந்து தன்னை உருமாற்றிக்கொண்டே இருக்கிறது. ஆனால் அதே உருமாற்றத்தால்தான் கொரோனா வைரஸ் எதிர்காலத்தில் ஒழியும்'' என்று மருத்துவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார்.


பெருந்தொற்று காலகட்டத்தில், 'சுய'நலத்துடன் இருந்து பொது நலம் காப்போம்.


Also Read | Post Office MIS Scheme: மாதம்தோறும் வட்டி... அள்ளித்தரும் போஸ்ட் ஆஃபீஸ் மன்த்லி இன்கம் ஸ்கீம்!