இந்தியாவில் செலுத்தப்படும்  கோவிஷீல்ட் தடுப்பூசி  புதிய வகை உருமாறிய பி.1.617 தொற்றுக்கு எதிராக 66 சதவீத செயல்திறனை கொண்டுள்ளதாக இங்கிலாந்து அரசு நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 


கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசியின் செயல்திறன் குறித்து, இங்கிலாந்து அரசின் Public Health England என்ற சுகாதார  முகமை ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. பி.1.617 மாதிரியின் துணை வகை இங்கிலாந்து நாட்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து காணப்படுகிறது. ஆய்வில் இதனை பிரதிபலிக்கும் வகையில், பி.1.617 மரபணு தொற்றால் பாதிக்கப்பட்ட 1,054 நோயாளிகளும் தடுப்பூசி செயல்திறன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.


"பிஃபிசர் - பயோஎன்டெக் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுத்துக் கொண்டவர்களில், 14 நாட்களுக்குப் பிறகு, இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய பி.1.617 தொற்றுக்கு எதிராக 88 சதவிகித பாதுகாப்பையும், இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட கொரோனா பி.1.1.7 தொற்றுக்கு எதிராக 93%  பாதுகாப்பையும் பெறுகின்றனர்.   


அஸ்ட்ரா ஜெனிகா /ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூச்சி இரண்டு டோஸ் போட்டுக் கொண்டவர்களில், பி.1.617 தொற்றுக்கு எதிராக 60 சதவீத பாதுக்காப்பையும், பி.1.1.7 தொற்றுக்கு எதிராக 66% பாதுகாப்பையும் பெறுகின்றனர்.


அஸ்ட்ரா ஜெனிகா அல்லது பிஃபிசர் தடுப்பூசிகளின் முதல் டோஸ் மட்டும் எடுத்துக் எடுத்துக் கொண்டவர்களில், பி.1.617 தொற்றுக்கு எதிராக 3 வாரங்களில் 33 சதவிகித பாதுகாப்பையும், பி.1.1.7 வைரஸ் தொற்றுக்கு எதிராக 50 சதவிகித பாதுகாப்பையும் பெறுகின்றனர்" என்று கடந்த மே 20ம் தேதி வெளியான ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டது. 



இந்த புதிய ஆய்வு அதிக நம்பிக்கையை அளிப்பதாக  இங்கிலாந்து நாட்டின் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்தார். இதுகுறித்து அவர்  கூறுகையில், "கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டின் தடுப்பூசித் திட்டம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்பது மீண்டும் உணர்த்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட பி.1.617 தொற்றால் பாதிக்கப்பட்ட 20 லட்சம் பேர் ஒரு குறிப்பிடத்தக்க பாதுகாப்பை பெற்றுள்ளனர் என்பதை தம்மால் உறுதியாக கூற முடியும்" என்று தெரிவித்தார்.


முன்னதாக, புதிய உருமாறிய (பி.1.617) கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக, அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசியின் முதல் மற்றும் 2வது டோஸ்களுக்கான இடைவெளியை 12 வாரங்களில் இருந்து 8 வாரமாக இங்கிலாந்து அரசு குறைத்தது.


பி.1.617 தொற்று:  புதிய வகை உருமாறிய கொரோனா தொற்றான பி.1.617,  சர்வதேச அளவில் கவலை அளிப்பதாக உலக சுகாதார அமைப்பு  தெரிவித்தது.  இந்தியாவில் மகாராஷ்ரா மாநிலத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்ட பி.1.617 என்று அழைக்கப்படும் புதிய வகை உருமாறிய கொரோனாவின் 3 துணை வகைகள் தற்போது  46 நாடுகளுக்கு பரவியுள்ளதாக gisaid என்ற ஆய்வு மையம் தெரிவித்தது.


உலகளவில் தற்போது  நான்கு உருமாறிய கொரோனா வைரஸ் பெரும் ஆபத்துகளை ஏற்படுத்தி வருகிறது.   இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் (B.1.1.7) தென் ஆப்பிரிக்காவில் கண்டறிப்பட்ட வைரஸ் (B.1.351) , பிரேசிலில் கண்டறிப்பட்ட கொரோனா வைரஸ் மாதிரி (P.1) மற்றும் இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் மாதிரி பி.1.617. 



இந்தியாவில் கடந்த 4 வாரங்கள் கொரோனா வைரஸ் மாதிரிகளை பரிசோதனை செய்ததில், 112 மாதிரிகள் பி.1.617 வகையைச் சேர்ந்தவையாக உள்ளது. அதாவது, இந்தியாவில் பரிசோதனை செய்யப்படும் 100 மாதிரிகளில் 66.3 மாதிரிகள் பி.1.617 வகையாக உள்ளன. இந்தியாவில் கடந்த மார்ச மாத இறுதியில் பி.1.617 கண்டறியப்படும் விகிதம் வெறும் 9 சதவிகிதமாக இருந்தது.  


இந்தியா கோவிஷீல்டு:  அஸ்ட்ரா ஜெனிகா  ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலிருந்து தொழில்நுட்ப பரிமாற்றம் மூலம் தயாரிக்கப்பட்ட ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை இந்திய சீரம் மையம் தயாரித்து வருகிறது.   


சமீபத்திய தரவுகளின் படி, 21.80 கோடி (21,80,51,890) கொரோனா தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், மத்திய அரசு வழங்கியுள்ளது. இன்று, காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 19,19,15,970 டோஸ் தடுப்பூசிகள் நிர்வகிக்கப்பட்டுள்ளன. இதில், முதல் டோஸ் 15 கோடியும் (15,02,15,644), இரண்டாவது டோஸ் 4 கோடியும் அடங்கும்.


cowin.gov.in வலைதளத்தின் படி,17.08 கோடி கோவிஷீல்ட் மற்றும் 2.06 கோடி  கோவாக்சின் டோஸ்கள் போடப்பட்டுள்ளது. அதாவது, நிர்வகிக்கப்பட்ட தடுப்பூசிகளில் கோவிஷீல்ட் எண்ணிக்கை 89 சதவீகிதமாக உள்ளது.


எனவே இந்தியாவில், 3%க்கும் குறைவானோர் மட்டுமே பி.1.617 எதிராக 66 சதவீத பாதுகாப்பை பெற்றுள்ளனர். முதல் டோஸ் மட்டும் போட்டுக் கொண்ட 9% மக்கள் 33 % பாதுகாப்பை மட்டுமே பெற்றுள்ளனர். 


முன்னதாக, கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் மற்றும் 2வது டோஸ்களுக்கான இடைவெளியை 12-16 வாரங்களாக நீட்டிக்கும்படி டாக்டர் என்.கே.அரோரா தலைமையிலான கொவிட் செயற் குழு பரிந்துரைத்தது. இதை மத்திய அரசு கடந்த 13ம் தேதி ஏற்றுக் கொண்டது.