Actor Ajith: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மறைவுக்கு நடிகர் அஜித் குறுஞ்செய்தி மூலம் இரங்கல் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் நிலைகுலைய செய்துள்ளது. அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி யாராலும் வெறுக்க மற்றும் மறக்கவே முடியாதவராக திகழ்ந்தார் விஜயகாந்த். அப்படிப்பட்ட நபரின் மரணம் அனைவரையும் நீங்கா துயரில் ஆழ்த்தியுள்ளது. சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடலுக்கு ஏராளமான அரசியல் மற்றும் திரைப் பிரபலங்கள், பொதுமக்கள், தேமுதிக தொண்டர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

 

நேற்றிரவு விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். இன்று காலை நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், குஷ்பு, விஜய் ஆண்டனி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் என பலரும் அஞ்சலி செலுத்தினர். இந்த சூழலில் நடிகர் அஜித் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில், விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுக்கு தொலைபேசி வழியே குறுஞ்செய்தி அனுப்பிய அஜித், குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அஜித் அஜர்பைஜானில் விடாமுயற்சி படப்பிடிப்பில் இருப்பதால், அவரால் விஜயகாந்திற்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை.

 

இதேபோல் நடிகர் சூர்யா வெளிநாட்டில் இருப்பதால் வீடியோ பதிவு மூலம் விஜயகாந்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் விஷால் “இந்தத் தருணத்தில் நான் உடனில்லை, என்னை மன்னிச்சிருங்க அண்ணா” என்று கண்ணீருடன் வீடியோ பதிவு வெளியிட்டிருந்தார். இதேபோல், விஜயகாந்தின் திரை வாழ்க்கையின் முக்கியமான நபராக விளங்கிய எஸ்.ஏ. சந்திரசேகர், துபாயில் இருந்தபடி தனது வீடியோ பதிவை வெளியிட்டு இரங்கல் தெரிவித்தார்.