Vijayakanth: இரண்டு ஆண்டுகளாக விஜயகாந்தை ஆரத் தழுவி கட்டி அணைத்து முத்தமிட வேண்டும் என நினைத்தேன் என்று இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் உருக்கமாக கண்ணீருடன் இரங்கல் தெரிவித்துள்ளார். 


தேமுதிக கட்சி தலைவர்  விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். சென்னை கோயம்பேட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு கட்சி தொண்டர்களும், அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும், ரசிகர்களும் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் இயக்குநரும், விஜயகாந்தின் நெருங்கிய நண்பருமான எஸ்.ஏ. சந்திரசேகரன் கண்ணீருடன் இரங்கல் தெரிவித்து ஒலிப்பதிவை வெளியிட்டுள்ளார். 

அவர் வெளியிட்ட பதிவில், ”எனது இனிய நண்பர் விஜயகாந்த் அவர்களை உயிரோடு இருக்கும்போதே சந்தித்து ஆரத் தழுவி கட்டி அணைத்து முத்தமிட வேண்டும் என்று கடந்த 2 ஆண்டுகளாக நான் ஆசைப்பட்டேன். அதற்காக முயற்சியும் செய்தேன். ஆனால் அந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. தற்போது இந்த நிலையிலேயே அவரது உயிரற்ற உடலை நான் பார்க்கக் கூடாது என்று கடவுள் நினைத்தாரோ என்னவோ நான் அவரைப் பார்க்க முடியாத நிலையில் இருக்கிறேன்.இந்த நாளில் நான் துபாயில் இருக்கிறேன்.

திரையுலகிலும் சரி அரசியல் உலகிலும் சரி அவர் சகாப்தம் படைத்தவர். அந்த சகாப்தம் இன்றுடன் முடிந்து இருக்கிறது. இதற்காக கண்ணீர் சிந்துவதைத் தவிர எனக்கு வேறு மொழி தெரியவில்லை. அவர் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது அஞ்சலியுடன் அவரது ஆத்மா சாந்தி அடைய நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என உருக்கமாக கூறியுள்ளார். 






விஜயகாந்த் திரைக்கு வந்த ஆரம்ப காலகட்டத்தில் அவர் நடித்த செந்தூரப்பாண்டி', 'ராஜதுரை', 'ராஜநடை' என உள்ளிட்ட படங்களை விஜயகாந்தை வைத்து இயக்கி எஸ்.ஏ. சந்திரசேகர் ஹிட் கொடுத்தவர். விஜயகாந்த் மறைவுக்கு முதல் ஆளாக வந்த கவுண்டமணி தனது அஞ்சலியை செலுத்தினார். தொடர்ந்து நேரில் வரமுடியாத காரணத்தால் சரத்குமார், விஷால் உள்ளிட்ட திரை பிரபலங்களும் வீடியோ பதிவு மூலம் மறைந்த விஜயகாந்திற்கு இரங்கல் பதிவை தெரிவித்து வருகின்றனர். 


மேலும் படிக்க: Vijayakanth LIVE Update: சொர்க்கத்தில் சொக்கத் தங்கம்; வேதனையில் திரையுலகம் - தவிக்கும் தமிழக மக்கள்!


Vijayakanth Profile: அள்ளி அள்ளி கொடுத்து சிவந்த கைகள்.. கேப்டன் விஜயகாந்த் வாழ்க்கை தொடங்கிய இடம் தெரியுமா?