Vijayakanth: உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற விஜயகாந்த் ஓய்வில் இருந்து வரும் நிலையில், தான் நடித்த படத்தின் சண்டைக்காட்சி குறித்து விஜயகாந்த் பேசும் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேப்டன் என்று ரசிகர்களாலும், கட்சி தொண்டர்களாலும் அழைக்கப்படும் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிப்பு காரணமாக பொதுவெளியில் வராமல், பேசமுடியாமல் ஓய்வில் இருந்து வருகிறார். கடந்த வாரம் விஜயகாந்திற்கு சுவாசக்கோளாறு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் வீடு திரும்பிய விஜயகாந்த் தலைமையில் அண்மையில் தேமுதிக கட்சியின் பொது கூட்டம் நடைபெற்றது. அப்போது உடல்நலன் குன்றி பிறரின் உதவியுடன் இருந்த விஜயகந்தை பார்த்த கட்சி தொண்டர்களும், ரசிகர்களும் மிகுந்த கவலையடைந்தனர். இந்த நிலையில் விஜயகாந்த் தான் நடித்த படத்தின் சண்டைக்காட்சி குறித்து முன்னர் பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
சேதுபதி ஐபிஎஸ் படத்தில் தான் நடித்தது குறித்து பேசிய விஜயகாந்த், “நான் என்னுடைய ஆபிசில் இருந்து கிளம்பி வரும்போது தீவிரவாதிகள் என்னை தாக்கும் ஒரு காட்சி இடம்பெற்றது. ரோட்டில் 70 கார்கள் நிறுத்தப்பட்ட சண்டைக்காட்சி அது. ஒரே நாளில் அதை படமாக்க முடியவில்லை. ஒவ்வொரு நாளும் அத்தனை வாகனங்களை நிறுத்தி சண்டைக்காட்சி எடுக்கப்பட்டது.
அந்த சண்டைக்காட்சி மட்டுமே 18 நாட்களுக்கு எடுக்கப்பட்டது. கடைசியாக 2 நாட்களில் மட்டுமே மழை இல்லாமல் இருந்தது. இதுவரைக்கும் நான் அதிகமாக ரிஸ்க் எடுத்து நடித்த சண்டைக்காட்சி அதுதான். அவ்வளவு ரிஸ்க் எடுத்து அந்த சண்டைக்காட்சியில் நடித்திருந்ததால் மக்கள் மனதில் அதிகமாக பேசப்பட்டது” என பேசியுள்ளார்.
1994ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் வெளிவந்த சேதிபதி ஐபிஎஸ் படத்தில் விஜயகாந்தும், அவருக்கு ஜோடியாக மீனா, விஜயகுமார், ஸ்ரீவித்யா, கவுண்டமணி, செந்தில் என பலரும் நடித்திருந்தனர். இதில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த விஜயகாந்தின் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களை பெரிதாக கவர்ந்தன.
மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil: கரப்பான்பூச்சியால் வந்த வம்பு.. விக்ரமுக்கு ஆதரவாக மாயாவை ‘நறுக்’ கேள்வி கேட்ட கமல்!