ஆரம்ப நிலையிலேயே சளி, இருமல் தொந்தரவுகளை வீட்டிலேயே எளிதில் சரி செய்ய கைவைத்தியமாக ஆடாதோடை இலைகளைப் பயனப்டுத்தலாம்.


ஆடாதோடை:


ஆடாதோடை அதிகளவு கரியமில வாயுவை உள்வாங்கி, பிராண வாயுவை வெளியிடுகிறது.  இது அதிகளவு ஆக்ஸிஜனை வெளியிடுவதால் இதனை ஆயுள் மூலிகை என்றும் அழைக்கின்றனர். இதன் வேர், பட்டை, பூ, இலை அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்டது. மனிதனை அன்றாடம் துரத்தும் சுவாசம்  சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இது அருமருந்தாகும்.


ஆடாதோடை தென்னிந்தியாவில் பல இடங்களில் காணப்படும் மூலிகையாகும். ஆடாதோடை சிறு செடியாகவும், ஒரு சில இடங்களில் மரமாகவும் காணப்படும். இதன் இலை மாமர இலை வடிவில் இருக்கும். ஆடுகள் தொடாத இலை என்பதால் இது ஆடாதோடா என மருவி பெயர் பெற்றுள்ளது.


ஆடாதோடையின் 5 மருத்துவக் குறிப்புகளைக் காண்போம்


ரத்தத்தை சுத்திகரிக்கும்:


ஆடாதோடை இலைகள் ரத்தத்தை சுத்திகரிப்பதில் அதிக சக்தி கொண்டது. இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இதயம் சம்பந்தமான நோய்களை அகற்றுகிறது. இது ரத்தத்தில் ஏற்படும் அடைப்புகளை நீக்கக் கூடியது. ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கும். 


இருமல், மூக்கடைப்பை நீக்கிடும்:


மனித  உடலில் நுரையீரல் முக்கிய உறுப்பாகும். இது சுவாசக் காற்றை உள்வாங்கி அதிலுள்ள பிராணவாயுவைப் பிரித்து எடுத்துக் கொண்டு கரியமில வாயுவை  வெளியேற்றுகிறது. நுரையீரல் நன்கு செயல்பட்டால் தான் இரத்தம் சுத்தமடையும். இதனால் நீண்ட ஆயுளும் கிடைக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த  நுரையீரலைப் பலப்படுத்த ஆடாதோடை சிறந்த மருந்தாக உள்ளது. இது நுரையீரல் காற்றுச் சிற்றறைகளில் உள்ள அசடுகளை (சளி) நீக்கி ஆரோக்கியமாக  வைத்திருக்க உதவுகிறது. குளிர் காலத்தில் ஏற்படும் சளி, மூக்கடைப்பு, இருமல் ஆகியனவற்றை சரி செய்யும். ஆடாதோடை இலைகளை சிறியதாக வெட்டி நீரில் கொதிக்க வைத்து அதை வடிகட்டி தேன் கலந்து பருகலாம்.


ஆடாதோடை இலை, தூதுவளை இலை சம அளவு எடுத்து காயவைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் காலை, மாலை வேளைகளில் தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் அனைத்தும் நீங்கும்.  


வாத வலி நீங்க:


ஆடாதோடை இலை, சளி தொல்லைக்கு மட்டுமல்ல வாத வலிக்கும் சிறந்த நிவாரணியாக இருக்கும். குளிர் காலத்தில் வயதானோருக்கு ஏற்படும் மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணியாகவும் இருக்கிறது.


யூரிக் அமிலம் அதிகரித்தால் ஆடாதோடை உட்கொள்ளலாம்


சிறுநீரில் யூரியா அதிகரிப்பதை யூரேமியா எனக் கூறுகின்றனர். யூரேமியா ஏற்படும்போது அது சிறுநீரக செயலிழப்புக்கு வழி வகுக்கிறது. ஆகையால் ஆடாதோடையை உட்கொள்வதால் யூரியா குறையும். ஆடாதோடையில் நிறைய பயோ ஆக்டிவ் மூலக் கூறுகள் உள்ளன அவை சிறுநீரக செயல்பாட்டை ஊக்குவிக்கும். 


கபம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு:


மூக்கில் நீர்வடிதல், சளி, வறட்டு இருமல், தலைபாரம், இளைப்பு, சைனஸ், ஆஸ்துமா போன்ற கபம் சார்ந்த பிரச்சனைகள் இருப்பவர்கள் உடனடியாக பலம் பெற ஆடாதோடை குடிநீரை குடித்து வரலாம்.