மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பற்றிய நினைவுகளை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வரும் நிலையில் அதில் ஒரு வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. 


நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் நிலைகுலைய செய்துள்ளது. அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி யாராலும் வெறுக்க மற்றும் மறக்கவே முடியாதவராக திகழ்ந்தார் விஜயகாந்த். அப்படிப்பட்ட நபரின் மரணம் அனைவரையும் நீங்கா துயரில்  ஆழ்த்தியுள்ளது. சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு ஏராளமான அரசியல் மற்றும் திரை பிரபலங்கள், பொதுமக்கள், தேமுதிக தொண்டர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 


இப்படியான நிலையில், நடிகர் பிரபு தனது குடும்பத்தினருடன் வந்து நேரில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.  தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர்,  “எங்க அப்பா  சிவாஜி இறந்தப்ப நான் ஊர்ல இல்லை. அன்றைக்கு அவரோட இறுதி ஊர்வலத்துல நான் இருந்து என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் விஜயகாந்த் தான் முன்னாடி நின்று செய்தார். அப்பாவின் இறுதி ஊர்வலம் எல்லாம் முடிந்து என்னை திரும்பவும் வீட்டில் வந்து அம்மாவிடம் ஒப்படைத்து விட்டு போனார்.அவரும் எங்க குடும்பத்துல சிவாஜிக்கு  ஒரு பிள்ளை தான்” என நெகிழ்ச்சியாக பேசி சென்றார். 






இந்நிலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இறுதி ஊர்வல வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2001 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் தேதி சிவாஜி இறந்தார். அந்த காலக்கட்டத்தில் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தார் விஜயகாந்த். சிவாஜியின் இறுதி ஊர்வலம் புறப்படும்போது வாகனத்தை சுற்றி ஏராளமான ரசிகர்கள் கூடி வழிவிட மறுத்தனர். காவல்துறையும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.


உடனடியாக வேட்டியை மடித்து கட்டி விட்டு கூட்டத்துக்குள் புகுந்த விஜயகாந்த் தோளில் கிடந்த துண்டை எடுத்து அங்கு கூடியிருந்த கூட்டத்தை விரட்டினார். கடைசி வரை இறுதிச்சடங்கில் இருந்தார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 




மேலும் படிக்க: Vijayakanth LIVE Update: விஜயகாந்தை காண தீவுத்திடலில் குவியும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - பிரபலங்கள் அஞ்சலி