அந்த மூன்று நாட்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா? எச்சரிக்கும் வாட்ஸ் அப் ஃபார்வர்டுகள்; என்ன சொல்கிறார்கள் மருத்துவர்கள் இதோ பார்க்கலாம்.


கொரோனா பரவல் வேகமெடுத்த நாள் முதல் மெயின் ஸ்ட்ரீம் ஊடகத்தின் மிக முக்கிய வேலையாக இருப்பது அன்றாடம் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவும் அபத்தமான, போலியான தகவல்களை இல்லை என மக்களுக்குப் புரியவைப்பதே.
தடுப்பூசி பற்றி அப்படியாக வெளியான ஆயிரமாயிரம் போலித் தகவல்களையும் மருத்துவ நிபுணர்கள் உதவியுடன் உடைத்து இப்போதுதான் மக்களுக்கு பெருமளவில் நம்பிக்கை தந்திருக்கிறது ஊடகங்கள்.
இந்நிலையில், இன்னுமொரு வதந்தி இப்போது இளம்பெண்களைக் குறிவைத்து பரப்பப்படுகிறது. அதாவது மாதவிடாய் நாட்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளக் கூடாது என்பதே அந்த வதந்தி.
இப்போது, மூன்றாவது கொரோனா தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது.




தடுப்பூசியே பேராயுதம் என உலகமே நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அதற்கு முட்டுக்கட்டை போடுவதுபோல் பெண்கள் மாதவிடாய் காலத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டால், அது அவர்களின் மாதவிடாய் சுழற்சியைப் பாதிக்கும், பின்னாளில் குழந்தைப் பேறைப் பாதிக்கும் என அச்சுறுத்தும் தகவல்கள் வெளியிடப்படுகின்றன.
இது தொடர்பாக அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பேராசிரியர், மருத்துவர் கேத்ரின் க்ளேன்சி கொரோனா தடுப்பூசிக்கும் மாதவிடாய்க்கும் தொடர்ப்பு இருப்பதாக பரப்பப்படும் தகவல்களை அடுத்து இது தொடர்பாக ஆய்வு செய்யவிருக்கிறார்.
மகப்பேறு மருத்துவர் முன்ஜால் கப்பாடியா, வாட்ஸ் அப்பில் வெளியாகும் மிகக்கேவலமான சில வதந்திகளை நம்பாதீர்கள். கொரோனா தடுப்பூசிக்கும் உங்களுடைய மாதவிடாய் சுழற்சிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இதுவே உண்மை. இதை முடிந்தளவு பரப்புங்கள். இதுவே இப்போதைய அவசரத் தேவை எனக் கூறியுள்ளார்.




இதேபோல், சமூகவலைதளங்களில் பெண் மருத்துவர்கள், செவிலியர்கள், பெண் ஆளுமைகள் எனப் பலரும் தங்களின் தடுப்பூசி அனுபவங்களைப் பகிர்ந்து நம்பிக்கையூட்டி வருகின்றனர்.  ஒரு பெண் மருத்துவர் தனது ட்விட்டரில், நான் எனது இரண்டு தடுப்பூசிகளையும் மாதவிடாய் இருந்தபோதே போட்டுக் கொண்டேன். எனக்கு எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. கொரோனா தடுப்பூசியால் மிகமிகக் குறைந்த அளவிலேயே பக்கவிளைவுகள் இருக்கும். அவையும் மிகச் சாதாரணமாக எல்லா தடுப்பூசிகளுக்கும் ஏற்படும் பக்கவிளைவுகள் போன்றதே.
மும்பை கோகிலாபென் அம்பானி மருத்துவமனையின் பெண்கள் மற்றும் மகப்பேறு நல மருத்துவர், டாக்டர் வைஷாலி ஜோஷி கூறும்போது, "கொரோனா தடுப்பூசிக்கும் மாதவிடாய்ப் பிரச்சினைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இது சமூகவலைதளங்களில் சிலர் தங்களின் சொந்த அனுபவங்களைப் பகிர்ந்ததை வைத்து கட்டமைக்கப்பட்ட போலித் தகவல். இது அறிவியல் ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்யப்படவில்லை. ஆகையால், பெண்கள் அனைவரும் தயங்காமல் மாதவிடாய் காலமென்றாலும் கூட தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுங்கள்" எனக் கூறியுள்ளார்.