பிரசார மேடையில் ஒருவர் தவறி விழும் புகைப்படத்தை மோடி விழுந்தது போன்று சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
மோடி போன்று ஆடை அணிந்த நபர் ஒருவர் மேடை ஏறும் போது தவறி விழும் வீடியோ எக்ஸ் தளம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. முகம் தெளிவாகத் தெரியவில்லை. நிலைத் தகவலில், “400 கவிழ்ந்த காட்சி ஸ்டேஜ்க்கு அடில தேடுறானோ?” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பிரதமர் நரேந்திர மோடி பிரசார மேடையில் தவறி விழுந்ததாக எந்த செய்தியும் இல்லை. அப்படி அவர் விழுந்திருந்தால் அது பெரிய செய்தியாகியிருக்கும். அதே நேரத்தில் வீடியோவில் உள்ளவர் மோடி என்பது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. வீடியோவில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெளிவாகத் தெரிகிறார். ஆனால், அவருக்கு முன்னால் செல்லும் நபர் முகம் சரியாகத் தெரியவில்லை. அவர் அணிந்திருக்கும் ஆடை, யோகிக்கு முன்பாக கம்பீரமாக மேடை ஏறும் காட்சி… மேடை ஏறும் போது “மோடி, யோகி ஜிந்தாபாத்” என்று கோஷம் எழுப்பப்படுவது எல்லாம் அந்த நபர் மோடி என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
மேலும், 400 கவிழ்ந்தது, மேடைக்கு அடியில் தேடுகிறாரா என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் மறைமுகமாக மோடி விழுந்தார் என்பது போன்ற தோற்றத்தை இந்த பதிவு ஏற்படுத்துகிறது. எனவே, இது என்ன வீடியோ என்று ஆய்வு செய்தோம்.
வீடியோவில் தவறி விழுந்த நபருக்கு பின்னால் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வருகிறார். தவறி கீழே விழுந்த நபரைப் பார்த்து அவருக்கு எந்த பதற்றமும் ஏற்படவில்லை. அவரை தூக்கிவிடவும் முயலவில்லை. பாதுகாவலர்களைப் பார்த்துத் தூக்கி விட சொல்வது போல் உள்ளது. மோடி விழுந்திருந்தால் ஓடிப்போய் தூக்கியிருப்பார். எனவே, கூகுளில் உத்தரப்பிரதேச பிரசார மேடையில் தவறி விழுந்த பாஜக நிர்வாகி என்று ஆங்கிலத்தில் டைப் செய்து தேடினோம்.
நம்முடைய தேடலில் விழுந்த நபர் உத்தரப்பிரதேசம் பாஜக எம்.பி ஜகதாம்பிகா பால் என்பது தெரியவந்தது. இவர் உத்தரப்பிரதேச மாநிலம் டோமரியகஞ்ச் (Domariyaganj) தொகுதி எம்.பி-யாக உள்ளார். மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த தொகுதிக்கு உட்பட்ட சித்தார்த் நகர்ப் பகுதியில் பிரசாரம் மேற்கொள்ள யோகி வந்த போது இந்த நிகழ்வு நடந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிகழ்வின் புகைப்படங்கள், வீடியோக்களும் நமக்குக் கிடைத்தன.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் கீழே விழுந்த நபர் யார் என்று தெளிவாக குறிப்பிடவில்லை. அப்படிக் குறிப்பிட்டிருந்தால் விழுந்தது மோடி என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்காது. உண்மையை மறைத்து, 400 விழுந்தது என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் தவறான புரிதலை இந்த பதிவு ஏற்படுத்தியிருப்பது உறுதியாகிறது.
முடிவு:
பிரசார மேடையில் தவறி விழுந்தது யார் என்று குறிப்பிடாமல் மோடி விழுந்தது போன்று தோற்றம் ஏற்படும் வகையில் பகிரப்பட்டுள்ள வீடியோவில் இருக்கும் நபர் பாஜக எம்பி ஜகதாம்பிகா பால் என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக Factcrescendo என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை சற்றே திருத்தி எழுதியுள்ளது.