ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்கு முன்பாக நீட் (முதுகலை) 2021 தேர்வுகள் நடத்தப்படாது என்ற மத்திய அரசின் அறவிப்பு, மாநில அரசு மருத்துவமனைகளில் கோவிட்-19 பணியில் ஈடுபடுத்திக்கொண்டுள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், இறுதி ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்களை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவதற்கும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
கர்நாடக Resident Doctors அமைப்பின் தலைவர் இதுகுறித்து பிரதமர் மோடிக்கு விடுத்த கோரிக்கையில், "எம்பிபிஎஸ் முடித்த மாணவர்களின் முதுகலை படிப்பு கனவுகளை அரசு கேள்விக்குறியாகியுள்ளது. இது, மருத்துவர்களின் உழைப்பை சுரண்டுவதற்கு சமம். 100 நாட்கள் கோவிட் சிகிச்சை பணியை முடித்த மாணவர்களுக்கு அரசு பணியமர்த்துதலில் முன்னுரிமை அளிக்கப்படும் என்ற வாதமே முற்றிலும் தவறானது. இது, மறைமுகமாக மிரட்டப்படுவதற்கு சமமாகும். இது, பெருந்தொற்று காலம் தான். அதை யாரும் மறுக்கவில்லை. மருத்துவம் சாராத பணிகளில் ஐஐடி மாணவர்களை கட்டயாம் கோவிட்- 19 பணிகளில் மத்திய அரசு ஈடுபடுத்துமா? நீட் முதுகலை தேர்வில் தேர்ச்சி பெறுவது பல மாணவர்களின் குறிக்கோளாக உள்ளது. கோவிட் மேலாண்மைக்கான மனித வளங்களை மேம்படுத்துவதற்கு இது சரியான வழி அல்ல. உரிய முறையில் கூடுதல் மருத்துவ நிபுணர்களையும் , அதிகாரிகளையும் நியமிக்க முன்வர வேண்டும். 100 நாட்கள் பணி செய்தவர்களுக்கு கோவிட் தேசிய சேவை விருது இந்திய அரசால் வழங்கப்படும் என்பது என்ன வகையான யோசனை என்பது புரியவில்லை. அடுத்த 100 நாட்களுக்கு மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளுக்கு போதிய நிதியை ஒதுக்கீடு செய்தால் மருத்துவர்களாகிய நாங்கள் இந்திய அரசுக்கு மதிப்புமிக்க சேவை விருதை தருகிறோம்" என்று தெரிவித்தார்.
இந்திய மருத்துவ சங்கம்-மருத்துவ மாணவர் அமைப்பின் மாநிலத் தலைவர் டாக்டர் சின்மய் அக்ரே கூறுகையில்," முதுகலை நீட் தேர்வுகள் இந்த ஆண்டு ஜனவரியில் நடத்தப்படவேண்டியது. ஆனால், அவை ஏப்ரல் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டன. தற்போது, ஆகஸ்ட் மாதம்வரை நடத்தப்படாது என்று தெரிவிக்கப்படிருக்கிறது. இத்தகையை போக்கு முதுகலை மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்களுக்கு மனச்சோர்வையும், ஊக்கமின்மையும் ஏற்படுத்தும்" என்று தெரிவித்தார். கடந்த சில மாதங்களாக நீட் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளும் எம்.பி.பி.எஸ் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் முயற்சியையும் நேரத்தையும் சுரண்டுவதற்கு சமமாகும். தேர்வை ஒத்திவைப்பதால் சுகாதார துறைக்கு திறமையான மருத்துவர்களை அனுப்பமுடியாத சூழல் உருவாகும் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக, கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முக்கிய முடிவுகளுக்கு பிரதமர் உத்தரவிட்டார்.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கூடிய மாணவர்களை மாநில/ யூனியன் பிரதேச அரசுகள் தொடர்புகொண்டு கோவிட்-19 பணியில் அவர்களை ஈடுபடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். இந்த எம்பிபிஎஸ் மருத்துவர்களின் சேவையை கோவிட்-19 மேலாண்மையில் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆசிரியர்களின் கண்காணிப்பின் கீழ் கோவிட் மேலாண்மையில் மருத்துவ உள்ளுறைவாளர்களை (Medical Interns), உள்ளிருப்பு பயிற்சியின் சுழற்சி முறையில் மாநில/ யூனியன் பிரதேச அரசுகள் தற்போது நியமிக்கலாம் .
தொலை மருத்துவ சேவை மற்றும் லேசான கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில், ஆசிரியர்களின் முறையான பயிற்சி மற்றும் கண்காணிப்பின் கீழ் இறுதி ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்கள் பயன்படுத்தப்படலாம். முதுகலை மாணவர்களின் புதிய குழு இணையும்வரை, முதுகலை இறுதியாண்டு பயிலும் மாணவர்களின் மருத்துவ சேவை (பொதுவான மற்றும் சிறப்பு தனித்தன்மை வாய்ந்த) தொடரலாம். அதேபோல புதியவர்கள் நியமிக்கப்படும் வரை மூத்த மருத்துவர்கள்/ பதிவாளர்களின் சேவைகளையும் தொடரலாம்.
கோவிட் மேலாண்மையில் சேவைகளை வழங்கிய தனி நபர்கள் குறைந்தபட்சம் 100 நாட்கள் கோவிட் சிகிச்சை பணியை நிறைவு செய்தபிறகு எதிர்வரும் முறையான அரசு பணியமர்த்துதலில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கோவிட் சம்பந்தமான பணியில் ஈடுபடும் மருத்துவ மாணவர்கள் /தொழில் நிபுணர்களுக்கு தகுந்த தடுப்பூசி போடப்படும். இதுபோன்று பணியமர்த்தப்படும் அனைத்து மருத்துவ பணியாளர்களும், கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவ ஊழியர்களுக்கான அரசின் காப்பீட்டு திட்டத்தால் பயனடைவார்கள். 100 நாள் கோவிட் பணியில் இணையும் அனைத்து தொழில் வல்லுநர்களுக்கும், குறிப்பிட்ட காலத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்த பிறகு பிரதமரின் மதிப்புமிக்க கோவிட் தேசிய சேவை விருது இந்திய அரசால் வழங்கப்படும்.
இது போன்ற வழிமுறைகளில் பணியமர்த்தப்படும் கூடுதல் மருத்துவ பணியாளர்களின் சேவையை தனியார் கோவிட் மருத்துவமனைகளிலும், பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளிலும் மாநில அரசுகள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று பிரமதர் உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.