'தி கோட் லைஃப்'


மலையாளத்தில் பென்யமின் எழுதிய ஆடு ஜீவிதம் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் 'தி கோட் லைஃப்' (The Goat Life). தேசிய விருது வென்ற ப்ளெஸ்ஸி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ் , மலையாளம் , இந்தி கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ப்ரித்விராஜ் இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.


இப்படத்தில் ப்ரித்விராஜின் மனைவியாக அமலா பால் நடித்துள்ளார். ஏ.ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஆடு ஜீவிதம் நாவலை படமாக எடுக்க இருப்பதாக இயக்குநர் ப்ளெஸ்ஸி கடந்த 2010-ஆம் ஆண்டு அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு சிக்கல்களால் இந்த முயற்சி தடைபட்டது.


தற்போது இப்படம் முழுமையடைந்து சர்வதேச திரைப்படம் விழாக்களில் அங்கீகாரம் பெற்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஆடு ஜீவிதம் படத்தின் ட்ரெய்லர் மார்ச் 10ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியானதைத் தொடர்ந்து நடிகர் ப்ரித்விராஜூக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 


மலையாளத்தில் எழுதப்பட்ட இந்த நாவல் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தற்போது படமாகியுள்ள இந்த கதை காட்சி ரீதியாகவும் நடிப்பு ரீதியாகும் பார்வையாளர்களுக்கு மிகப்பெரிய அனுபவமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


”காலம் கடந்து நிற்கக்கூடிய இசை"


பல்வேறு சவால்களுக்குப் பிறகு இந்தப் படத்தை எடுத்துள்ள படக்குழு ஒவ்வொரு காட்சியாக படத்தை மெருகேற்றி இருக்கிறார்கள்.  இந்தநிலையில், தி கோட் லைஃப் படம் குறித்து சில விஷயங்களை நமது ஏபிபி  தளத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பிரத்யேகமாக பேட்டியாக அளித்திருக்கிறார்.


அந்தப் பேட்டியில் அவர் பேசியதாவது: ”கோட் லைஃப் படத்தின் கதை அற்புதமானது. உண்மையான கதையை தழுவி எடுக்கப்பட்ட படம் கோட் லைஃப்.  இசையமைப்பாளருக்கு இப்படிப்பட்ட படம் ஒரு பரிசு. மிகவும் பிரம்மாண்டமான படம் இது. இந்த படத்திற்காக சிறப்பாக பணியாற்றி இருக்கிறோம். மக்களுக்கு இந்த படம் கண்டிப்பாக பிடிக்கும் என்று நம்புகிறேன்.


ஆஸ்கர் விருது என்பது நல்ல விஷயம். ஆனால், விருது மட்டும் உங்கள் வேலையை அங்கீகரிக்காது. சில வேலைகள் எல்லாம் காலம் கடந்தும் பாராட்டப்படும். இந்த படத்தில் இசை என்பது தற்காலத்திற்கேற்ப அமைக்கவில்லை. காலம் கடந்து நிற்கக்கூடிய வகையில் இசை அமைக்கப்பட்டுள்ளது. 


இந்த படத்தில் எனக்கு பெரியோனே பாடல் பிடித்திருக்கிறது. அதோடு, Hope பாடல் புதிதான ஒன்று. அனைத்து மொழிகளையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது தான் hope பாடல். இந்தப் பாடலுக்கு மக்கள் மத்தியில் இருந்து எந்த மாதிரியான கருத்துகள் வரும் என்பது தெரியவில்லை. ஆனால், இந்த பாடலின் இசை மற்றும் வீடியோவை மக்கள் பார்த்தால் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.