கார்த்தி நடித்த ஜப்பான் படத்தின் தோல்விக்கான காரணம் என்ன என்பதை எழுத்தாளர் பவா செல்லதுரை நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


படுதோல்வி அடைந்த ஜப்பான் 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கார்த்தி நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ”ஜப்பான்” படம் வெளியானது. இது கார்த்தியின் 25வது படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரிலீசான நிலையில் படுதோல்வி அடைந்தது. சமூக பிரச்சினைகளை மையப்படுத்தி படம் எடுக்கும் ராஜூ முருகன் இந்த படத்தை இயக்கிய நிலையில் அனு இம்மானுவேல் ஹீரோயினாக நடித்திருந்தார். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்துக்கு இசையமைத்திருந்தார். 


மேலும் சுனில் வர்மா, விஜய் மில்டன், பவா செல்லதுரை, ஜித்தன் ரமேஷ் உள்ளிட்டவர்களும் நடித்திருந்தனர்.  மிகப்பெரிய அளவில் முன்னோட்ட விழா எல்லாம் எடுத்து ரிலீசான ஜப்பான் படம் சில நாட்கள் மட்டுமே தியேட்டரில் ஓடியது. படத்தின் திரைக்கதை சொதப்பலாக அமைந்ததே இதற்கு காரணமாக விமர்சிக்கப்பட்டது. மேலும் கார்த்தி மற்றும் ராஜூ முருகனிடம் இருந்து இப்படி ஒரு படைப்பை சற்றும் எதிர்பார்க்கவில்லை என ரசிகர்கள் ஆதங்கப்பட்டனர். 


பவா செல்லதுரை விமர்சனம் 


இதனிடையே சமூக வலைத்தளங்களில் ஜப்பான் படத்தை பற்றி அதில் நடித்த எழுத்தாளர் பவா செல்லதுரை பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில், “ஜப்பான்னு நான் ஒரு படம் நடிச்சேன். அந்த படம் படுதோல்வி அடைந்ததில் எனக்கு ரொம்ப வருத்தம் இருந்தது. ராஜூமுருகன், முருகேஷ் பாபு இவர்கள் எல்லாம் அதில் வேலை பார்த்தார்கள். அந்த படம் ரொம்ப பிரமாதமாக வந்திருக்க வேண்டிய டார்க் ஹூயூமர் படம். ஆனால் படத்தில் அப்படி வரவே இல்லை. ஜப்பான் படத்துல ஹூயூமர் என நினைத்த இடமெல்லாம் சீரியஸாக இருந்தது.


அதனால் சரியாக போகவில்லை. ஹீரோவிடம் விடாமல் ராஜூ முருகன், முருகேஷ் பாபுவிடம் அந்த படத்தை கொடுத்திருந்தால் பிரமாதமான காமெடி படமாக வந்திருக்கும் என்று எனக்கு தோன்றியது. தமிழ் சினிமாவில் எல்லாருடைய தலையீடும் இருக்கத்தான் செய்கிறது. ஹீரோவுக்கு அவருடைய படம் தன்னோட கதையை எப்படி பண்ணனும்ன்னு சொல்றாரு, தயாரிப்பாளரோ அவர் பங்குங்கு ஒன்று சொல்கிறார். இசையமைப்பாளர், எடிட்டர் சொல்வாங்கன்னு நினைக்கிறேன். ஆனால் இயக்குநரோ, கதையாசிரியரோ குழம்பி போயிடுகிறான். இவரை திருப்திப்படுத்த 10%, அவரை திருப்திப்படுத்த 10% என இயக்குநரின் கலை என்பது மொத்தமாக போய்விடுகிறது என பவா செல்லதுரை தெரிவித்துள்ளார். இதனால் கார்த்தி தலையீடு இருந்ததாக பவா செல்லதுரை சொல்ல வருகிறாரா என இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர் 




மேலும் படிக்க: AR Rahman: இசையமைப்பாளருக்கு இப்படிப்பட்ட படம் பரிசு - ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டித் தள்ளிய படம் எது தெரியுமா?