தமிழக முதல்வரின் புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் படிப்பை கைவிட்ட 13 ஆயிரம் மாணவிகள் மீண்டும் கல்லூரிகளில் சேர்ந்துள்ளதாக தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் தெரிவித்தார்.
தமிழ் இணைய கல்வி கழகம் சார்பில் நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறையினருக்கு உணர்த்தும் வகையில் மாபெரும் தமிழ்கனவு என்கிற சொற்பொழிவு நிகழ்ச்சி தூத்துக்குடி தூய மரியன்னை மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமை வகித்தார். தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும்போது, “பெண்கள் உயர்கல்வி பயில வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதுமைப் பெண் என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். இந்த திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு உயிர் கல்வி பயிலும் காலத்தில் மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் பள்ளி படிப்போடு படிப்பை நிறுத்திவிட்டு ஓராண்டு, இரண்டு ஆண்டு என வீடுகளில் இருந்த 13 ஆயிரம் மாணவிகள் மீண்டும் இந்த ஆண்டு கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதுவே இந்த திட்டத்தின் மகத்தான வெற்றி. மாணவிகள் பாடப்புத்தகத்தை மட்டும் படிக்காமல் பிற புத்தகங்களையும் படித்து அறிவாற்றலை வளர்த்து கொள்ள வேண்டும். உங்களை திறமையுள்ளவர்களா, தகுதியானவர்களாக, அறிவாற்றல் மிக்கவர்களாக மாற்றி கொள்ள வேண்டும். செல்போன்களில் அதிக நேரத்தை செலவு செய்யாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றலை வளர்த்து கொள்ள வேண்டும்” என்றார்.
மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் (மாநில திட்டக்குழு) துணைத் தலைவர் ஜெயரஞ்சன் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு பேசும்போது, நாட்டின் பொருளாதாரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்துக்கு அடுத்தப்படியாத தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. இதற்கு காரணம் கிராமங்களில் ஏற்பட்ட மாற்றமே காரணம். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் கிராமங்கள் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளன. தமிழகத்தில் தனிநபர் வருமானம் மற்ற மாநிலங்களை காட்டிலும் 4.5 மடங்கு அதிகமாக உள்ளது. மற்ற மாநிலங்களில் தனிநபர் சராசரி ஆண்டு வருமானம் ரூ.60 ஆயிரம் என்ற நிலையில் இருக்கும் போது தமிழகத்தில் தனிநபர் சராசரி ஆண்டு வருமனம் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை உள்ளது.
உபி மாநிலத்தில் உள்ள 22 கோடி மக்கள் செலுத்தும் ஜிஎஸ்டி வரியை விட 8 கோடி மக்கள் கொண்ட தமிழகம் நான்கரை மடங்கு அதிக ஜிஎஸ்டியை செலுத்துகிறது. தமிழகம் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. விரைவில் நாட்டின் பொருளாதரத்தில் தமிழகம் முதலிடத்துக்கு வரும் என்றார். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அருட்சகோதரி லூசியா ரோஸ், ஊடகவியலாளர் குணசேகரன் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள், தூத்துக்குடி பகுதியில் உள்ள கல்லூரிகளை சேர்ந்த திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.