இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நடைறெ்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 480 ரன்களை ஆஸ்திரேலிய அணி குவித்தது. இந்த நிலையில், ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. 2ம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 36 ரன்களை குவித்தது. கேப்டன் ரோகித்சர்மா 17 ரன்களுடனும், சுப்மன்கில் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.


மாயமான பந்து:


இந்திய அணி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது நாதன் லயன் பந்தில் சுப்மன்கில் அபாரமான சிக்ஸர் ஒன்றை விளாசினார். நேர் திசையில் சென்ற அந்த பந்து மைதானத்தில் ரசிகர்கள் இருக்கைக்குள் சென்றது. பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்வதற்கு ஏதுவாக அந்த பகுதியில் மட்டும் இருக்கைகள் வெள்ளை நிற துணியால் மூடப்பட்டிருந்தது.




இதனால், அந்த துணிக்குள் சென்ற பந்து காணாமல் போனது. அப்போது, அங்கே கூட்டத்தில் நின்ற ரசிகர் ஒருவர் அந்த வெள்ளை துணியால் மூடப்பட்டிருந்த இருக்கைகளுக்குள் உள்ளே நுழைந்து மாயமான பந்தை கண்டுபிடித்தார். பந்தை கண்டுபிடித்த மகிழ்ச்சியில் மேலே வந்த அந்த ரசிகர், அங்கே இருந்த ரசிகர்கள் கூட்டத்தை பார்த்து ஆர்ப்பரித்தார். இதனால், போட்டி சில நிமிடங்கள் தாமதமானது. இந்த ரசிகர் பந்தை எடுத்து மைதானத்திற்குள் வீசுவதற்காக பேட்ஸ்மேன்களும், நடுவர்களும், ஆஸ்திரேலிய வீரர்களும் காத்திருந்தனர்.


வலுவான நிலையில் ஆஸ்திரேலியா:


இந்த வீடியோவும், இந்த புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது. இந்த போட்டியில் உஸ்மான் கவாஜாவின் 180 ரன்களும், கேமரூன் கிரீனின் 114 ரன்களும் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையை எட்ட உதவியது. இந்திய அணிக்காக அஸ்வின் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் இன்றைய போட்டி நேர மடிவில் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்களை எடுத்திருந்தது.


இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷஹிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை உறுதி செய்யும். தற்போது வரை இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பு பிரகாசமாக இருந்தாலும் இந்த போட்டியில் தோல்வியடையாமல் இருப்பதை உறுதி செய்ய வேணடும். போட்டி முடிய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்சில் இமாலய இலக்கை குவிக்க வேண்டியது அவசியம் ஆகும். அதேசமயம் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதால் 2வது இன்னிங்சில் இரண்டு அணிகளும் அபாரமாக பேட்டிங் செய்தால் போட்டி டிராவில் முடிவடையே வாய்ப்புகள் அதிகம் ஆகும்.


மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்ல நியூசிலாந்து அணியை வீழ்த்தும் முனைப்புடன் இலங்கை அணியும் ஆடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.