உடலில் தோன்றும் மரு (ஸ்கின் டேக்) எதனால் வருகிறது, எப்படி தடுக்கலாம், சிகிச்சை என்ன என்பதை தெளிவாக விளக்குகிறார் தோல் மருத்துவர் பூர்ணிமா.
மரு வர காரணம் என்ன?
ஸ்கின் டேக் எனப்படும் இந்த மரு வர முதல் காரணம் மரபணு. நம் முன்னோர்கள் தாத்தா பாட்டி, அப்பா அம்மாவுக்கு இது இருந்தால் நமக்கும் வர வாய்ப்புண்டு. ஆனால் வாழ்க்கை முறை மாற்றங்கள் அடிப்படையில் வராமலும் தடுக்கலாம். இது வந்தால் முதலில் சரிபார்பது நீரிழிவு இருக்கிறதா என்பதைத்தான். அதுவும் இதற்கு இன்னொரு முக்கிய காரணம் ஆகும். அதுக்கு மேல இதய நோய்கள், உடல் பருமன் இருந்தால் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
சிகிச்சை அவசியமா
இதற்கான சிகிச்சை மிக மிக எளிய சிகிச்சைதான். ஆனால் அதை செய்தே ஆகவேண்டுமா என்றால் கண்டிப்பாக இல்லை. இது உடலில் இருப்பதன் மூலமாக உடலுக்கு எந்த வித பாதிப்பும் வரப் போவதில்லை. இது வெறும் கூடுதல் தோல் அவ்வளவுதான். இதற்காக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது முழுக்க முழுக்க தோற்றம் சம்மந்தப்பட்டது. உங்களுக்கு அது இருப்பது அசவுகர்யமாக உணர்ந்தால் செய்துகொள்ளலாம்.
சிகிச்சை எப்படி?
இதற்கான சிகிச்சைக்கு க்ரீம் தடவினால் எல்லாம் போகாது. அதற்கென டிவைஸ்கள் உள்ளன, அவற்றை வைத்து சூடாக்கி உருக்கி எடுப்பது தான் ஒரே வழிமுறை. செய்வதற்கு முன் 'நம்பிங் க்ரீம் (Numbing Cream)' தடவுவதால் சுத்தமாக வலியும் இருக்காது. மேலும் 20 நிமிடம் முதல் அரை மணி நேரத்திற்குள் முடியும் சிகிச்சை தான் இது. சிகிச்சைக்கு பிறகு திரும்பவும் வராமல் இருக்க நமது வாழ்க்கை முறை மாற்றம் தேவை. சிகிச்சைக்கு பின்னரும் நமது இன்சுலின் அளவுகள் அப்படியே இருந்தன என்றால், மீண்டும் நம் உடலில் தோன்றலாம், ஆனால் ஏற்கனவே எடுத்த இடத்தில் தோன்றாது, உடலில் வேறு எங்காவது தோன்றலாம்.
வார்ட் மருவும் இதுவும் ஒன்றா?
வார்ட் என்பது ஒரு வைரல் நோய் ஆகும். அது பரவக்கூடிய நோய். அது இந்த மரு போல இல்லாமல் கொஞ்சம் தட்டையாக இருக்கும். அவற்றை கண்டிப்பாக சிகிச்சை செய்ய வேண்டும். ஏனென்றால் மிக எளிதாக வேறு ஒருவருக்கு பரவும் என்பதால் உடனடியாக சிகிச்சை அளிப்பது நல்லது. அதற்கும் இதே போன்ற சிகிச்சைதான் செய்யப்படும், பயப்பட தேவை இல்லை. அவை வராமல் தடுக்க எல்லா இடங்களையும் தொடாமல், கொஞ்சம் கவனமாக இருந்தாலே போதும். வெறும் கால்களுடன் நடப்பதை குறைத்து வீட்டில் இருக்கும்போது கூட செருப்பு போட்டு நடக்கலாம். வெளியில் சென்று வந்தால் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். கோயில் போன்ற இடங்களில் செருப்பு இல்லாமல் நடக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் கண்டிப்பாக வந்த கால்களை கழுவுவது அவசியம்.