உலகெங்கிலும் உள்ள பலருக்கு தேநீர் ஒரு முக்கிய பானமாகும், ஏனெனில் இதைப் பருகுபவருக்கு இது சரியான ஊக்கத்தை அளிக்கிறது மற்றும் நாள் முழுவதும் ஒருவரை உற்சாகமாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கும் என்றும் நம்பப்படுகிறது. ஆனால், இது டைப் 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? எட்டு நாடுகளைச் சேர்ந்த 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மீதான ஆராய்ச்சியின்படி, ப்ளாக்,க்ரீன் அல்லது ஊலாங் தேநீர் உட்கொள்வது இந்த வளர்சிதை மாற்ற நிலையைப் பெறுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.


நீரிழிவு ஆய்வுக்கான ஐரோப்பிய சங்கம் (EASD) வருடாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வில், ஒரு நாளைக்கு நான்கு கப் தேநீர் உட்கொள்வது, சராசரியாக 10 ஆண்டுகளில் டைப் 2 நீரிழிவு நோயின் அபாய அளவை 17 சதவிகிதம் வரைக் குறைக்கிறது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.





சீனாவில் உள்ள வுஹான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சியாயிங் லி கூறுகையில், "எங்கள் முடிவுகள் நம்பிக்கை அளிப்பதாக உள்ளன, ஏனென்றால் மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள ஒரு நாளைக்கு நான்கு கப் கிரீன் தேநீர் குடிப்பது போன்ற எளிய செயல்களைச் செய்யலாம் என்று ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர், இது வகை 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கும். தேநீரில் பால் சேர்ப்பதன் மூலம் தேநீரின் பாதுகாப்பு விளைவு அதிகரிக்கக்கூடும் என்று அவர் கூறினார். "நீரிழிவின் மீதான தேநீரின் தாக்கத்தை பால் மேலும் வலுப்படுத்தும் என்று நான் நினைக்கிறேன். அதனால் பாலுடன் கிரீன் தேநீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்று அவர் பரிந்துரைக்கிறார்.