இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் மீண்டும் முகக்கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மீறுவோருக்கு ரூ.500 அபராதம் அளிக்கப்பட உள்ளது.


இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் மெல்ல அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,067 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தம் 12,340 பேர் கொரோனா தொற்றுக்கு இந்தியாவில் ஆளாகி உள்ளனர். அதேபோலக் கடந்த 24 மணி நேரத்தில் கூடுதலாக 40 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதன்மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 5,22,006 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 4,25,13,248 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடையும் வீதம் 98.76 ஆக உள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் அசாம், ஜார்க்கண்ட், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தினசரித் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 


டெல்லியில் நேற்றைய தினத்தைவிடக் கூடுதலாக 218 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் 1947 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹரியாணாவில் கூடுதலாக 128 பேருக்கும் மிசோரத்தில் கூடுதலாக 26 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 103 பேருக்குக் கூடுதலாகத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
 
டெல்லியில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதைத் தொடர்ந்து, நிலையைக் கட்டுக்குள் கொண்டுவர டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் இன்று (ஏப்ரல்20) கூடி விவாதித்தது. இதில் தலைநகர் டெல்லியில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மீறுவோருக்கு ரூ.500 அபராதம் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தக் கூட்டத்தில் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால், முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் பிற அதிகாரிகள் கலந்துகொண்டனர். 




டெல்லி, உத்தரப் பிரதேசம், ஹரியானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் அதிகரிக்கும் தொற்று எண்ணிக்கை கவலை அளிப்பதாக உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அங்கு முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கூட்டம் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.


முன்னதாக மார்ச் 30ஆம் தேதி முகக்கவசத்துக்கான அபராதத்தை நீக்கி டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்









பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண