நாடு முழுவதும், கொரோனா இரண்டாவது அலையில் கொரோனா நோய்த் தொற்று  சம்பந்தமான பணியின்போது  உயிரிழந்தோரின் மருத்துவர்கள் எண்ணிக்கை 798- ஆக அதிகரித்துள்ளது.   


நாட்டில் கொரோனா இரண்டாவது அலையால் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகமாகவே இருந்தன. முதல் அலையில் இருந்து டாக்டர்கள் இரவு, பகல் பாராமல் தங்களின் குடும்பத்தாருடன் நேரத்தை செலவிடாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றி வருகின்றனர். தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் கொரோனாவுக்கு எதிராக டாக்டர்கள் போராடி வருகின்றனர்.


இந்நிலையில், கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையில் நாடு முழுவதும் இதுவரை 798 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கப் பதிவேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக டெல்லியில் 128 பேரும், பீகாரில் 115 பேரும், உத்தர பிரேசத்தில் 79 பேரும், மேற்குவங்க மாநிலத்தில் 62 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 51 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. கொரோனா முதல் அலையின்போது மொத்தம் 736 டாக்டர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



பிரதமரின் ஏழைகள் நலன் திட்டத்தின் கீழ் சுகாதாரப்  பணியாளர்களுக்கான ரூ.50 லட்சம் மதிப்பிலான ஆயுள் காப்பீடு திட்டம் கடந்த மார்ச் 30ம் தேதி அறிவிக்கப்பட்டது. சமுதாய சுகாதார ஊழியர்கள் மற்றும் தனியார் சுகாதார ஊழியர்கள் உட்பட அனைத்து சுகாதாரப்பணியாளர்களுக்கும் இந்த காப்பீடு திட்டம் பொருந்தும்.   


மேலும், 2020-21  கல்வியாண்டில் மத்திய இருப்பின் எம்பிபிஎஸ் இடங்களின் கீழ் மருத்துவச் சேர்க்கையில் ‘ கோவிட்- 19 போராளிகளின் வாரிசு' (Wards of COVID Warriors ) என்ற புதிய பிரிவை அறிமுகப்படுத்த அரசு முடிவெடுத்திருப்பதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் அறிவித்தார். மத்திய இருப்பின் இடங்களின் மூலம் கொவிட்-19 காரணமாக தங்கள் இன்னுயிரை நீத்த அல்லது கோவிட்-19 சம்பந்தமான பணியின்போது விபத்தினால் உயிரிழந்தோரின் வாரிசுகள் தேர்வு செய்யப்படுவார்கள்.






இதற்கிடையே, தொலை மருத்துவ சேவை மற்றும் லேசான கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு‌ சிகிச்சை அளிக்கும் பணியில், ஆசிரியர்களின் முறையான பயிற்சி மற்றும் கண்காணிப்பின் கீழ் இறுதி ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்கள் பயன்படுத்தப்படலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. கொரோனா மேலாண்மையில் சேவைகளை வழங்கிய தனி நபர்கள் குறைந்தபட்சம் 100 நாட்கள் கோவிட் சிகிச்சை பணியை நிறைவு செய்தபிறகு எதிர்வரும் முறையான அரசு பணியமர்த்துதலில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவித்தது.  


NEET PG | நீட் பிஜி தேர்வை ஒத்திவைக்கும் முடிவுக்கு மருத்துவர்கள் எதிர்ப்பு..


மத்திய அரசின் இந்த அறிவிப்புகள் மருத்துவ மாணவர்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மருத்துவம் சாராத பணிகளில் ஐஐடி மாணவர்களை கட்டாயம் கோவிட்- 19 பணிகளில் மத்திய அரசு ஈடுபடுத்துமா? என்ற கேள்வியையும் முன்னெடுத்தனர்.