Fact Check: தேர்தல் வாக்குறுதியான மகாலட்சுமி திட்டம் தொடர்பாக காங்கிரஸ் வெளியிட்டதாக, பரவும் விளம்பர வீடியோவின் உண்மைத்தன்மை தொடர்பாக கீழே விவரிக்கப்பட்டுள்ளது.


இணையத்தில் பரவும் வீடியோ:


சிலம்புச்செல்வி ராஜ்குமார் என்ப்வர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ”காங்கிரஸ் வெளியிட்டுள்ள அசத்தல் வீடியோ.. உண்மையில் நாரி ஷக்தியை மதிப்பது என்றால் திராவிட மாடல் ஆட்சியை போல அவர்களின் உழைப்பை அங்கீகரிப்பது தானே தவிர பேடி பச்சாவோ போல விளம்பரங்கள் செய்வதல்ல. மகாலட்சுமி திட்டம் கடைக்கோடி கிராமங்கள் வரை பெரும் புயலை கிளப்பியுள்ளது” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ”ஒரு பெண் மற்றொரு பெண்ணை பார்த்து இரண்டு வேலை செய்வதை குறித்து கேள்வி எழுப்புவதாக உள்ளது. அதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி காங்கிரஸின் மகாலட்சுமி திட்டம் குறித்து மேடையில் பேசும் காட்சிகளும்” இடம்பெற்றுள்ளன.






மகாலட்சுமி திட்டம் என்றால் என்ன?


காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் மகாலட்சுமி எனும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி, வறுமை நிலையில் இருக்கும் குடும்பத்தில் இருக்கும் பெண்களில் மூத்தவருக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்நிலையில் தான், மகாலட்சுமி திட்டம் குறித்து காங்கிரஸ் விளம்பரம் செய்ததாக மேற்கண்ட வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டோம்.




                                 காங்கிரஸின் மகாலட்சுமி திட்டம்


உண்மை என்ன?


மகாலட்சுமி திட்டம் குறித்து காங்கிரஸின் விளம்பரம் என ஒரு வீடியோ வைரலானதை தொடர்ந்து, அதனை தனித்தனி புகைப்படங்களாகப் பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அதில் “Prega News Missed The Mark With Its Latest “Empowering” Ad” என்று தலைப்பிட்டு யூத் கி அவாஸ் எனும் ஊடகம் மார்ச் 09, 2022 அன்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அச்செய்தியில் பிரகா நியூஸ் பெண்கள் கருவுறுதல் குறித்து அவர்களின் சுதந்திரத்திற்கு எதிராக விளம்பரம் வெளியிட்டதாக விமர்சிக்கப்பட்டிருந்தது. அதில் காங்கிரஸ் வெளியிட்டதாக பரப்பப்படும் விளம்பரத்தின் காட்சிகள் முகப்பு படமாக வைக்கப்பட்டிருந்தது.




       காங்கிரஸின் விளம்பரம் என இணையத்தில் வைரலாகும் வீடியோவின் ஸ்க்ரீன் ஷாட் 


இதனைத் தொடர்ந்து பிரகா நியூஸின் யூடியூப் சேனலில் தேடுகையில் ‘Celebrate Women’s Day 2022 With Prega News | #SheCanCarryBoth’ என்று தலைப்பிட்டு பிப்ரவரி 19, 2023 அன்று விளம்பரம் ஒன்று பதிவிட்டிருப்பதை காண முடிந்தது. அவ்வீடியோவின் 40 ஆவது நொடியில் வைரலாகும் வீடியோவில் வரும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது. இந்த விளம்பரத்தை முழுமையாக கண்டபின் இந்த விளம்பரத்துக்கும் மகாலட்சுமி திட்டத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அறிய முடிந்தது. இந்த விளம்பரமானது பெண்கள் கருவுற்றாலும் பிடித்த வேலையை செய்யலாம் எனும் கருத்தை தெரிவிப்பதாக இருந்தது.




            பிரகா நியூஸின் யூடியூப் சேனலில் வெளியான விளம்பரத்தின் ஸ்க்ரீன் ஷாட்


தொடர்ந்து தேடியதில் SG Dream Media எனும் விளம்பர நிறுவனம் மகளிர் தினத்தை முன்னிட்டு பிரகா நியூஸ் நிறுவனத்துக்கு இந்த விளம்பரத்தை உருவாக்கியதாக கூறி இதே விளம்பரத்தை பகிர்ந்திருப்பதை காண முடிந்தது. இதனையடுத்து மகாலட்சுமி திட்டம் குறித்து காங்கிரஸ் வைரலாகும் வீடியோவை வெளியிட்டிருந்ததா என தேடினோம். இத்தேடலில் மகாலட்சுமி திட்டம் குறித்து காங்கிரஸ் வேறு ஒரு விளம்பரத்தை உருவாக்கி, அதன் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் பகிர்ந்திருப்பதை காண முடிந்தது. இதுதவிர்த்து மற்றொரு விளம்பரம் தமிழ்நாடு காங்கிரஸின் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.



இவ்விரண்டு விளம்பரங்களை தவிர்த்து மகாலட்சுமி திட்டம் குறித்து வைரலாகும் இந்த விளம்பரத்தையோ, அல்லது வேறு விளம்பரத்தையோ காங்கிரஸ் கட்சியோ அல்லது கட்சி நிர்வாகிகளோ உருவாக்கி பகிர்ந்திருக்கவில்லை. கிடைத்த ஆதாரங்களின்படி,  பிரகா நியூஸின் விளம்பரத்தின் சில பகுதிகளையும் மகாலட்சுமி திட்டம் குறித்த ராகுல்காந்தி பேச்சையும் இணைத்து வைரலாகும் இவ்வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது. இந்த விளம்பரத்துக்கும் காங்கிரசுக்கும் எவ்வித தொடர்புமில்லை எனவும் உறுதியாகியுள்ளது.



தீர்ப்பு:


மகாலட்சுமி திட்டம் குறித்து காங்கிரஸ் விளம்பரம் செய்ததாக வைரலாகும் வீடியோ தவறானது என்பது, உரிய ஆதாரங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. எனவே  வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என வலியுறுத்தப்படுகிறது.


பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக Newchecker என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தியை சற்றே திருத்தி எழுதியுள்ளது.